டொனால்ட் ட்ரம்ப் அதிபரானதும் அந்நாட்டின் தூதரக உறவுகள் மேம்படவில்லை என்றும் புதிதாக தூரக அதிகாரிகளை நியமிக்கவில்லை என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
முதல் முறையாக சீனா அமெரிக்காவைக் காட்டிலும் அதிகமான தூதரக அதிகாரிகளைக் கொண்டிருக்கிறது என சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற லௌவி என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் சீனா 2019ஆம் ஆண்டில் பல நாடுகளில் புதிதாக தூதரக உறவுகளை மேம்படுத்தியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
உலகளாவிய தூதரக உறவுகளின் குறியீடு என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த ஆய்வு, “276 தூதரக அதிகாரிகளைக் நியமித்திருக்கும் சீனா, முதல் முறையாக அமெரிக்காவை விட மூன்று அதிகாரிகளைக் கூடுதலாகக் கொண்டிருக்கிறது.” எனக் கூறுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிபரானது முதல் அந்நாட்டின் தூதரக உறவுகள் மேம்படவில்லை என்றும் புதிதாக ஒரு அதிகாரியைக்கூட நியமிக்கவில்லை என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால், பீட்டர்ஸ்பெர்க் நகரில் உள்ள தூதரகத்தை மூடியிருக்கிறது.
2018 மார்ச் மாதம் பிரிட்டனில் முன்னாள் ரஷ்ய உளவு அதிகாரி செர்கெய் ஸ்க்ரிபால் மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், பிரிட்டனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவில் தங்கள் தூரகங்களை மூடின.
மாறாக சீன அரசு புர்கினியா பாசோ, டொமினிக்கன் குடியரசு, எல் சால்வடோர், கேம்பியா, சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி உள்ளிட்ட பல நாடுகளில் புதிதாக தூதரகங்களைத் திறந்திருக்கிறது. இவை அனைத்தும் தைவானுக்கும நட்பு நாடுகள் என்பது கவனிக்கத்தக்கது.
அதிகமான பிற நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு இடம் அளித்துள்ள நாடாக அமெரிக்காவே உள்ளது. அமெரிக்காவில் 61 நாடுகளைச் சேர்ந்த 342 அதிகாரிகள் உள்ளனர். சீனாவில் இந்த எண்ணிக்கை 256 ஆக உள்ளது.
உலகளாவிய உறவை மேம்படுத்துவதற்காக குளோபல் பிரிட்டன் என்ற திட்டத்தை அறிவித்த பிரிட்டன் அரசு, தூதரக உறவுகளை விரிவு செய்வதில் பின்தங்கி 11வது இடத்தில் உள்ளது. இத்தாலி, ஸ்பெயின், பிரேசில் போன்ற நாடுகள் பிரிட்டனைக் பின்னுக்குத்தள்ளி முன்னேறியுள்ளன. இதனிடையே அயர்லாந்தும் நெதர்லாந்தும் தங்கள் தூதரக உறவை அதிகப்படுத்தியுள்ளன.