பாபா ராம்தேவ் நிறுவனத்திற்கு மாநில அரசு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் ரகு சர்மா தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்தைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியது. ‘கொரோனில் மற்றும் ஸ்வாசரி’ என்ற பெயரில் சந்தையில் மருந்து விற்பனையைத் தொடங்கியது. மேலும் இந்த மருந்து ஏழு நாட்களுக்குள் கொரோனாவை 100% குணப்படுத்திவிடும் என்றும் விளம்பரப்படுத்தியது.

உடனே மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அதில், பதஞ்சலி ஆயுர்வேத லிமிடெட் வெளியிட்டுள்ள கொரோனா ஆயுர்வேத மருந்துகள் பற்றிய செய்திகளை மத்திய அமைச்சகம் அறிந்திருக்கிறது. அந்நிறுவனம் மருந்துகளின் விவரங்களை வழங்கவும், அதனை வெளியிடுவதையும், விளம்பரப்படுத்துவதையும் நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவித்து இருந்தது. 

இதனையடுத்து, கொரோனாவை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பதற்காக பதஞ்சலி நிறுவனத்திற்கு லைசன்ஸ் வழங்கப்படவில்லை என்று உத்தரகாண்ட மாநிலத்தின் ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில் உத்தரகாண்ட் மாநில அரசின் மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் ராவத் கூறுகையில் “திவ்யா பார்மசி நிறுவனம் கொரோனாவுக்கென கூறி மருந்துக்கான லைசன்ஸை பெறவில்லை. மேலும் நாங்களும் இது கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கக் கூடியது எனத் தெரிவித்து ஒப்புதல் அளிக்கவில்லை. உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடிய, காய்ச்சலை சரி செய்வதற்குதான் மருந்துகள் கண்டுபிடிக்க லைசன்ஸ் கொடுக்கப்பட்டது. கொரோனாவுக்கு மருந்து என விளம்பரப்படுத்தியதற்கான காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவர்கள் கொடுக்கும் விளக்கம் திருப்தியளிக்கப்படாத நிலையில் அவர்களின் லைசன்ஸ் ரத்தாகும்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், “பாபா ராம்தேவ் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா மருந்துகளைப் பரிசோதனை செய்வதற்கான அனுமதியை மாநில அரசிடம் அவர்கள் பெறவில்லை”என்று ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் ரகு சர்மா தெரிவித்துள்ளார். மேலும், இந்த மருந்துகளை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக எந்தவொரு திட்டத்தையும் மாநில அரசு அவர்களிடம் இருந்து பெறவில்லை என்றும், இது தொடர்பாக அவர்களுக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும் சர்மா கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “மாநில அரசின் அனுமதி இல்லாமல் மனிதர்கள் மீது எந்தச் சோதனைகளையும் மேற்கொள்ள முடியாது. அரசாங்க அனுமதியின்றி மருத்துவ பரிசோதனைகளை நடத்துபவர்கள் மக்களைத் தவறாக வழிநடத்துபவர்கள் ஆவர். ஆகவே அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாரேனும் கொரோனாவுக்கு மருந்து எனக்கூறி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”என்று எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here