உச்ச நீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, 3 மாதங்களுக்கு (77 நாட்கள்) பின்னர் தற்போது பணிக்கு திரும்பியுள்ளார்.

சிபிஐ இயக்குநரான அலோக் குமார் வர்மா, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் எழுந்ததையடுத்து இருவரும் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் பணிகளில் இருந்து விடுவித்து, விடுப்பில் அனுப்பி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இதன்பின்னர் 10வது மாடியில் செயல்பட்டு வந்த அலோக் வர்மாவின் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அக்டோபர் 24ஆம்தேதி அதிகாலை 1 மணி அளவில் இந்த சம்பவம் நடந்தது. இதன்பின்னர் அலோக் வர்மாவின் இடத்தில் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டிருந்தார்.

கட்டாய விடுமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். இதில் அலோக் வர்மாவின் அதிகாரப் பறிப்பு மற்றும் கட்டாய விடுமுறைக்குக் காரணமான மத்திய அரசின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

பணியை தொடரலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தபோதிலும் மிக முக்கிய கொள்கை ரீதியிலான முடிவுகளை அலோக் வர்மாவால் எடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிபிஐ இயக்குநராக அலோக் வர்மாவின் 2 ஆண்டு பதவிக்காலம், வரும் 31ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது .

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை அனுப்பிய போது அவர் டேபிளில் இருந்த முக்கியமான வழக்குகள் இவைதான்

ரஃபேல் விமான ஊழல், மருத்துவ கவுன்சிலிங் நடைபெற்ற ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், ஸ்டெர்லிங் பயோடெக் வழக்கு என நீளுகிறது அலோக் வர்மாவின் பட்டியல் .

அலோக் வர்மா விசாரணை செய்த வழக்குகள்

பதவியில் இருந்து நீக்கம் செய்வதற்கு முன்பு வரை அலோக் வர்மா விசாரணை செய்து வந்த வழக்குகள் மிகவும் முக்கியமானவை. ரஃபேல் விமான ஊழலில் தொடங்கி, மருத்துவ கவுன்சிலிங்கில் நடைபெற்ற ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், ஸ்டெர்லிங் பயோடெக் வழக்கு என இந்தியாவில் நிகழ்ந்த மிக முக்கியமான நிகழ்வுகளின் விசாரணைகளை அவர் மேற்கொண்டு வந்தார்.

ரஃபேல் போர் விமான ஊழல்

முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் ரஃபேல் போர் விமான ஊழல் தொடர்பாக அக்டோபர் 4ஆம் தேதி 132 பக்கங்கள் கொண்ட புகார் ஒன்றினை அளித்தபோது அதைப் பெற்றுக் கொண்டார் அலோக் வர்மா. புகாரை சரிபார்க்கும் செயல்முறை நடந்திருக்கிறது.

இந்திய மருத்துவ கவுன்சில் ஊழல்

மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் ஓய்வு பெற்ற ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி ஐ.எம். குதூஸியிடம் இந்திய மருத்துவக் கவுன்சில் ஊழல் வழக்கில் லஞ்ச பேரம் நடத்தியது தொடர்பான வழக்கினை விசாரித்து வந்தார் அலோக் வர்மா. எல்லா விசாரணைகளும் முடிந்து சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் கையெழுத்துக்காக காத்திருந்தது

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஊழல்

தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சிலும், உச்ச நீதிமன்றமும் தடை விதித்திருந்த போது, அக்கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.என். சுக்லா மீது வழக்கு தொடரப்பட்டது. அது தொடர்பான வழக்கு கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்டது. அலோக் வர்மாவின் கையெழுத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் வழக்கு அது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய நிதிச் செயலாளர் ஹஸ்முக் அதியா வழக்கு

பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி, நிதி மற்றும் வருவாய்த் துறை செயலாளராக பணியாற்றும் ஹஸ்முக் அதியா மீது கொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை. ஹஸ்முக் அதியா நிரவ் மோடிக்கும், மெஹூல் சோக்ஸிக்கும் உதவியதாக குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் செயலர் பாஸ்கர் குல்பே

நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் செயலர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரியான பாஸ்கர் குல்பே மீதான வழக்கு ஒன்றினை விசாரித்து வருகிறார் அலோக் வர்மா.

லஞ்ச வழக்கு

டெல்லியில் இருக்கும் ஒரு தரகரின் வீட்டில் அக்டோபர் முதல்வாரம் ரெய்டு நடந்தது. அந்த ரெய்டின்போது பப்ளிக் செக்டார் யூனிட் அப்பாய்ண்ட்மெண்ட்டுகளிற்காக அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்க வைக்கப்பட்ட 3 கோடி ரூபாயைப் பற்றிய கோப்புகளை கண்டுபிடித்தனர் சிபிஐ அதிகாரிகள். அவர் மீதான வழக்கினையும் விசாரணை செய்து வருகிறார் அலோக் வர்மா.

ஸ்டெர்லிங் பயோடெக் நிதி மோசடி வழக்கு

குஜராத்தை சேர்ந்த ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் நடத்திய தொழிலதிபர் நிதின் ஜெயந்திலால் சந்தசரா பொதுத்துறை வங்கிகளில் இருந்து 5300 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுவிட்டு, கடனை செலுத்தாமல் இந்தியாவில் இருந்து தப்பியோடிவிட்டார். இந்த வழக்கில் சிபிஐ இணை இயக்குநரான ராகேஷ் அஸ்தானா புகார் இருந்தது . கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ குற்றஞ்சாட்டியதில் ராகேஷ் அஸ்தானா மீதும் லஞ்ச ஒழிப்பு வழக்கில் ஒரு புகாரை பதிவு செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here