பருவநிலை கொள்கை: நரேந்திர மோடிக்கு கிரெட்டா டூன்பெர்க் விடுத்த எச்சரிக்கை

0
562

ஹிருதயேஷ் ஜோஷிபத்திரிகையாளர்

இந்த வாரம் அமெரிக்காவில் இரண்டு பிரபலங்கள் மீது அனைவரின் கவனமும் இருந்தது. ஒருவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. மற்றொருவர் ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா டூன்பெர்க்.

ஒருவர் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துக் கொண்டிருக்கும் தலைவர். மற்றொருவர் பூமியின் அழிவு பற்றிய ஆபத்துகளால் ஈர்க்கப்பட்டு, உலகெங்கும் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் மற்றும் இயக்கங்களின் முகமாக மாறி இருப்பவர். இப்போது கடந்த வாரத்தின் நிகழ்வுகளை திரும்ப பார்ப்போம்.

50 கிலோவாட் திறன் கொண்ட காந்தி சூரியசக்தி பூங்காவை நியூயார்க் நகரில் நரேந்திர மோதி தொடங்கி வைத்த நிலையில், “பூமியை ஆபத்தின் விளிம்பில் வைத்திருப்பதற்குக் காரணமான” உலகத் தலைவர்களுக்கு துன்பெர்க் கண்டனம் தெரிவித்துள்ளார். “உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

1,75,000 மெகாவாட் திறனில் இருந்து 4,50,000 மெகாவாட் திறனுக்கு சூரியசக்தி மின் உற்பத்தியை அதிகரித்திருப்பதாக மோடி குறிப்பிட்ட நிலையில், 5 மிகப் பெரிய நாடுகள் குழந்தைகளின் உரிமைகளை மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையில் கிரேட்டா குற்றஞ்சாட்டியுள்ளார்.

நியூயார்க் பருவநிலை மாற்ற மாநாட்டுக்கு இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டெரஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் டிரம்ப்புடன் நரேந்திர மோடிக்கு உள்ள நெருக்கம் சூழ்நிலைக்கு உகந்ததாக இல்லை.

இந்திய பிரதமருடன் சேர்ந்து துன்பெர்க் குறிப்பிடப்பட்டுள்ளார். ஏனெனில் ஒருபுறம் வெளிப்படையாகப் பேசும் ஐரோப்பிய மாணவரான அவர் உலகெங்கும் பருவநிலை மாற்ற செயல்பாடு குறித்து உலகத் தலைவர்களை நோக்கி கேள்வி எழுப்பி வருகிறார். மறுபுறம் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போரில் இந்தியாவை உலக அளவிலான கதாநாயகனாக ஆக்குவதற்கான வாய்ப்புகளை நரேந்திர மோடி தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்.

இருந்தாலும் டூன்பெர்க்கின் லட்சியத்தைவிட, மோடியின் லட்சியத்தை எட்டுவது மிகவும் கடினமானது. பதாகைகள், முழக்கங்கள், சொற்பொழிவுகள் மற்றும் புகைப்படங்களால் மட்டும் அதை எட்டிவிட முடியாது.

பருவநிலை மாற்றம்: உலக அரங்கில் மோடியின் தோற்றம்

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, சுற்றுச்சூழல் விவகாரங்களில் உலக அரங்கில் தம்மை முன்னோடியாக நிலைநிறுத்திக் கொள்வதற்கு முயற்சி செய்து வருகிறார். பருவநிலை மாற்றத்துக்கு எதிராக அவருடைய வெற்றிகளை அவருடைய கட்சியினரும், அரசின் அமைச்சர்களும் பாராட்டி வருகிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் என்ன?

