பயிர் இல்லேன்னா எங்க உயிர் இல்ல: செத்து மடியும் விவசாயிகள்

நீருமில்லை; காசுமில்லை; உயிர் விடும் விவசாயிகள்.

0
297

டிசம்பர் 31. வருடத்தின் கடைசி நாள். மக்கள் அனைவரும் பிறக்கப்போகும் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக, உற்சாகமாக ஆயத்தமாகி கொண்டிருந்தனர். அதே வேளையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 35க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கண்ணீருடன், தங்கள் வீட்டின் ஆணிவேரை இழந்துவிட்டோம் என்ற வேதனையுடனே புத்தாண்டை எதிர்கொண்டனர். ஆம்.
வயல்களில் போதிய அளவு நீர் இல்லாத காரணத்தால் பயிர்கள் கருகி இருப்பதை கண்டு, அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு, வயல்வெளியிலே கருகிய பயிர்களுடன் கருகிய பயிராய், சுருண்டு இறந்துபோன விவசாயிகள்தான் அனைவரும். 30ஆம் தேதி 5 விவசாயிகள், 31ஆம் தேதி 11 விவசாயிகள் என நாகப்பட்டினம் மாவட்டத்தில் அந்த இரண்டு நாட்களில் மட்டும் இறந்து போன விவசாயிகளின் எண்ணிக்கை இது. இந்த எண்ணிக்கை இன்றைய நிலையில், நாகப்பட்டினத்தில் மட்டும் 40க்கும் மேலாகவும், தமிழகம் முழுதும் சுமார் 90 எனவும் அதிகரித்துள்ளது.

யார் இவர்கள்?

இயற்கை தந்த வளமான நீரையும், நிலத்தையும் மட்டுமே நம்பி, இன்றுவரை யாரிடமும் கைகட்டாமல் நிலத்திலும் நீரிலும் மட்டுமே தங்கள் உழைப்பை இடும் மீனவர்களும் விவசாயிகளும் நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறார்கள்.
கட்டாந்தரையாக இருக்கும் ஒரு நிலத்தைப் பண்படுத்தி, உழுது, அந்த மண்ணிற்கு என்ன பயிரிட்டால் மண்ணும் நன்றாக இருக்கும், பயிரும் நன்றாக வளரும் எனப் பார்த்து, அதை விதைத்து, அதற்கு ஏற்றாற்போல கால்வாய் வெட்டி நீர் அளித்து, அந்தப் பயிர் நல்ல முறையில் வளரும் வரை அதைப் பராமரித்து, வேறு ஏதேனும் செடிகள் இடையில் வளராமல் களை எடுத்து, அதைச் சிறந்த முறையில் அறுவடை செய்யும்போது, ஒரு விவசாயிக்கு மனநிறைவு கிடைக்கும். ஒரு தாய்க்குத் தலைப் பிரசவம் நல்ல முறையில் நடந்து தன் குழந்தையைக் கையில் ஏந்தும்போது கிடைக்கும் மன நிறைவுக்குச் சமமான சந்தோஷம் அது.

ஒரு தாய்க்கு ஒரு முறைதான் தலைப் பிரசவம் நடக்கும். ஆனால், ஒரு விவசாயிக்கு ஒவ்வொரு அறுவடை என்பதும் தலைப் பிரசவம் போலத்தான். ஒரு தாய்க்கு எப்படித் தன் குழந்தை கருவிலே சாவதைத் தாங்கிக்கொள்ள முடியாதோ, அதுபோலத்தான் ஒரு விவசாயிக்கும் தான் பாடுபட்டு வளர்த்த பயிர், நீரின்றிக் கருகுவதை பார்த்துத் தாங்கிக்கொள்ள முடியாது. அதனால்தான், அவர்கள் பெரும்பாலானோர் வயல்வெளியிலே அதிர்ச்சி ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளனர். இறந்த விவசாயிகள் அனைவரும் இதன் காரணமாக மட்டும்தான் இறந்தனரா?

