பண்டிகை விடுமுறை நாட்களில் வணிக வளாகங்கள், அங்காடிகளில் பொதுமக்கள் அதிகம்  கூடுவதைத் தவிர்த்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி குறைந்த  அளவு எண்ணிக்கையிலான நபர்களை அனுமதிக்க வேண்டும். மேலும் கடந்த மே மாதம் முதல் கடந்த 25ம் தேதி வரை ரூ.4,93,89,490 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் சார்பில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள், வார இறுதி நாட்களில் தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதிகளவில் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அங்காடிகள் மற்றும் மார்க்கெட் பகுதிகள் போன்ற இடங்களில் அரசின் கோவிட் தொற்று பாதுகாப்பு வழிமுறைகள், அங்காடிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றனவா என கண்காணிக்க மாநகராட்சியின் சார்பில் காவல் துறையுடன் இணைந்து பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  எனினும், கோவிட் தொற்று பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபடவில்லை. தற்பொழுது பண்டிகை விடுமுறை நாட்களில் தியாகராய நகர், புரசைவாக்கம், கோயம்பேடு, பாரிமுனை மற்றும் பாடி போன்ற வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ளது. இதனால் கோவிட் தொற்று மேலும் பரவ வாய்ப்புள்ளது.

எனவே, வணிக வளாகங்களில் உள்ள அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி குறைந்த அளவு எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். பொதுமக்கள் வெளியில் செல்லும் பொழுது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் முகக்கவசம் அணியாத தனிநபர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும். பண்டிகை விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி மற்றும் காவல் துறையின் சார்பில் மேலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தியாகராய நகர், புரசைவாக்கம், கோயம்பேடு, பாரிமுனை மற்றும் பாடி போன்ற வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாநகராட்சி வருவாய் துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் மே மாதம் முதல் கடந்த  25ம் தேதி வரை கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 9.882  நிறுவனங்களிடமிருந்தும்  மற்றும் 97,553 தனிநபர்களிடமிருந்து ரூ.4,93,89,490 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, பண்டிகை விடுமுறை நாட்களில் வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளுக்கு செல்லும் பொதுமக்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கவனமாக  இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here