பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடங்கலாக இருந்தது என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பேர்க்லே நகரில் உள்ள காலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் எதிர்கால இந்தியா குறித்து 2-ஆவது பாட்டாசார்யா விரிவுரையை ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

“பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி எனும் அடுத்தடுத்த 2 அதிர்ச்சிகள் இந்தியாவின் வளர்ச்சியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியா உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும்போது அதன் வளர்ச்சி படிப்படியாக சரியத் தொடங்கியது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமான 7 என்பது போதாதது. தொழிலாளர் சந்தைக்கு வரும் மக்கள் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளவேண்டும். அவர்களுக்கு வேலை வேண்டும். அதை இந்த கட்டத்தில் பூர்த்தி செய்யமுடியாது.

2017-இல் என்ன நடந்தது? உலக நாடுகள் வளர்ச்சியை சந்தித்தபோதும்கூட இந்தியா சரிவை சந்தித்தது. இந்திய வளர்ச்சிக்கான மிகப் பெரிய தடங்கலாக பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமைந்தது என்பதை தான் இது வெளிப்படுத்துகிறது. இந்த சிக்கலினால் தான் நமக்கு இடையூறு ஏற்பட்டது.

இந்தியாவின் வளர்ச்சி தற்போது மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி பயணிக்கிறது. எனினும், இந்தியாவுக்கு எண்ணெய் விலை பிரச்னை உள்ளது.

வாராக்கடன்களால், வங்கிகளில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதற்கான மிக தொலைவான நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. வாராக்கடன்களை எதிர்கொள்ள இந்தியாவிடம் வேறு கருவி ஏதும் இல்லை.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கு கீழ் சரிந்தால் நாம் ஏதோ தவறு செய்கிறோம் என்று அர்த்தம். இந்தியாவின் வளர்ச்சிக்கு 7 எனும் விகிதமே அடிப்படையாக இருக்கவேண்டும். அடுத்த 10 முதல் 15 வருடங்களில் இந்தியா வளர்ச்சி காணவேண்டும். மாதத்துக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை நாம் உருவாக்கவேண்டும்.

இந்தியாவுக்கு தற்போது 3 சிக்கல்கள் உள்ளது. ஒன்று சேதமடைந்து இருக்கும் கட்டமைப்பு. முன்பு, கட்டுமானத் துறை தான் பொருளாதாரத்தை வழிநடத்தி வந்தது. அது வளர்ச்சியை உருவாக்கும்.

2-ஆவது, குறைந்தகால இலக்காக மின்சாரத்துறையில் சீர்த்திருத்தம் கொண்டுவரவேண்டும். யாருக்கு மின்சாரத் தேவை இருக்கிறதோ அவர்களுக்கு மின்சாரம் சென்றடைகிறதா என்பதை உறுதிபடுத்தவேண்டும். 3-ஆவது சிக்கல், வங்கிகளில் சீர்த்திருத்தம் மேற்கொள்வது. இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த மூன்றும் சிக்கல்களாக உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது. இதனால் அரசியல் முடிவுகள் எடுப்பதில் பெரும் சுணக்கம் நிலவுகிறது.

இந்தியாவின் பிரதமர் முடிவெடுக்கும் வரை, அதற்குக் கீழ் இருப்பவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்யும் அளவுக்கு ஒரு பிரதமர் இருந்தாலும், தேவையான முடிவுகளை உடனடியாக அவரால் எடுக்க முடியாது.

இந்தியா இப்படிப்பட்ட ஒரு கட்டமைப்பில் தொடர்ந்து இயங்க முடியாது. நிர்வாக ரீதியாக இருக்கும் சுமையை பலர் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால், இன்றைய மத்திய அரசோ அதிக அதிகாரங்களை தன்னுள் வைத்துள்ளது.

எந்தத் திட்டம் சீக்கிரம் செய்து முடிக்கப்பட வேண்டும் என்பதை பிரதமரே முடிவு செய்கிறார். உதாரணத்திற்கு, ‘ஒற்றுமைக்கான சிலை’ திட்டம் சீக்கிரமே முடிக்கப்பட்டது. இப்படி எல்லா திட்டங்களிலும் செயல்பட முடியுமா? அதிகாரம் பிரித்துக் கொடுக்கப்பட்டால் இந்தியா அடுத்தக்கட்டத்தை நோக்கி வளரும்’ என்றும் கூறினார்.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து துகுக்கப்பட்டது)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here