போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தினைத் திரும்பப் பெற்றுக்கொண்டு பணியைத் தொடராவிட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். ஆனால் தங்களது வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

bs-1

ஊதிய உயர்வு, ஓய்வு பெற்றவர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை (நேற்று) முதல் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயக்கப்படததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

high

இதனிடையே போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவினை விசாரித்த உயர்நீதிமன்றம், போராட்டத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது.

bs-2

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார். மேலும் அவர், போக்குவரத்துக் கழகங்கள் தற்போது கடும் நிதி நெருக்கடியில் உள்ளன என்றும், இந்த நெருக்கடியிலும் 2.44 மடங்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்றும் எச்சரித்தார்.

bs-3

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியூ, தொமுச உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தங்களது கோரிக்கைகளுக்காக பத்து ஆண்டுகளாக காத்திருந்தோம் என்றும், தற்போது நடைபெற்று வரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அரசுதான் காரணம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும், நீதிமன்ற உத்தரவினைச் சட்டரீதியாக எதிர்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: மனச்சோர்வுக்கு ஆளாகி தற்கொலை எண்ணம் வருகிறதா உங்களுக்கு ? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்