மோடி நடைமுறைப்படுத்திய பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது நாட்டில் நடத்தப்பட்ட மிகப்பெரிய, கொடூரமான, நிதி அதிர்ச்சி. இதனால், பொருளாதார வளர்ச்சி 7 காலாண்டுகளில் 6.8 சதவீதமாகக் குறைந்தது என்று மோடியின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த போது வரை பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து வெளிப்படையாகக் எந்த கருத்தும் கூறவில்லை அரவிந்த் சுப்பிரமணியன். தற்போது, தான் எழுதிவரும் நூலில் இந்த கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். இவரின் பதவிக்காலம் முடிவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பாகவே தனிப்பட்ட பணிகள் காரணமாக பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் ஊழல், கறுப்புப்பணம், கள்ளநோட்டு ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் 86 சதவீதம் செல்லாது என அறிவிக்கப்பட்டன. இதனால் நாடு முழுவதும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சிறு, குறுந்தொழில்கள் ஏராளமானவே நசுங்கின, அழிந்தன. விவசாயிகள் உரம், விதைகள் வாங்க முடியாமல் மிகவும் பாதிப்புக்கு உள்ளாயினர்.

மோடியின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன், ஆப் கவுன்சில்: தி சேலஞ்சஸ் ஆப் தி மோடி-ஜேட்லி எக்கானமி (Of Counsel: The Challenges of the Modi-Jaitley Economy) என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார்.

அதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனங்களை அரவிந்த் சுப்பிரமணியன் முன்வைத்துள்ளார். ஆனால், அந்தப் புத்தகத்தில் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவிக்கும் முன் தன்னிடமோ அல்லது பொருளாதார விவகாரத்துறையிடமோ கலந்து ஆலோசித்தாரா என்பது குறித்த பதிலை அவர் தெரிவிக்கவில்லை.

Of-Counsel

அந்தப் புத்தகத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அரவிந்த் சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது:

2016-ஆம் ஆண்டு, நவம்பர் 8-ஆம் தேதி நாட்டில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது, மிகப்பெரிய, கொடூரமான, நிதிஅதிர்ச்சியாகும். திடீரென நடத்தப்பட்ட தாக்குதலால் புழக்கத்தில் இருந்த 86 சதவீத 500, 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி(ஜிடிபி) பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டது. பணமதிப்பிழப்புக்குப்பின் பொருளாதார வளர்ச்சிவேகம் குறைந்து, அதன் சரிவு வேகமாக அதிகரித்தது.

பணமதிப்பிழப்புக்குப் முன்பாக 6 காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி சராரசரியாக 8 சதவீதம் இருந்தது. ஆனால், பணமதிப்பிழப்புக்குப்பின் 7 காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீத சராசரி வளர்ச்சிக்குக் குறைந்தது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சிவேகம் குறைந்துவிட்டது என்று கூறுவதில் ஒருவருக்கும் எந்தவிதமான பிரச்சினை இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. பணமதிப்பிழப்பினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்துத்தான் விவாதம் இருக்கிறது, அதாவது வளர்ச்சியின் சதவீதம் 2 சதவீதம் குறைந்துவிட்டதா அல்லது அதற்கும் குறைந்துவிட்டதா என்பதுதான்.

அதுமட்டுமல்லாமல், உண்மையான உயர் வட்டி வீதம், ஜிஎஸ்டி நடைமுறை மற்றும் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை ஆகிவையும் பாதித்தது.

பணமதிப்பிழப்பு போன்ற பேரதிர்ச்சி நடக்கும்போது, நாட்டில் உள்ள அமைப்புசாரா துறைகள்தான் முதன்மையாகப் பாதிக்கப்பட்டது. அதேசமயம், வேறு வழியின்றி பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதால், மின்னணு பரிமாற்றத்துக்கு மாறத் தொடங்கினார்கள்.

அரசியல்ரீதியாகப் பார்க்கும்போது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது எப்போதும் இல்லாத ஒரு நடவடிக்கை. சமீபத்திய வரலாற்றில் எந்த நாடும் இதுபோன்ற நடவடிக்கையை எடுக்கவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை இயல்பான நேரங்களில் அரசோ அல்லது ரிசர்வ் வங்கியோ படிப்படியாக மேற்கொள்வார்கள். போர், உயர் பணவீக்கம், பணப்பிரச்சினைகள், அரசியல்குழப்பம் ஏற்படும்போதுதான் திடீரென பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஏழைகள் தங்கள் சொந்த கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டனர். இதனால் அவர்கள் பட்ட துன்பம் சொல்லமுடியாதது. ஆனால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட இந்த சேதத்தை அரசு நினைத்திருந்தால் தவிர்த்திருக்க முடியும் என்று அரவிந்த் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Courtesy : Economic Times

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here