பழநியில் தைப்பூச தேரோட்டம்: முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

This is the most important and famous festivals celebrated at Palani. Lasting for a timespan of 10 days, this festival is commenced by the flag hoisting done at the Perianayaki amman temple.

0
349

தைப்பூசத் திருநாள் இன்று(சனிக்கிழமை) தமிழகமெங்கும்  விமர்சையாகக்  கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

பழநியில் இன்று(சனிக்கிழமை) தைப்பூச தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு, பாதுகாப்பு பணிகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் ஈடுபட்டுள்ளனர். தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் இன்று இரவு நடைபெறுகிறது.

பழநி முருகன் கோவில்  பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கிறது. பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற அலகு குத்தியும், காவடி சுமந்தும், பறவைக்காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். மேலும்காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் காவடியாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், தேவராட்டம் போன்றவை நடைபெற்றுவருகின்றன.  பெண்கள் முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து வந்தும், கும்மியடித்தும் வழிபாடு நடத்தினர்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம்.

இந்தாண்டு தைப்பூச விழா கடந்த 2 ஆம்தேதி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. விழா நாட்களில் சுவாமி தினமும் காலையில் தந்தப் பல்லக்கிலும், இரவில் ஆட்டுக்கிடா, காமதேனு, யானை, தங்கக்குதிரை, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. சிம்ம லக்கினத்தில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கவுள்ளது. தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு சுவாமி வெள்ளித்தேரில் ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

பல்வேறு அமைப்பினர் சார்பில் பாதையாத்திரையாக வரும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், பிஸ்கட், பழங்கள், பால் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

தேரோட்ட விழாவில் சுமார் 6 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நெரிசலை குறைக்க பழநி பஸ் நிலையம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. தற்காலிக பஸ் நிலையம் ஒன்று நகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டு, கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பாதுகாப்புப் பணிகளில் டி.ஐ.ஜி தலைமையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், சீருடை போலீசாருடன், மப்டி போலீசாரும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here