2016-ம் ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு திட்டத்தால் நாட்டின் வளர்ச்சி சுமார் 2 சதவீதம் பாதிக்கப்பட்டதாக அமெரிக்காவை சேர்ந்த அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு திட்டத்தை அறிவித்தார். இதன்படி நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

அப்போது பண புழக்கத்தில் இருந்த மொத்த பணத்தில் இது 86 சதவீதமாகும். திடீரென பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதால் நாட்டில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.

பண மதிப்பிழப்பு திட்டத்தால் ஏற்பட்ட தாக்கம் குறித்து அமெரிக்காவை சேர்ந்த தேசிய பொருளாதார ஆராய்ச்சி அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.

அமெரிக்கா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர்கள் கேபிரியேல் ஜோட்ரோவ்ரிச், கீதா கோபிநாத், மும்பை குளோபல் மேக்ரோ ரிசர்ச் அமைப்பின் மேலாண்மை இயக்குனர் பிராச்சி மிஸ்ரா, ரிசர்வ் வங்கி அதிகாரி அபினவ் நாராயணன் ஆகியோர் இந்த குழுவில் அங்கத்தினர்களாக இருந்து ஆய்வு மேற்கொண்டனர்.

அது தொடர்பான கட்டுரை ஒன்றை இப்போது அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

அதில், 2016 நவம்பரில் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு திட்டம் இந்தியாவின் வளர்ச்சியை பாதித்து விட்டது.

அன்றைய கால கட்டத்தில் சுமார் 2 சதவீத வளர்ச்சியை பண மதிப்பிழப்பு பாதித்து இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதும் நவம்பர் மாதமும், டிசம்பர் மாதமும் 3 சதவீதம் வரை பாதிப்பு இருந்ததாகவும், அதன் பிறகு பல மாதங்கள் இதன் தாக்கத்தால் பாதிப்புகள் தொடர்ந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017 கோடை காலத்தில் நாட்டில் பொருளாதார ரீதியாக மோசமான நிலை இருந்ததாகவும் அதில் கூறியுள்ளனர்.

மேலும் அந்த அறிக்கையில் பணமில்லா பரிவர்த்தனை திட்டங்கள், நவீன நிதி சந்தை பொருளாதாரத்தில் அவசியமான ஒன்று. அது, இந்திய பொருளாதார நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சில நீண்ட கால பலன்கள் கிடைத்து இருப்பதாகவும் அதில் கூறப்பட்டு இருக்கிறது.

அதாவது வரி வசூல் அதிகரிப்பு, நிதி அமைப்புகளில் சேமிப்பு அதிகரிப்பு, பணமில்லா பரிவர்த்தனை முறைகள் அதிகரிப்பு போன்றவை நடந்துள்ளது.

ஆனாலும், இதில் எந்த மாதிரி நன்மைகள் கிடைத்தன என்பது தொடர்பாக இன்னும் விரிவாக ஆய்வு நடத்தப்படுவது அவசியம் என்றும் அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

இந்த ஆய்வை நடத்தியவர்களில் கீதா கோபிநாத், பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் அடுத்த மாதம் இந்த பதவியை ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Courtesy: Maalaimalar

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்