2014ல் பிரதமராகப் பொறுப்பேற்றதும் மோடி பெருநோக்கம் கொண்ட சில நடவடிக்கைகளை எடுத்தார். உதாரணமாக 2022 ஆம் ஆண்டுக்குள், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத ஆதாரங்களைக் கொண்டு 1,75,000 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தித் திறனை எட்டுவது என்று இலக்கு நிர்ணயித்தார். அது பெரிய முன்னேற்றமாக இருக்கும். இப்போது இந்தியாவுக்கான அந்த இலக்கை 4,50,000 மெகாவாட்டாக இரட்டிப்பாக்குவதாக பிரதமர் அறிவித்துள்ளார். இந்த இலக்கு எப்போது எட்டப்படும் என்று அவர் தெரிவிக்கவில்லை.

அதேபோல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாரிஸ் ஒப்பந்தம் 2015ல் உருவானபோது, இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச சூரியசக்தி மின் உற்பத்தி கூட்டணியை உருவாக்குவதாக இந்தியாவும் பிரான்சும் அறிவித்தன.

தலைமைத்துவம் மற்றும் சுத்தமான காற்று என்ற வகையில் மோடி அரசாங்கத்தின் முக்கியமான நடவடிக்கையாக இது கருதப்படும். இந்த அமைப்பில் இப்போது 100க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சூரியசக்தி மின் உற்பத்தியை அதிகப்படுத்துவதும், உலகெங்கும் குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கச் செய்வதும் இதன் நோக்கமாக உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு அளிக்கப்பட்ட `சாம்பியன்ஸ் ஆஃப் எர்த்’ விருதிலும் இந்த அமைப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில், உஜாலா போன்ற திட்டங்கள் காரணமாக எல்.இ.டி. மின் விளக்குகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

புதிய கொள்கைகளுக்கு மோடி வழி வகுத்துள்ளாரா?

இந்தியாவின் சாதனைகளுக்காக நரேந்திர மோடிக்கும், அவருடைய அரசுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கும் நிலையில், பருவநிலைக் கொள்கைகள் குறித்த விஷயத்தில் சர்வதேச அளவில் இந்தியாவின் பருவநிலை கொள்கைகளில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள், ஜெய்ராம் ரமேஷ் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமானது.

2009ல் கோபன்ஹேகனில் நடைபெற்ற மாநாட்டில், வழக்கத்தில் இருந்து விலகி, கார்பன் உற்பத்தியைக் குறைக்க தன்விருப்பமாக இந்தியா நடவடிக்கைகள் எடுக்கும் என்றும், இதுகுறித்து பணக்கார நாடுகள் முன்முயற்சி எடுக்கும் வரை காத்திருக்கப் போவதில்லை என்றும் இந்தியா அறிவித்தது.

தன்னுடைய வளர்ச்சிக்கான உரிமைகளுக்காகப் போராடுவது என்று முதன்முறையாக இந்தியா முடிவு செய்தது. அதேசமயத்தில், புவிவெப்பம் பிரச்சினைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கிடக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கப் போவதில்லை என்றும் கூறியது.

கொள்கை அளவில் முக்கிய மாற்றம் ஏற்பட்ட அந்த நிலையில், அப்போதைய பாஜக அதை கடுமையாக விமர்சனம் செய்தது. வளர்ச்சி அடைந்த நாடுகளின் அழுத்தத்திற்கு மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பணிந்துவிட்டது என்று குற்றஞ்சாட்டியது.

ஆனால், ஒரு முன்முயற்சி எடுப்பதற்காக மற்ற நாடுகளுக்காக எப்போதும் இந்தியா காத்திருக்கத் தேவையில்லை என்றும், தனிநபர் கார்பன் உற்பத்தி குறைகிறது என்ற காரணத்தைக் கூறி ஒளிந்து கொள்ள விரும்பவில்லை என்றும் ஜெய்ராம் ரமேஷ் வாதங்களை முன்வைத்தார்.

