முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதன்மையானது திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். மலைமீது ஆண்டிக்கோலத்தில் நிற்கும் மூலவர் சிலை, போகரால் நவபாஷாணம் கொண்டு உருவாக்கப்பட்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

இந்நிலையில், பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் இதுவாகும்.

புவிசார் குறியீடு சான்று, ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்தன்மையுடன் பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் பொருள்களுக்கும்,  அவ்வாறு தயாரிக்கப்படும் பொருள்களின் தரத்தைப் பாதுகாப்பதற்கும் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் விளையும் மலைப் பூண்டுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு சான்று வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகரி தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 29 தாக இணைந்துள்ளது பழனி பஞ்சாமிர்தம். முதன்முறையாக தமிழக கோயில்களில் வழங்கப்படும் பிரசாதத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ள பெருமையை பழனி முருகன் கோவிலுக்கு கிடைத்துள்ளது. 

வாழைப்பழம், வெல்லம், பேரீச்சம் பழம் பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தம் தனிருசி கொண்டது. உலக அளிவில் பிரபலமான ஒன்றாகும். தனித்துவம் வாய்ந்த பழனி பஞ்சாமிர்தம் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பஞ்சாமிர்தத்தை சாப்பிடுவதன் மூலம் நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். 

பஞ்சாமிர்தம் திரவ நிலையில் இருந்தாலும் இதில் ஒரு சொட்டு நீரும் கலப்பதில்லை. பராமரிப்பதற்காக எந்த ஒரு கூடுதல் செயற்கைப் பொருளையும் இதில் சேர்ப்பதில்லை. இத்தனை சிறப்பு மிக்க பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கும்படி கோரி, பழனி கோயிலில் நிர்வாகம் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. அதன்படி பழனி பஞ்சாமிர்தத்திற்கு தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here