தமிழ்நாட்டில் எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு பழனி முருகன் கோவிலுக்கு உண்டு. அது பழனிக்கு படையெடுத்து வரும் பக்தர்களின் கட்டுக்கடங்காத பாத யாத்திரை கூட்டம்.

தைப்பூசம் சீசனில் பழனி நோக்கி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நடந்தே சென்று முருகனை வழிபடுகிறார்கள். பெயர் தான் தைப்பூசமே தவிர… மார்கழி தொடக்கத்தில் இருந்தே பக்தர்கள் சாரை, சாரையாக பழனிக்கு வரத் தொடங்கி விடுகிறார் கள்.

உலகம் புகழும் இந்த பாத யாத்திரை பழக்கத்தை ஏற்படுத்தியவர்கள் நகரத்தார்கள் ஆகும். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நகரத்தார்கள் பழனி கோவிலுக்கு நடந்து வருவதை சில நடைமுறைகளுக்காக கடைபிடித்தனர்.

பாதயாத்திரை வரும்போது ஒவ்வொரு குடும்பத்தினரும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனிப்பார்கள். அதை வைத்து அந்த குடும்பத்தினருடன் திருமண சம்பந்தம் பேசி முடிப்பார்கள். நாளடைவில் இந்த பாதயாத்திரை வழக்கம் தமிழர்கள் அனைவரிடமும் பரவி விட்டது. பாத யாத்திரையின் போது காவடி ஏந்தி செல்வதும், அலகு குத்தி தேர் இழுத்து செல்வதும் முக்கிய அம்சம்.

முருகனிடம் இடும்பன் வரம் கேட்ட போது, “நான் மலைகளை காவடி ஏந்தியது போல காவடி ஏந்தி வரும் பாத யாத்திரை பக்தர்களின் வேண்டுதல்களை, நீ நிறைவேற்ற வேண்டும்” என்றான். அதை ஏற்று காவடி ஏந்தி பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் வேண்டுதல்களை பழனி முருகன் நிறைவேற்றுகிறார்.

நோய் தீர வேண்டும். நல்ல வரன் கிடைக்க வேண்டும். வியாபாரம் செழிக்க வேண்டும். குடும்பத்தில் பிரச்சினை தீர வேண்டும் என்று லட்சக்கணக்கானவர்கள் ஆண்டு தோறும் பழனி முருகனை நாடி, நடந்தே வருகிறார்கள். சமீப காலமாக சென்னையில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பழனிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது.

தைப்பூசம் சீசனில் தங்கள் பூர்வீக ஊரில் இருந்து பழனிக்கு நடந்து செல்ல வேண்டும் என்பதற்காகவே அமெரிக்கா, சிங்கப்பூர் உள்பட பல வெளிநாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் வருவதை தமிழர்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர். இந்த சிறப்பால் அறுபடை வீடுகளில் பழனி திருத்தலம் தனித்துவம் பெற்றுத் திகழ்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக திருச்செந்தூர் முருகன் தலத்துக்கும் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவில்பட்டி, விளாத்திக்குளம், அருப்புக்கோட்டை, நாகர்கோவில், திசையன்விளை, ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்று முருகனை வழிபடுகிறார்கள்.

courtesy: maalaimalar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here