இப்படி இறந்துபோன விவசாயிகளின் குடும்பங்களைச் சந்திப்பதற்காக நாகப்பட்டினம் சென்றேன். தஞ்சாவூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் நன்றாக நீர் ஓடிய ஆறுகள், ஓடைகள், கால்வாய்கள் போதிய அளவு நீர் இல்லாமல் வறண்டு வெறும் மணலாகவும், கோரைப்புற்களாகவும் மட்டுமே காட்சி அளித்தன. அன்றைய தினம், இறந்த விவசாயிகளின் சார்பாகவும், அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தனர். அதற்கு முந்தைய தினம் கம்யூனிஸ்ட் சார்பாக விவசாயிகளின் தொடர் மரணத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போதிய அளவு நீர் இல்லாமல் பயிர்கள் கருகி இருப்பதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த விவசாயி கண்ணன் என்பவர் வயல்வெளியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் என்ற செய்தியை தொலைக்காட்சி மூலம் அறிந்தேன். உடனடியாக, கண்ணனின் குடும்பத்தைச் சந்திப்பதற்காக அவரது சொந்த கிராமமான திருப்புகளூர் சென்றேன். நாகப்பட்டினத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணம். சென்ற ஆண்டுவரை நன்றாக நீர் ஓடிய அக்கரைக் கால்வாய், இந்த ஆண்டு நீர் இல்லாமல், வறண்டு மக்கள் துணிகளைக் காயப்போடும் பகுதியாக மாறி இருந்தது.. சென்ற ஆண்டு பெய்த மழையினால் ஓரளவு பசுமையைத் தன்னிடம் கொண்டிருந்த அந்தக் கிராமத்தில், சாலையின் ஓரத்தில் சாமியானா பந்தல் போடப்பட்டு, இறந்த உடலைப் பதப்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி மட்டும் இருந்தது. பெரிய அளவில் சத்தமோ, கூட்டமோ இல்லை. அங்கே இருந்தவரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, கண்ணன் பற்றி பேசத் துவங்கினேன். அவரும், சற்று முன்னர்தான் அவரது உடலை அடக்கம் செய்ததாக கூறினார். அவர் கண்ணனின் உறவினர் ரஞ்சிதம் என்பவரை அறிமுகம் செய்துவைத்தார். அவர் கண்ணனின் மரணம் பற்றி என்னிடம் பேசத் துவங்கினார்.

“கண்ணனோட சின்னம்மாதான் நான். கண்ணனுக்கு ஒண்ணும் சாகிற வயசெல்லாம் இல்ல. வெறும் 42 வயசுதான். அவனுக்குக் கூட பொறந்தவங்க ரெண்டு பசங்க. ஒரு பொண்ணு. எல்லாரும் குடும்பம்னு ஆனதால, தனித்தனியா போய்ட்டாங்க. கண்ணனுக்கு மொத்தம் ரெண்டு தாரம். மூத்த தாரம் உடம்பு சரி இல்லாம, சில வருஷத்திற்கு முன்னால இறந்துடுச்சு. அதனால, அவனுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வச்சோம். அந்தப் பொண்ணுக்கும் நெஞ்சுல ஏதோ பிரச்சனைனு 6 மாசத்துக்கு முன்னாலதான் இறந்துடுச்சு. மூத்த பய சுரேஷ்க்கு 17 வயசுதான் ஆகுது. சின்னப் பய பிரபுக்கு 14 வயசுதான் ஆகுது. அந்தப் புள்ளை சிவசங்கரிக்கு 5 வயசுதான் ஆகுது. முத சம்சாரம் இறந்த உடனே, சின்னப் பயல அவங்க சின்னம்மா வீட்ல தங்கிப் படிக்க வச்சுட்டான். இந்த ரெண்டு குழந்தைங்க மட்டும்தான் அவன்கூட இருக்குதுங்க. அதுமட்டுமில்லாம அவர்கூட அவர் அப்பா வடிவேலுவும் இருக்காரு. பாவம் வயசானவரு, 75 வயசு இருக்கும்.

