மழையில் நனைவதும் நீர்த்துளிகளைப் பற்றி நினைப்பதும் கலையின் தருணங்கள். மண்ணோடு ஒட்டி உறவாடுவதும் அதோடு மனசளவில் கரைந்து போவதும் அரிதிலும் அரிதாக கிடைக்கிற கணங்கள். அந்தக் கணங்களுக்கு வடிவம் கொடுத்து மக்களுக்குக் காட்சிப்படுத்துகிற செயலைக் கலைஞர்களும் எழுத்தாளர்களும் செய்து வருகிறார்கள். ஓவியர் சந்ரு சொல்வதுபோல கையிலுள்ள மயிரைக்கூட கலைஞனால் உருவாக்கமுடியாது என்கிற எளிமை தொடக்கமாக இருக்கிறது. சக மனிதர்கள் இயற்கையுடன் உரையாடவும் உறவாடவும் கருவியாக மாறிவிடுவது கலைஞர்களின் உச்சங்களில் ஒன்று. அப்படிப்பட்ட உச்ச தருணங்கள் நிறைந்த கண்காட்சியாக ஓவியர் விஜய் பிச்சுமணியின் கண்காட்சி அமைந்திருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கம் ஆர்ட் ஹவுசில் அக்டோபர் 11இல் ஆரம்பித்த கண்காட்சி அக்டோபர் 31 வரை நடக்கிறது.
சேகரமாகும் தண்ணீர்த் துளிகளை வேர் முடிச்சுகளாகவும் நீர்த் திவலைகளாகவும் கற்பனை செய்யத்தக்க விதத்தில் மரத்தில் வடித்திருப்பது பேரழகாக இருக்கிறது. ஆகாயம் அளவில்லாமல் பொழிந்தாலும் கடைசியில் அந்தத் தண்ணீரை லாரிகளுக்குள்ளும் குடங்களுக்குள்ளும் அடக்கும் நமது நீர் மேலாண்மை பற்றிய சித்திரமாகவும் இந்தக் கண்காட்சி விரிகிறது. இயற்கைக்குக் காது கொடுத்து தரையோடு சேர்ந்து கவிழ்ந்து படுத்துறங்கும் மனிதர், ஒலியின் ரேகைகள், புலியின் காடு, அந்துப்பூச்சியின் இடம், விதைகளின் வலிமை என்று இயற்கையின் விஸ்தீரணமான சாத்தியங்களுக்குள் நுட்பங்களுக்குள் விஜய் பிச்சுமணியின் மரத்தாலான ஓவியங்கள் பயணம் செய்கின்றன. வேளாண் வாழ்வுக்கும் பெருநகரவாழ்வுக்குமிடையில் சுலபமாக பிரயாணம் செய்கிறது விஜய் பிச்சுமணியின் படைப்புகள். இருவேறான இந்தச் சூழல்களுக்குள்ளும் எங்கும் விடாது துரத்துகிற பறவைகளின் கைப்பிடித்து திசை மாறாமல் இலக்கை நோக்கி முன்னோக்கிச் செல்கிறார் விஜய் பிச்சுமணி.