பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 13 பேரைச் சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படையினர்

0
414

நாகாலாந்தில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொதுமக்கள் மீதே பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தவறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என விசாரணை நடந்து வருகிறது. நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள ஓடிங் மற்றும் திரு கிராமங்களுக்கு இடையே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பணி முடிந்து அவர்கள் நேற்று மாலை ஒரு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மோன் மாவட்டத்தில் நாகாலாந்தின் தேசிய சோஷியலிச பிரிவினைவாத அமைப்பின் கிளை அமைப்பான யுங் ஆங் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால், அப்பகுதியில் தாக்குதல் நடத்த பாதுகாப்பு படையினர் தயாராக இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் கூலித் தொழிலாளர்கள் வந்த வேன் சத்தத்தை கேட்டதும், அதிரடியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர். இதில், அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து அண்டை மாநிலமான அசாமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நாகாலாந்து முதல்வர் நெய்ப்யூ ரியோ தவறுதலாக சுடப்பட்டது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மீதே பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதால் நாகாலாந்து முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து, பொதுமக்கள் அமைதி காக்குமாறு முதல்வர் ரியோ கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை நடத்தப்படும் என அசாம் ரைபிள்ஸ் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here