கூட்டணிகள் உருவாக்குதல் முதல் தூய்மையான எரிசக்தி உற்பத்திக்கான நடவடிக்கைகள் வரை – அனைத்திற்கும் அந்த முடிவுகளைத் தொடர்ந்து தான் அடிக்கல் நாட்டப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. தென்னாப்பிரிக்கா, பிரேசில் மற்றும் சீனாவுடன் சேர்ந்து BASIC குழு நாடுகள் என்ற முக்கியமான கூட்டமைப்பை இந்தியா உருவாக்கியது. பருவநிலை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகளில், வளரும் நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் வகையிலான நிலைப்பாட்டை எடுக்க உதவும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, முக்கியமான விஷயங்களில் இந்தியாவும் உறுப்பினராக உள்ள அதுபோன்ற குழுக்களுடன் பேச்சு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நாட்டில் கார்பன் உற்பத்தியைக் குறைப்பதில் எரிசக்தி செயல்திறன் அமைப்புக்கு (பி.இ.இ.) முக்கிய பங்கு உள்ளது. எல்.இ.டி.கள், குளிர்பதனப் பெட்டிகள் மற்றும் ஏர்கண்டிஷன் கருவிகள் போன்ற மின்சாதனங்களுக்கு கார்பன் உற்பத்தி வரையறைகளை இந்த அமைப்பு நிர்ணயிக்கும். இந்த அமைப்பு 2002 ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டுவிட்டது.

இந்த அமைப்பின் முன்னாள் தலைவரும், பருவநிலை மாற்றத்துக்கான பிரதமர் ஆலோசனைக் குழு உறுப்பினருமான டாக்டர் அஜய் மாத்தூர், “குளிர்பதனப் பெட்டிகள் மற்றும் ஏ.சி.களுக்கான கார்பன் உற்பத்தி வரையறைகள் 2007ல் நிர்ணயிக்கப்பட்டு, உற்பத்தியாளர்களுக்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது. அந்தத் தகுதி வரையறைகள் 2009ல் இருந்து அமலுக்கு வந்ததாகக் கருதப்படுகிறது. அதேபோல மின்சக்தி சிக்கன கட்டடத்துக்கான விதிகள் 2007ல் அறிமுகம் செய்யப்பட்டது. 2009ல் அது தீவிரமாக அமலாக்கப்பட்டது” என்று பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

முரண்பாடான நடவடிக்கைகள்

சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின்போது, நாட்டின் தூய்மை மின் உற்பத்திக்கு 4,50,000 மெகாவாட் இலக்கை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபோது, முன்னணி கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளையும் சந்தித்தார். இந்திய மற்றும் அமெரிக்க எரிவாயு நிறுவனங்களுக்கு இடையில் 250 கோடி டாலர்கள் மதிப்புக்கான ஒப்பந்தங்கள், மோடி முன்னிலையில் கையெழுத்தாயின.

அடுத்த 3 ஆண்டுகளில் அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் இந்தியாவுடன் 10,000 கோடி டாலர்கள் வரையிலான மதிப்புக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் என்று நம்பப்படுகிறது.

`வரக்கூடிய காலத்தில் எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி ஆதாரங்களால் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு சுமையாக இருக்கும். அமெரிக்க அரசை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக இந்த மின் நிலையங்கள் மற்றும் குழாய்கள் அமைப்பதற்காக மக்கள் பணத்தை அரசு கொள்ளையடிக்கிறதா” எனஅறு பருவநிலை மாற்ற நிபுணர் ஹர்ஜித் சிங் கேள்வி எழுப்புகிறார்.

உள்நாட்டுக் கொள்கைகள் பற்றிய கேள்விகள்

300 மில்லியன் டன்கள் அளவுக்கு கரியமில வாயுவை கிரகித்துக் கொள்ளும் வகையில் வனங்களை உருவாக்கப் போவதாக 2015 பாரிஸ் ஒப்பந்தத்தில் இந்தியா வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால் மோடி அரசின் புதிய வனக் கொள்கை, வனங்களுக்கு எதிரானதாக உள்ளது.

