பத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்

மக்கள் அறிவியலிடமிருந்து அன்னியப்படாமலிருக்க செய்திகளைத் தொடர்ந்து வழங்க வேண்டும்.

0
2745

தொலைநோக்கியின் வழியாக நிலாவிலுள்ள அடுக்குகளைப் பார்க்கும்போது கிராமத்துப் பெண்கள் பூரித்துப் போனார்கள்; கணிதவியல் பேராசிரியர் ஆர்.ராமானுஜத்துக்கு அது மிகப் புதிதாக இருந்தது. தொலைநோக்கியில் நிலாவைப் பார்த்துவிட்டு “அம்மா, இங்க நிலா காட்டுறாங்க” என்று பரவசத்துடன் ஓடிப் போய் அம்மாவை, அக்காவை அழைத்து வந்த அந்தச் சிறுவனின் சித்திரம் அவர் மனதைவிட்டு இன்னும் அகலவில்லை. இயற்கை தனது பேரழகால் ஒவ்வொரு கணமும் மக்களைப் பிரமிக்க வைக்கிறது. ”ஒவ்வொரு கணமும் உங்களது பெருவிரல் வழியாக 40 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி) நியூட்ரினோ துகள்கள் கடந்து செல்கின்றன” என்று இயற்பியல் பேராசிரியை இந்துமதி மாணவர்களிடம் சொல்லியிருக்கிறார். ஒரு மாணவர் எழுந்து தனது பெருவிரலைக் காட்டி, “இந்தச் சின்ன இடத்துக்குள் 40 பில்லியன் துகள்கள் கடக்க முடியுமா? ஒரு பில்லியன் என்பது பத்தின் அடுக்கு ஒன்பதாகும்” என்று கேட்டுள்ளார். இந்துமதி தனது பெருவிரலைக் காட்டி இதற்குள் பத்தின் அடுக்கு இருபத்தைந்து எண்ணிக்கையிலான மூலக்கூறுகள் இருக்கின்றன என்று சொல்லியுள்ளார். ஒட்டுமொத்த மாணவர்களும் அதிசயத்தில் வாயைப் பிளக்காத குறைதான்; இந்த உடல் பேரதிசயம்.

இயற்கையைப் புரிந்துகொள்ள அறிவியலாளர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அதிசயங்கள் நிறைந்ததாக இருக்கிறது; வியக்கத்தக்க பெரும் கொடையான இந்தப் பேரண்டத்தை விளங்கிக் கொள்ளும் பெரும் பயணம்தான் அறிவியலாளர்களுடையது; ஆய்வகங்களில், காடுகளில், வயல்களில், மலைகளில், கடல்களில், பாலைநிலங்களில், நிலத்துக்கு அடியில், விண்வெளியில் தொடரும் இந்தத் தேடல் மானுட வாழ்வை மேம்படுத்தியிருக்கிறது. அறிவியலை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் செய்தியாளர்கள் அதன் முதல் தூதுவர்கள்; அறிவியலாளர்களுக்கும் அறிவியலின் தூதுவர்களுக்குமிடையிலான உரையாடலை சென்னையிலுள்ள கணிதவியல் அறிவியல் கழகமும் பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் கழகமும் இணைந்து ஒருங்கிணைத்தன. பகுத்தறிவிற்காக படுகொலையான நரேந்திர தபோல்கரின் ஐந்தாம் நினைவு தினமான ஆகஸ்ட் 20இல் சென்னையில் கணிதவியல் அறிவியல் கழகத்தில் தொடங்கிய இந்த உரையாடல் அடுத்த நாள் நிறைவடைந்தது. சில நாட்களாவது அறிவியலாளர்களின் ஆய்வுக் களங்களில் செய்தியாளர்களும் செய்தியறைகளில் அறிவியலாளர்களும் இருந்தால் ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும் என்று தி ஹிந்துவின் அறிவியல் ஆசிரியர்களில் ஒருவரான முனைவர் சுபஸ்ரீ தேசிகன் சொன்னார்.

