பண மதிப்பிழப்பு நடவடிக்கையைப் பிரதமர் மோடி கொண்டு வந்து 2 ஆண்டுகள் ஆகியும்கூட, அந்த அதிர்ச்சியில் இருந்து நாட்டின் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை என்றும், அது அழிவை ஏற்படுத்தியது என்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மத்திய அரசைக் கடுமையாக விளாசியுள்ளார்.

கருப்புப் பணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2016-ஆம் ஆண்டு, நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் பிரதமர் மோடி கொண்டு வந்தார். நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாகினார்கள்.

இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டு இன்றுடன் 2-வது ஆண்டு நிறைவடைகிறது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் –

சிறிது கூட சிந்திக்காமல், விளைவுகளை ஆய்வு செய்யாமல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு
கொண்டு வந்த மோசமான பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் 2-ஆம் ஆண்டு இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்தப் பேரழிவு நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தின் மீதும், சமூகத்தின் மீதும் ஏவிவிடப்பட்டு தற்போது அதன் வடுக்கள் ஒவ்வொருவர் மீதும் கண்கூடாகத் தெரிகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒவ்வொரு தனிமனிதரையும் வயது, பாலினம், மதம், தொழில் எனப் பாகுபாடு பார்க்காமல் பாதித்துள்ளது.2 ஆண்டுகள் ஆகியும்கூட, அந்த அதிர்ச்சியில் இருந்து நாட்டின் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் பொருளாரத்தில் கடுமையாகப் பாதித்து, வேலைவாய்ப்பிலும், நிதிச்சந்தையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காலம் சிறந்த வலிநிவாரணி எனக் கூறுவதுண்டு. ஆனால் துரதிருஷ்டவசமாக, பணமதிப்புநீக்க நடவடிக்கையின் தழும்புகள், காயங்கள், இன்னும் தெளிவாக தெரிகின்றன.

பணமதிப்பிழப்புக்கு பின் நாட்டின் பொருளாதார வளர்சிச்சியிலும் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் கொடுமையான தாக்கங்கள் இன்னும் கண்டுபிடிக்கமுடியாமல் இருக்கிறது. நாட்டின் தூண்களாக இருந்துவந்த சிறு, குறு தொழில்கள் பணமதிப்பிழப்பு அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.

வேலைவாய்ப்பில் நேரடியாகத் தாக்கத்தை பணமதிப்பிழப்பு ஏற்படுத்திய காரணத்தால் இன்னும் புதிய வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்க முடியாமல் பொருளாதாரம் தொடர்ந்து தடுமாறி வருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நிதிச்சந்தை பெருத்த ஊசலாட்டத்தைச் சந்தித்தது. இதனால், கட்டுமான துறைகளுக்கு கடன் கொடுத்து உதவிய வங்கியல்லாத நிதிச்சேவை நிறுவனங்கள் பெரும் சிக்கலுக்கு ஆளாகினார்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முழுமையான தாக்கத்தையும், மோசமான அனுபவங்களையும் இன்னும் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, மிகைப்பொருளாதார பாதிப்புகள், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு குறைவு போன்றவை இப்போது தலைதூக்கிவிட்டன.

மரபுவழியில்லாத குறுகியகால பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் பொருளாதாரத்திலும், நிதிச்சந்தையிலும் மேலும் நிலையில்லாத் தன்மையை ஏற்படுத்தும். பொருளாதாரக் கொள்கையில் வெளிப்படைத்தன்மையும், நிலைத்தன்மையையும் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும்போது கவனத்துடன், சிந்தனையுடன் செய்ய வேண்டும் என்பதை பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் புரிந்துகொண்டிருக்கிறோம் என்று மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here