கண்ணனுக்கு விவசாயம் மட்டும்தான் தெரியும். காட்டுல களை எடுக்குறது, வேற ஏதாவது விவசாயக் கூலின்னு வேலைன்னு பாத்துக்கிட்டு இருந்தான். அவன் பங்குல நெல்லுதான் போடுவான். நல்ல மழை பெஞ்சுதுன்னா உளுந்து, பயறு போடுவான். எப்ப அவன் ரெண்டாவது சம்சாரம் இறந்துச்சோ, அதில இருந்தே அவன் உடைஞ்சு போய்ட்டான். இந்தப் புள்ளங்களுக்காகத்தான் வாழ்ந்து வந்தான். போன தடவ ஓரளவு மழை இருந்ததால, இந்தத் தடவையும் நல்ல மழை பெய்யும்னு நம்பி 40,50 ஆயிரம் வரை கடன் வாங்கி, அவன் பங்குல நெல்லு போட்ருந்தான். இந்தத் தடவ மழையும் இல்ல. இந்தப் பக்கம் கிணத்துப் பாசனம் அந்த அளவுக்கு இல்லாததால, நாங்க எல்லாம் மழையை நம்பித்தான் இருக்கோம். சரி மழைதான் இல்ல. போர் போடலாம்னு பாத்தா அதுவும் உப்புத் தண்ணி. அத விட்டுட்டு மொத்த நிலத்தையும் நாசம் பண்ண விரும்பல.

எப்ப இந்த 500, 1000 செல்லாதுன்னு சொன்னாங்களா. அப்பலயிருந்து ரொம்ப சிரமமாகிடுச்சு. கடன்கூட யார்ட்டயும் வாங்க முடியல. பயிருங்களுக்கு மருந்து தெளிக்ககூட சுத்தமா பணம் வாங்க முடில. ஏற்கனவே வாங்கின கடனை எப்படித் திருப்பி அடைக்குறதுனு வேற தெரியாம தவிச்சு போய்ட்டான். அன்னைக்கு எப்பவும் மாதிரிதான் பங்குக்குப் போனான். பயிர் எல்லாம் காஞ்சு கருகி போய்ருக்கத பாத்தவன், வீட்டுக்குத் திரும்பி பொணமாத்தான் வந்தான். இந்தா இந்தப் பச்ச புள்ளங்கள வச்சுக்கிட்டு இந்த பெரிய மனுஷன் என்ன பண்ணுவாரு .நாங்களும் இன்னும் கொஞ்ச நாள்ல ஊருக்குப் போகிடுவோம். இருக்குறது ஒரே ஒரே வீடுதான். அதுவும் ஓலை வீடுதான். எப்ப கடன்காரன் வந்து இந்த வீட்டையும் கேப்பானு தெரியல. அதனால அரசாங்கம்தான் ஏதாவது பண்ணணும். இதை நாங்க ஒண்ணும் எங்களுக்காக கேக்கல. இந்தப் புள்ளைங்க எதிர்காலத்துக்காகத்தான்..அதுவும் ஏதோ படிப்புச் செலவுக்கு ஆகும்ணுதான் கேக்குறோம்.” என்று கூறிவிட்டு தன் கண்களில் வந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு,தொடர்ந்தார்.

இதையும் படியுங்கள்: இந்த மாதிரி பஞ்சத்த நாங்க பாத்ததே இல்லை

அங்கே ஒரு 5 வயது சிறுகுழந்தை..ஒல்லியான தேகத்துடன்.. என்ன நடந்தது என்றுகூட தெரியாமல்.. தந்தை இறந்துவிட்டார் என்பதைக்கூட அறியாத பிஞ்சாய் அங்கும் இங்கும் தன் அண்ணன் பின்னாலே ஓடிக்கொண்டிருந்தாள். அந்தச் சிறுமியை இழுத்த ரஞ்சிதம்.. “இது என்ன பாவம் பண்ணுச்சு.. சின்ன வயசுலயே அப்பா..அம்மா..ரெண்டு பேரையும் பறிகொடுத்துடுச்சு… ஏதோ கண்ணனோட நண்பர்கள் எல்லாம் சேந்துதான் அவனை அடக்கம் பண்ணாங்க.. பெரிய பயலுக்கும் இன்னும் அவ்ளவா விவரம் தெரில..இந்தப் பிஞ்சுங்களுக்காது…அரசாங்கம் ஏதாச்சும் செய்யணும்.”
அவரை அடக்கம் செய்ய உதவிய அவரது நண்பரிடம் கேட்டபொழுது, “விவசாயம் சரியா இல்ல..வயலுக்குப் போன ஆளு..தீடீர்னு நெஞ்சுவலி வந்து இறந்துட்டாரு. பெரியவங்கட்ட பேசி அடக்கம் பண்ணிட்டோம்.. வி.ஏ.ஒ., ஆர் .ஐ., வந்து பாத்துட்டு போனாங்க.. போஸ்ட் மார்டெம் பண்ணுனா நிவாரணம் கிடைக்குறதுல ஏதும் சிக்கல் வருமான்னு கேட்டதுக்கு, அதுக்கு நாங்க உத்தரவாதம் தர முடியாதுனு சொல்லிட்டாங்க..அப்புறம் போஸ்ட் மார்டம் பண்ணாமலே அடக்கம் பண்ணிட்டோம்..” பின்னர் கண்ணன் உயிர்விட்ட அவரது நிலத்திற்கு அவரது மகன் பிரபுவுடன் சென்றேன்.