மக்களுக்காக மக்களின் பணத்தில் செய்யப்படும் அறிவியலை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றிய ஆழ்ந்த உணர்தலுக்கான தேவையை ராமானுஜம் விளக்கினார்; மக்களின் உதவியைக் கொண்டு நடக்கும் அறிவியல் செயல்பாடுகளைப் பற்றி மக்களிடம் விளக்கமளிப்பது கடமையாகும் என்பதை இந்திய அறிவியல் கழகத்தின் விஞ்ஞானி ஸ்ரீகாந்த் சாஸ்திரியும் வலியுறுத்தினார். உண்மையைத் தேடிச் செல்வது செய்தியாளர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் பொதுவானது என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசினார் அறிவியலாளரான முகுந்த் தட்டை. அறிவியல் செயல்பாடுகளையும் அறிவியலாளர்களின் இயல்பு வாழ்வையும் யதார்த்தப் போக்கில் செய்தியாளர்கள் தொடந்து சித்தரித்தாலே அறிவியலாளர்கள் மக்களிடமிருந்து அன்னியப்படாத சுமுக சூழல் உண்டாகும் என்கிற கருத்து பல அமர்வுகளின் வழியாக மேலெழுந்து வந்தது. பத்திரிகையாளர்களுக்கும் விஞ்ஞானிகளுக்குமிடையே இருக்கிற நம்பிக்கை இடைவெளியை இட்டு நிரப்ப வேண்டும் என்று ஐஸர் புனேவைச் சேர்ந்த விஞ்ஞானியான சுதிர்த் தே கூறினார். அறிவியலாளர்களைப் பற்றிய செய்திகளை மனிதமயப்படுத்த வேண்டியுள்ளது என்பதையும் அவர் பேசினார். அறிவியல் எழுத்தாளர் டி.பாலசுப்பிரமணியம் பேசும்போது, எவற்றைப் பரிசோதனை செய்து பார்க்க முடியாதோ அதெல்லாம் “போலி அறிவியல்” என்றார்.

த.வி.வெங்கடேஸ்வரன் அறிவியலை சமூகக் கட்டமைப்போடு இணைத்துப் பார்க்க வேண்டும்; அதனை ஒரு காட்சிப் பொருளாகவோ, வேடிக்கைப் பொருளாகவோ சித்தரிப்பது எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும் என்று எச்சரித்தார். நேச்சர் இந்தியாவின் ஆசிரியரான சுப்ரா பிரியதர்ஷினி பேசும்போது எந்த முன்முடிவும் இல்லாமல், திறந்த மனதோடு எதையும் அணுகுகிறவர்கள்தான் பத்திரிகையாளர்கள் என்றார். சக ஆய்வாளர்களின் திறனாய்வுக்கு முன்னால் இணையப் பொது வெளியில் வெளியிடப்படும் அறிவியலாளர்களின் ஆராய்ச்சி முடிவுகள் இப்போது பத்திரிகையாளர்களுக்கு மிகப் பெரும் ஆதாரமாக, தரவாக இருப்பதாக தி ஹிந்துவின் அறிவியல் ஆசிரியர் ஆர்.பிரசாத் தெரிவித்தார். அறிவியலுக்கு மாறான கருத்துகள் சொல்லப்படும்போது அதனை எதிர்கொள்வதற்கு அறிவியல்பூர்வமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று வானியல் விஞ்ஞானி நீரஜ் ராமானுஜன் சொன்னார். “ஆக்கபூர்வமாக பேசுவது, ஹாஸ்யத்தைப் பயன்படுத்துவது போன்றவற்றை முயற்சிக்கலாம்” என்றார் அவர். இந்தியாவிலுள்ள மூன்று அறிவியல் கழகங்களும் மக்களுக்குப் பதிலளிக்க கடமைப்பட்டவை என்றும் அவர் கூறினார்.