உத்தேசிக்கப்பட்டுள்ள வனக் கொள்கை – கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வரைவுக் கொள்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை – அடர்வு குறைவாக உள்ள (அழிந்துவிட்ட) வனங்களை தனியார் நிறுவனங்களிடம் கொடுத்துவிடலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதிக லாபம் தரும் மூங்கில் வனங்களைத் தான் தனியார் நிறுவனங்கள் உருவாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

`கடுமையான மேற்பார்வை இல்லாமல் இதுபோன்ற நடவடிக்கை எடுப்பது சரியானதாக இருக்காது. வனங்களைச் சார்ந்துள்ள மலைவாழ் மக்களுக்கு இது நல்லதாக இருக்காது. புவி வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கும் பல்லுயிர்ப் பெருக்க சூழல் மிகுந்த வனங்களை உருவாக்க இது உதவியாக இருக்காது” என்று டெல்லியை சேர்ந்த எரிசக்தி மற்றும் ஆதாரவள இன்ஸ்டிடியூட்டில் வன விவகாரங்களுக்கான நிபுணராக உள்ள மூத்த கல்வியாளர் டாக்டர் யோகேஷ் கோகலே கூறுகிறார்.

அதேபோல, வனப் பரப்பு குறித்து மோடி அரசாங்கம் கடந்த சில ஆண்டுகளாக வெளியிட்ட புள்ளி விவரங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. கடந்த ஆண்டு (2018) வெளியிடப்பட்ட வன அறிக்கை நிலை குறித்த அறிக்கையில், இந்தியாவில் வனப் பரப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பண்ணைத் தோட்ட வளாகங்களையும் வனப் பரப்பு என்ற வரம்பில் அரசு சேர்த்திருந்தது பிறகு தெரிய வந்தது. பண்ணைத் தோட்டம் என்பது வெறுமனே “மரங்கள் உருவாக்கப்பட்ட பகுதி” என்பதாகத் தான் இருக்கும். ஆனால் வனம் என்பது பல்லுயிர்ப் பெருக்கம் மிகுந்த சுற்றுச்சூழல் கொண்டதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் வனப் பரப்பு அதிகரித்துள்ளதாகக் கூறுவது குறித்து ஐ.நா. நிபுணர்களும் சந்தேகம் எழுப்புகின்றனர்.

நெருக்கடியில் சிக்கியுள்ளது இந்தியா

கடல் நீர் மற்றும் தாழ்வெப்ப மண்டலம் குறித்து ஐ.பி.சி.சி. சமீபத்தில் வெளியிட்ட சிறப்பு அறிக்கையில், பூமியின் வெப்ப நிலை உயர்வு 2 டிகிரி அளவுக்குள் கட்டுப்படுத்தப் படாவிட்டால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடலின் நீர்மட்டம் 1.1 மீட்டர் வரை அதிகரிக்கும் என எச்சரிக்கப் பட்டுள்ளது.

கடலோரப் பகுதி – இந்தியாவின் பரந்த கடலோரப் பகுதிகளைச் சார்ந்து பல லட்சம் பேர் வாழ்கின்றனர். பருவநிலை மாற்றத்தால் இந்த மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்

இந்திய கடற்கரையின் அதிக நீளத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால், 30 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் எதிர்காலம் அதைச் சார்ந்ததாக இருக்கும் என்ற உண்மை தெரிய வருகிறது. அது பேரழிவாக இருக்கும். அதுபோன்ற சூழ்நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளில் அரசு தெளிவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும்.

இறுதியாக, பருவநிலை மாற்ற நெருக்கடி உள்ள சூழ்நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிரேட்டா துன்பெர்க் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு யோசனையை முன்வைத்துள்ளார். பேசிக் கொண்டிருப்பதற்கான காலம் கடந்துவிட்டது என்றும், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

“இதை செய்ய நீங்கள் தவறிவிட்டால், வரலாற்றில் நீங்கள் வில்லனாகப் பார்க்கப்படுவீர்கள். நீங்கள் அதை விரும்ப மாட்டீர்கள்” என்று பிரதமருக்கு கிரேட்டா டூன்பெர்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

(ஹிருதயேஷ் ஜோஷி ஒரு பத்திரிகையாளர். சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் எரிசக்தித் துறைகள் பற்றி அவர் கட்டுரைகள் எழுதி வருகிறார்.)

http://bbc.com


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here