குதிகால் அளவிற்கு மட்டுமே வளர்ந்திருந்த நெற்பயிர்கள்; அதுவும் வயலின் மையப்பகுதியிலும், சில ஓரங்களிலும் மட்டுமே. குதிகால் அளவு பயிர்களும் கருகி இருந்தன. தன்னுடைய வாழ்வாதாரமே அழிந்து கருகி இருப்பதைக் கண்டால் யாருக்குத்தான் நெஞ்சுவலி வராது. அவர் மகனிடம் “நீ படித்து என்ன ஆகப்போகிறாய்?” என்றதற்கு, ”எந்த வேலைக்குப் போனாலும் விவசாயத்தையும் பார்ப்பேன்” என்ற அவனது பதில் எத்தனை அழிவுகள் வந்தாலும், விவசாயத்தைப் பார்க்கப் போகும் அடுத்த தலைமுறையினருக்காவது ஏதேனும் அரசாங்கம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தியது. பின்னர் அவர்களிடமிருந்து விடைபெற்று என் அறையை நோக்கித் திரும்பினேன்.

சில வாரங்களுக்கு முன்னர், இதேபோல பயிர் கருகி இருப்பதைக் கண்டு நிலத்திலே சுருண்டு விழுந்து இறந்துபோன விவசாயி அந்தோணிசாமி குடும்பத்தைச் சந்திக்கச் சென்றேன். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிக்கலிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது சங்கமங்கலம் கிராமம். சாலைப் பணிகள் பல மாதங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போல.. அங்கு தானாக வந்து என்னை வாகனத்தில் ஏற்றிக்கொண்ட பெரியவர் ஒருவர்… நான் செல்ல வேண்டிய இடத்திற்குப் போகும் பாதையில் என்னை இறக்கிவிட்டு, போக வேண்டிய வழியையும் சொல்லிவிட்டுச் சென்றார்.
இருபுறமும் நெல் நடவு செய்யப்பட்டு, பாதி வளர்ந்த நிலையிலிருந்த, அந்த வயல்வரப்பின் வழியிலே தெற்குவெளி மாதா கோவில் தெருவை அடைந்தேன். அந்தக் கிராமத்திலிருந்த பெரும்பாலான வீடுகளெல்லாம் கூரை வேயப்பட்டு அல்லது அந்தக் காலத்து ஓடுகள் வேயப்பட்ட நிலையிலே இருந்தன. சில வீடுகள் மட்டுமே கான்க்ரீட் வீடுகளாக இருந்தன. பின்னர், அங்குள்ள அந்தோணிசாமியின் வீட்டிற்குச் சிலரின் உதவியுடன் சென்றேன். அந்தோணிசாமி இறந்து சில வாரங்கள் ஆனதால், பல பத்திரிகையாளர்களையும், அதிகாரிகளையும் அடிக்கடி சந்தித்து வரும் அந்தோணிசாமியின் மனைவிக்கு என் வருகை ஒன்றும் புதிதாய் தெரியவில்லை. பின்னர், அவரிடம் என்னைப் பற்றிக் கூறிவிட்டு, அந்தோணிசாமியின் இறப்பு குறித்துக் கேட்டேன்.