அறிவியலில் பெண்களின் பங்கேற்பை சரிசமமாக செய்வதன் தொடக்கமாக அறிவியல் நிறுவனங்களின் நிகழ்வுகளில் சரி பாதி பெண்களைக் கொண்ட உரையாடல்களை ஒருங்கிணைக்கலாம் என்று சுப்ரா பிரியதர்ஷினி கூறினார். சென்னை ஐஐடியைச் சேர்ந்த பேராசிரியை மாதங்கி, சரி பாதியான பெண்கள் அறிவியலில் பங்கேற்பதற்கான எண்ணிக்கையை முதலில் கொண்டு வந்துவிட்டால் அமைப்புரீதியான மாற்றங்கள் இயல்பாகவே நடக்க ஆரம்பித்துவிடும் என்ற யோசனையை முன்வைத்தார். அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களின் தரத்தை நிர்ணயம் செய்யும்போது அங்குள்ள பெண் கழிவறைகளின் எண்ணிக்கையும் தரமும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று அறிவியலாளர் கமல் லொடாயா சொன்னார். சரி பாதி இடங்கள் பெண்களுக்குத் தரப்பட வேண்டும் என்ற கருத்தை அறிவியல் கல்வியாளரான ஸ்ரேயா கோஷ் முழுமனதோடு ஆதரிக்கவில்லை. பாலியல் துன்புறுத்தல்களும் அடக்குமுறைகளும் அறிவியல் நிறுவனங்களில் பெண்களுக்குத் தடையாக இருப்பதை அறிவியல் செய்தியாளர் நந்திதா ஜெயராஜ் சுட்டிக் காட்டினார்.

இந்தியாவிலுள்ள மூன்று தேசிய அளவிலான அறிவியல் கழகங்களும் அமெரிக்காவிலுள்ள தேசிய அறிவியல் கழகத்தைப்போல வருடத்துக்கு சுமார் 200 நிகழ்வுகளை அல்லது பொருள்களைப் பற்றிய அறிவியல் அறிக்கைகளை மக்களுக்கு வழங்க வேண்டுமா என்கிற திசையில் விவாதம் உண்டானது. ஒவ்வொரு விஞ்ஞானியும் மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் ஒரு கட்டுரையாவது எழுத வேண்டும் என்று அறிவியலாளர் ராகவேந்திரா கூறினார். இந்திய அறிவியல் கழகம் நீண்ட காலமாக வெளியீடுகளைச் செய்து வருவதும் அறிவியல் செய்தியாளர்களுக்கு வாய்ப்புகளை அளித்து வருவதும் மாநில மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவியலாளரான அமிதாப் ஜோஷி தெரிவித்தார். பரிணாம வளர்ச்சிக் கொள்கைக்கு எதிராக மத்திய அமைச்சர் பேசியபோது அறிவியல் கழகங்கள் அதற்கு எதிராக மறுப்பு அறிக்கை வெளியிட்டன; பல்கலைக்கழக மானியக் கழகத்தைக் கலைப்பதற்கு மத்திய அரசு உத்தேசித்ததற்கு எதிராகவும் அறிவியல் கழகங்கள் உரத்துக் குரல் எழுப்பியுள்ளன.

விண்வெளிப் பயன்பாட்டுக் கழகத்தில் உயர் அதிகாரி ஒருவர் நீக்கப்பட்டதைப் பற்றி நியூ டெல்லி டெலிவிஷனின் (என்டிடிவி) அறிவியல் ஆசிரியர் பல்லவா பாக்ளா செய்தி வெளியிட்டுள்ளார்; இதற்காக அவர் மிரட்டப்பட்டிருக்கிறார். மக்களின் சுதந்திரத்துக்கு எதிரான இதுபோன்ற செயல்பாடுகளை அறிவியலாளர்கள் கண்டித்தார்கள். அறிவியல் கழகங்கள் இன்னமும் சிறப்பாக செயல்படலாம் என்று தேசிய அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் சொன்னார். பெருவாரியான மக்களுக்கு அறிவியலைக் கொண்டு சேர்ப்பதற்கான தேவையுள்ளது என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டாலும் அதற்கான முயற்சிகளின் தாக்கம் ஆராயப்படவில்லை என்று விஞ்ஞானி கவுஹர் ராஸா கூறினார். அறிவியல் செய்தியாளர்களும் அறிவியலாளர்களும் முன்னெப்போதைவிடவும் அதிகமாக உரையாடவும் இணைந்து செயல்படவும் அவசியம் எழுந்திருப்பதை அனேகமாக அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். மக்களுக்கான பேச்சு இது.

The Raya Sarkar Interview

கலாமின் கனவை நனவாக்குங்கள்

A “Nudge” for protecting free speech

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here