கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும்போது அதற்கான தொகையை அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயில் பெறுவதற்கு வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.


டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவடைந்து வரும் நிலையில், இத்தகைய கோரிக்கையை பிரதமர் முன்வைத்திருக்கிறார். இது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.


பன்னாட்டு மற்றும் உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அதில் எண்ணெய் ஏற்றுமதி நிறுவனத் தலைவர்கள் மட்டுமன்றி, சவூதி அரேபிய எண்ணெய் வளத் துறை அமைச்சர் காலித் ஏ அல் ஃபாலிஹ், ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
அதில் பேசிய பிரதமர் மோடி, கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். இதைக் கருத்தில் கொண்டு எண்ணெய் உற்பத்தி நாடுகள் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.உலக அளவில் கச்சா எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்யும் மூன்றாவது நாடாக இந்தியா விளங்குகிறது. கடந்த நிதியாண்டில் (2017-18) மட்டும் ரூ.5.9 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிட்டது. அதில்


எரிபொருள் பயன்பாட்டை தாரளமயமாக்கவும், அனைத்து இடங்களிலும் எரிவாயு கிடைப்பதற்கும் மத்திய அரசு பல்வேறு கொள்கைகளை வகுத்துள்ளது.
இதைத் தவிர, மீத்தேன் வாயு கண்டறியும் பணிகளும், பிற வகையான எரிபொருள் வளங்களை ஆய்வு செய்யும் பணிகளையும் அரசு முடுக்கிவிட்டுள்ளது.
எண்ணெய் வளமிக்க நாடுகள் மட்டுமே எரிபொருள் சந்தையில் முக்கிய சக்திகளாக விளங்குகின்றன.

எண்ணெய் வளமிக்க நாடுகள் சர்வதேச பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு செயல்படுவது அவசியம். பெட்ரோலியப் பொருள்களை உற்பத்தி செய்பவர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் இடையே உறவு நீடிக்க வேண்டும்.

கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு பணம் செலுத்துவதற்கான நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும். குறிப்பாக, உள்நாட்டு செலாவணியை பாதிக்காத வகையில் அதில் சில விதிகளை எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்கள் மாற்றியமைக்க வேண்டும்.
அதேபோன்று உபரியாக உள்ள கச்சா எண்ணெய்யை வளர்ந்து வரும் நாடுகளுக்கு பயனளிக்கும் வகையில் விநியோகிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசியதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Courtesy : The Economic Times

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here