“கடந்த சில வாரங்களுக்கு முன்னால இறந்துபோன விவசாயி அந்தோணிசாமியோட மனைவிதான் நான். என் பேரு பிலோமினா மேரி. எங்களுக்கு மொத்தம் மூணு பொண்ணுங்க. ஒரே பையன். ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. இந்தப் பக்கம் போன வருஷம் மாதிரி நல்ல மழை இல்ல. நல்ல மழை இருந்தா..நெல்லு போட்டு, உளுந்து, பயறு எல்லாம் போடுவோம். இந்த வருஷம் அது மாதிரி ஏதும் இல்ல.. நெல்லு மட்டும்தான் போட்ருந்தோம்… அவருக்கு இதுவரைக்கும் சின்னக் காய்ச்சல், தலைவலிகூட வந்தது இல்ல. நான்தான் அவர என்னைக்கும் இல்லாம அன்னைக்கு வேகமாகவே வயலுக்குப் போக சொன்னேன். திடீர்னு ஆளுங்க ஓடி வந்துட்டு..அவரு இறந்துட்டாரு அப்டினு சொன்னாங்க..எனக்கு அப்படிச் சொன்னதுமே அழுகைகூட வரல… உறைஞ்சுபோய் அப்படியே நின்னுட்டேன்..என்னால அத நம்பவே முடில..அந்த மனுஷன் எல்லா வேலையும் பாப்பாரு.. சென்னை, ஹைதராபாத், சவூதி அரேபியானு பல ஊர்ல வேலை பாத்தவரு..

இந்தப் பகுதியில இருக்க 40 குடும்பங்களுமே விவசாயத்தை நம்பித்தான் இருக்கோம். இந்த வருஷம் சரியான மழை இல்ல.. குளம், கால்வாய்ல இருந்த தண்ணியும் வத்திப் போச்சு.. இந்தப் பக்கம் உப்புத் தண்ணினால போர் போடவும் முடியாது…இந்த முறை பேங்க், மகளிர் குழுனு கடன் வாங்கி மூணு பங்கு நிலத்துல நெல்லு போட்ருந்தோம்.. மழை, தண்ணி இல்லாததால பயிருங்கல்லாம் பாதி வளந்தும், வளராமலும் இருஞ்சு..போகப் போக பங்கு எல்லாம் கருக ஆரம்பிச்சுருச்சு..அந்த மனுஷன் இதைப் பத்தியே நெனச்சு நெனச்சு சரியாய் சாப்பிடறதுகூட இல்ல. திடீர்னு நைட் பாத்தா ஆள் இருக்க மாட்டாரு…என்னனு கேட்டா பங்குக்குப் போயிருந்தேன்னு சொல்வாரு.. பங்குக்கு வர்ற தண்ணிய வேற பக்கம் யாராவது திருப்பி விட்ருவாங்களோனு பயந்துகிட்டே நைட் ஆனா போய் பாக்க போயிடுவாரு.. அந்த அளவுக்கு இந்தப்பக்கம் தண்ணி பிரச்னை… இந்த வேதனைலேயே அவர் வயல்லே நெஞ்சுவலி வந்து இறந்துட்டார். 50,000 வரை கடன் வாங்கிதா விவசாயம் பண்ணி இருந்தோம். அவர் செத்து ஒரு வாரம் கழிச்சுதான் தாசில்தார் வந்து பார்த்தார். அரசாங்கத்தில இருந்து தர வேண்டிய ஈமச்சடங்கு காசு 10,000 கூட இன்னும் தரல. ஏதோ ஸ்டாலின் வந்துதா 1,00,000 கொடுத்தாரு. அந்தப் பணமும் கெடக்கலனா எங்க நிலைமை ரொம்ப மோசமா போயிருக்கும்.

