பப்பாளி சுவையான அதிக சத்து நிறைந்த பழம். வருடம் முழுவதும் கிடைக்க கூடியது. காலை உணவில் சேர்த்துக் கொண்டால் மிகவும் சிறந்தது. இதில் மிளகுத் தூள், எலுமிச்சம்பழம் சாறு பிழிந்து சாலட் ஆகவும் எடுத்துக் கொள்ளலாம். வயிறு சம்பந்தமான பிரச்சினைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். காலை உணவு சாப்பிட அடம் பிடிப்பவர்கள், சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் அவசரமாகக் கிளம்புவர்கள் நான் கீழே கொடுத்துள்ள ஜூஸ் அருந்தினாலே போதும்.

பப்பாளியுடன் கற்றாழையின் சாறு சேர்த்து ஜூஸ் செய்துள்ளேன். கற்றாழையின் உள்ளே இருக்கும் பகுதி பார்ப்பதற்கு நுங்கு போல் இருக்கும். இதன் பலன்கள் ஏராளம். உடல் சூட்டை தணிக்கும். சூடு தணிந்தால் முடி உதிர்வது குறையும். இதற்கு சுவை என்று தனியாக இல்லை. இதை அப்படியே சாப்பிடலாம். அதனால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் ஜூஸ் செய்து குடிக்கலாம். கற்றாழை செடி வீட்டில் வளர்க்கலாம். இதற்காக மெனக்கெட வேண்டியது இல்லை. சுலபமாக வளர்க்கலாம். வீட்டில் வளர்த்தால் நமக்குத் தேவையான பொழுது எடுத்து உபயோகபடுத்தலாம்.

கீழே கொடுத்துள்ள பப்பாளி, கற்றாழை இரண்டும் சேர்த்து செய்த ஜூஸ் அருந்தி பலன் அடையவும்.

தேவையான பொருட்கள்

பப்பாளி – 2 கிண்ணம் துண்டுகளாக நறுக்கியது

கற்றாழை – 1 கிண்ணம் உள்ளே இருக்கும் பகுதி

தேன் – 1 மேசை கரண்டி

பால் – 2 கிண்ணம்

வாழைப்பழம் – 1

சுக்குப் பொடி – 1/4 தேக்கரண்டி

செய்முறை

எல்லாவற்றையும் மிக்ஸ்யில் போட்டு அரைத்து டம்ளரில் ஊற்றி குடிக்கவும். அரைத்தவுடன் குடித்து விடவும், சிறிது நேரம் கழித்து குடித்தால் அதன் சுவை மாறி விடும். அதனால் எப்பொழுது செய்தாலும் உடனே குடிப்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளவும். எந்த ஜூஸ் செய்தாலும் உடனே குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளவும்.