ஃபேஸ்புக் (முகநூல்) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பதவியில் இருந்து விலகும் எண்ணம் ஏதும் இல்லை என்று மார்க் ஸுக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் முக்கியமாக பயன்பாட்டாளர்களின் தகவல்கள் கேம்பிரிட்டஜ் அனலிட்டிகா நிறுவனத்துக்கு விற்பனை செய்தது; அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட முகநூல் தகவல்கள் உதவியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் ஃபேஸ்புக் நிறுவனம் எதிர்கொண்டது. இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் மார்க் ஸுக்கர்பர்க் மன்னிப்புக் கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அண்மையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஃபேஸ்புக் தொடர்பான ஒரு புலனாய்வுச் செய்தி வெளியானது. அதில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து பல தவறான தகவல்களை முகநூல் நிறுவனம் திட்டமிட்டு பரப்புகிறது. மேலும் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனங்கள் குறித்து எதிர்மறையான தகவல்களும் ஃபேஸ்புக்கில் பரப்பப்படுகின்றன என்று குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, மார்க் ஸுக்கர்பர்க் பதவியில் இருந்து விலக ஃபேஸ்புக் நிறுவனத்தின் முதலீட்டாளார்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்தார்கள்.

இந்நிலையில் சிஎன்என் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் –

தலைமைச் செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகும் எண்ணம் ஏதுமில்லை. நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி ஷெர்லி சாண்ட்பர்க் மீதும் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. அவர் நிறுவனத்தை வழி நடத்துவது தவறு என்று குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், இவை தவறானது. எனவே, அவரும் பதவி விலக மாட்டார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் எங்கள் நிறுவனம் பற்றி பல தகவல்களை செய்தியாக வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக அந்த பத்திரிகை செய்தியாளர்களிடம் நாங்கள் பேசியுள்ளோம். எங்கள் நிறுவனத்தில் நாங்களே பார்க்காத விஷயத்தை அவர்கள் எப்படி வெளியிட்டார்கள் என்பது தெரியவில்லை. ஒரு பிரச்னை எழுந்தால், அதைத் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது வழக்கமானதுதான். மக்கள் ஆதரவுடன் வளர்ந்த பெரிய நிறுவனங்கள் இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்றார் அவர்.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்