இதையும் படியுங்கள்:வந்தது பஞ்சம்; தேவை தில் நெஞ்சம்

அவர் செத்த அன்னைக்குப் பெஞ்ச மழையில.. இந்தப்பக்கம் 15 நாள் வயல் வேலை நடஞ்சு…அவர் செத்துத்தான் இந்த மழை வந்துருக்குனு ஊரே சொன்னுச்சு.. நீங்க வர வழியில பாத்த வயலுங்களுக்கு எல்லாம் இன்னொரு மழை பெஞ்சாதான் அறுவடை பண்ண முடியும். இல்லனா அதுவும் காஞ்சுதான் போகும்.. வழக்கமா நாங்க கிறிஸ்துமஸ், நியூ இயர்தா கொண்டாடுவோம்..இந்த வருஷம் யாருக்கும் விவசாயம் நடக்கல, பணப் பிரச்னயால வேற..வேலைக்குப் போனாலும் சம்பளம் வாங்க முடியுறது இல்ல. பெரியவங்க நாங்க சமாளிச்சுக்குவோம்.. இந்தப் புள்ளைங்களுக்கு ஒரு புதுத் துணிகூட எடுக்க முடியலையேன்னு நெனச்சாதா வருத்தமா இருக்கு…இப்படியே போனா நாங்க எல்லாரும் சாக வேண்டியதுதான்… அரசாங்கம்தா ஏதாவது உதவி செய்யணும்..” என்றார்.

இதுபற்றி மேலும் பேசிய அவரது மகள் வினோலியா மேரி, “எங்க அப்பா ஐ.டி.ஐ. படிச்சவரு. நெறய ஊர்ல வேலை பாத்துருக்காரு. எப்பவுமே டிவில, ரேடியோல செய்தி கேட்டுக்கிட்டே இருப்பாரு.. விவசாய அறிவிப்பு ஏதும் வருதா..தண்ணி பத்தி ஏதும் சொல்றாங்களான்னு கேட்டுக்கிட்டே இருப்பாரு.. எங்க அப்பாவோட இழப்பு எங்கள ரொம்பவே பாதிச்சுருச்சு..எங்க அப்பா இருக்குற வரைக்கும் ஏதாவது வேலை பாத்துக்கிட்டுதா இருப்பாரு.. இப்பவும் நான் எங்க அப்பா இறந்துட்டார்னு நெனக்குறது இல்ல.. எங்கயோ வேலைக்குப் போயிருக்கார்னு நெனச்சுக்குறேன்.. இந்த வருஷம் சுத்தமா தண்ணீர் இல்லாததால இதுவரைக்கும் எங்க நாகை மாவட்டத்தில மட்டும்.. நெறய விவசாயிங்க இறந்துட்டாங்க.. இப்ப விவசாயம் பண்றவங்ககூட காசுக்குத் தண்ணி வாங்கித்தான் சாகுபடி செய்றாங்க.. எங்களுக்கு நடக்குறது இந்த ஒரு போகம்தா.. அதுவும் இந்தத்தடவ இல்லனு ஆயிடுச்சு.. எனக்குக் கீழ தங்கச்சி, தம்பிங்க எல்லாம் இருக்காங்க.. அவங்கள படிக்க வைக்கணும்… என்ன பண்றதுன்னு தெரியவில்லை.. எங்க அப்பா இறந்துட்டதால வேற வழி இல்லாம நான் சென்னையில போய் வேலை பாக்குறேன்..

இந்த அரசாங்கம் கண்டிப்பா எங்களுக்கும், எங்கப்பா மாதிரி செத்துப்போன விவசாயக் குடும்பங்களுக்கும் ஏதாவது செய்யணும். அப்படி ஏதும் செய்யலைன்னா நாங்க குடும்பத்தோட சாக வேண்டியதுதான்..எங்க அம்மா வராட்டினாலும் பரவால்ல..நான் தற்கொலை பண்ணிக்குவேன்..ஒரு தவணைக்காரர் வந்தாக்கூட என்னனுகூட கேக்காம போறாரு…எங்க அப்பா இல்லாததால எப்படி வாங்கின கடன திருப்பிக் கொடுப்போம்னு நெனைக்குறாங்க..எங்க அப்பா இல்லாதது எனக்கு இந்த உலகமே இல்லாதது போல இருக்கு…” என்று அதற்கு மேல் வார்த்தைகள் வராமல், அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு பேச்சை நிறுத்திக் கொண்டார்.

