பணமில்லாமல் கஷ்டப்படும் மக்கள்: என்று தீரும் இந்தக் கொடுமை?

0
86

ஏடிஎம் மையங்கள் சரியாக செயல்படாமல் இன்றளவிலும் மக்கள் பணமின்றி பரிதவிக்கின்றனர். இது குறித்து மக்களின் தற்போதைய மனநிலை:
mohana
1.மோகனா:
நான் இன்னும் வங்கிக்கே செல்லவில்லை. வங்கிகளில் இருக்கும் கூட்டத்தைப் பார்த்த பயத்திலேயே இன்னும் அங்கு செல்லவில்லை. பழைய 500 ரூபாய் நோட்டுகள்தான் சம்பளமாக தருகின்றனர். சில இடங்களில் பணமின்றி சம்பளம் தராமல் உள்ளனர். கையிலுள்ள சில்லறைகளை வைத்துதான் அன்றாடச் செலவுகள் செய்து வருகிறோம். விரைவில் பணம் எளிதாக கிடைக்க வழி செய்தால்தான் சாமானிய மக்கள் கவலையின்றி பணிகளுக்குச் செல்லமுடியும்.
vinoth
2.வினோத்:
மக்கள் கொஞ்சமும் பணம் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். ஆனால் இத்திட்டம் நாட்டிற்கு ஏதேனும் நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையில் ஒத்துழைப்பு தந்து வருகிறார்கள்.
angammal
3.அங்கம்மாள்:
வங்கிக் கணக்கு இல்லாததால் பிறர் உதவியை வேண்டிக் காத்திருக்கிறேன். பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலாமல் உள்ளது. வங்கிகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் யாரும் மாற்றித் தர முன்வருவதில்லை. இந்தத் திடீர் அறிவிப்பு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
kanimozhi
4. கனிமொழி:
மாற்றுத்திறனாளிக்கு என சிறப்பு கவுன்டர்கள் இல்லாதது பெரும் அலைச்சலை ஏற்படுத்துகிறது. மேலும், ஏடிஎம் மையங்களில் மணிக்கணக்கில் காத்திருந்தும் பணம் இல்லை என வெறும் கையுடன் தான் வர நேர்ந்தது. வங்கிகள் சரியான பதில் அளிப்பதில்லை. ஒரு நாளைக்கு வங்கிகளில் 4500, ஏடிஎம்களில் 2500 என்பது தனிநபர் தேவைகளுக்கே பற்றாது, எப்படி குடும்பச் செலவிற்குப் போதுமானதாக இருக்கும் என அரசிற்கு தெரியாதா?
suganya
5.சுகன்யா:
இரண்டு குழந்தைகளுடன் வரிசையில் நிற்பது பெரும் சிரமமாக உள்ளது. வயதானவர்கள், மாற்றுத் திறனாளிக்களுக்காக பிரத்யேக வசதிகள் செய்யப்படவில்லை. அஞ்சல் நிலையங்களில் சில்லறை தரப்படுவதில்லை. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, சில்லறை இல்லை என்றே அனுப்பி வைக்கின்றனர். நல்ல திட்டமாக இருந்தால் மட்டும் போதாது. சரியான திட்டமிடலும் அவசியம்.
irudhayaraj
6. இருதயராஜ்:
ஆட்டோவில் வரும் பயணிகளுக்கு சில்லறை வழங்க முடியவில்லை. வங்கிகளில் சென்று பழைய நோட்டுகளை மாற்றச் சென்றால் அன்றைய நாள் பொழுது முழுவதுமாக அங்கேயே போய்விடும்.
kannan-1
7. கண்ணன்:
வங்கிகளில் சரியான செயல்பாடு இல்லை. அதிலும் பல வங்கிகளில் காத்திருக்கச் செய்து பணம் இல்லையென கூறி திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். சில்லறை தட்டுப்பாட்டினால் வியாபாரம் பெரிதும் பாதிப்படைகிறது. வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகள் தருவதினால் சில்லறைக்காக ஏடிஎம் மையங்கள் செல்ல வேண்டியுள்ளது. ஏடிஎம் மையங்களில் மணிக்கணக்கில் காத்திருந்து பணம் இல்லை என்கின்றனர், நடமாடும் ஏடிஎம்கள் செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும்.

ஏடிஎம் மையங்களில் பணம் தடையின்றி கிடைக்க வேண்டும் என்றும், நடமாடும் ஏடிஎம்கள் அதிகமாக செயல்பட வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்