இதையும் படியுங்கள்: மாவோவின் சிட்டுக்குருவி ஒழிப்பும் மோடியின் நோட்டு ஒழிப்பும்

ஒரு விவசாயியின் இழப்பு என்பது தனிப்பட்ட முறையில் அவரது குடும்பத்தை எந்த அளவில் பாதிக்கின்றதோ, அதே அளவு நாட்டையும் பாதிக்கிறது. ஏனென்றால், நாம் இழந்து வருவது உணவு உற்பத்தியாளர்களை. 125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் தொழிலைவிட அத்தியாவசியமான தொழில் எதுவாக இருக்க முடியும்? தொழில்துறை, இணைய வளர்ச்சி என பல வளர்ச்சிகளை நோக்கி சமூகம் ஓடிக்கொண்டிருக்கிறது. அவசியம்தான். ஆனால், அதைவிட அவசியம் உணவு உற்பத்தி, விவசாய வளர்ச்சி. நாட்டின் முதுகெலும்பு. கிராமங்களும், அங்கு நடைபெறும் விவசாயமும்தான் என்று காந்தியடிகள் சொன்னார். ஆனால், இந்தியாவின் முதுகெலும்பு ஒவ்வொரு அடுக்காய் உடைந்துகொண்டு வருகின்றது.

பசிக்காக அழும் குழந்தை எப்படித் தன் தாயின் மார்பைப் பால் வரும் எனக் கவ்விப் பிடித்து, பால் வராவிட்டாலும் தன் அழுகையை ஆசுவாசப்படுத்துவதற்காக மார்பையே கவ்விப் பிடித்துக் கொண்டிருக்கும்; அதுபோல மழை இல்லை, நீர் இல்லை எனத் தெரிந்தும், நிலத்தில் விவசாயத்தைத் தொடராமல் விட்டால் நிலம் தரிசாகி, மலடாகி விடும் என்று பயிர் செய்ய புறப்படுகிறார்கள் விவசாயிகள். கருகி நிற்கும் பயிர்களோடு கருகிப் போகும் விவசாயிகளுக்கு எப்போது இந்த அரசாங்கத்தால் நல்லது நடக்க போகிறது? பல பிரச்சனைகளுக்கு கீழே நசுங்கி ஊடகங்களாலும், சமூக வலைத்தளங்களாலும் அவ்வப்போது அரசுக்கு ஞாபகப்படுத்தப்படும் விவசாயிகளின் தொடர் மரணங்களுக்கான தீர்வை அரசு எப்போது காணப்போகிறது?

கடந்த 20 வருடங்களில் மட்டும், நம் நாட்டில் மூன்று லட்சத்துக்கும் மேலான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதை செய்தியாளர் பி.சாய்நாத் ஆதாரபூர்வமாக சொல்கிறார். ஆனால் ,நாட்டில் 900 விவசாயிகள் வரை வருடத்திற்கு இறக்கும் மஹாராஷ்டிராவில் அவர்களின் கவலைகளைத் தீர்க்க அரசுக்கு நேரம் இல்லை. நம் அடுத்த தலைமுறையினருக்கான விவசாயிகளும் நாட்டில் போதிய அளவு இல்லை. இருக்கும் விவசாயிகளையாவது பத்திரமாக பாதுகாக்க வேண்டாமா? தமிழகத்திலுள்ள எவரும் விவசாயிகள் மரணம் பற்றிக் கவலைப்படாமல் ஒதுங்க முடியாது. விவசாயிகளின் உழைப்பையும், விவசாயத்திற்கு உதவும் மாடுகளைப் போற்றும் விதமாகவும் வருடந்தோறும் பொங்கலைக் கொண்டாடுகின்றோம். பொங்கல் நெருங்கி வரும் வேளையில் இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை 100ஐத் தாண்டி விடுமோ என்கிற அச்சம் மேலெழுகிறது. நம் நாட்டின் உயிர்நாடிகள் உயிரிழப்பதை அறிந்தால், நாம் உண்ணும் உணவும்கூட தொண்டைக்குழியில் ஒரு நிமிடம் நின்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்.

இதையும் படியுங்கள்: சாப்பிட வழியில்லை

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்