11-12 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த வைதீக சமய தத்துவ ஆசிரியரும், சீர்திருத்தவாதியுமான ராமானுஜாச்சாரியாரின் ‘சமத்துவ சிலை’யை பிரதமர் நரேந்திர மோதி கடந்த வாரம் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் திறந்து வைத்தார்.

216 அடி உயர சிலை இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் இது தயாரிக்கப்பட்டது ஒரு சீன நிறுவனத்தால். இதை தயாரிக்க 7 ஆயிரம் டன் பஞ்சலோகம் (ஐந்து உலோகங்களின் கலவை) பயன்படுத்தப்பட்டது.

சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, குஜராத்தின் கேவடியாவில் நிறுவப்பட்ட உலகின் மிக உயரமான ‘ஒற்றுமையின் சிலை’ என பெயரிடப்பட்ட வல்லபாய் பட்டேல் சிலை தயாரிப்பிலும் சீன நிறுவனங்களின் பங்கே இருந்தது. இந்த சிலை 597 அடி உயரம் கொண்டது.

இந்திய அரசியலமைப்பின் தலைமை சிற்பியான டாக்டர் பிஆர் அம்பேத்கரின் 125 அடி உயர வெண்கலச் சிலையை நிறுவும் நோக்கத்துடன் 2017 ஆம் ஆண்டில் தெலங்கானா அரசு, அப்போதைய துணை முதல்வர் கடியம் ஸ்ரீஹரியின் தலைமையில் ஒரு குழுவை சீனாவுக்கு அனுப்பியது,

விஜயவாடாவில் அம்பேத்கருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்க ஆந்திர அரசும் சீன நிறுவனங்களை அணுகியுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் பெரிய சிலைகளை நிறுவ சீனாவின் உதவி ஏன் தேவைப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவிலேயே இவற்றை தயாரிக்க முடியாதா?

சீன நிறுவனங்கள் முன்னணியில்

பிரமாண்ட சிலைகளை உருவாக்குவதில் சீன நிறுவனங்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். பிரமாண்ட வெண்கலச் சிலைகள் நிர்மாணிப்பில் சீனா உலகப்புகழ்பெற்றது.

பாரம்பரிய வார்ப்பு முறைகளுடன் நவீன நுட்பங்களையும் இணைத்து சீன நிறுவனங்கள் பெரிய சிலைகளை உருவாக்குகின்றன. அதன் பல்வேறு பாகங்கள் தனித்தனியாக வடிவமைக்கப்பட்டு பின்னர் பிரமாண்டமான சிலைகள் உருவாக்கப்படுகின்றன. சீனாவில் சிலை வார்ப்புகளுக்கான பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இதன் காரணமாக மிகக் குறுகிய காலத்தில் சிலைகளின் பாகங்களை வடிவமைத்து வழங்க முடியும்.

தெலுங்கானாவில் நிறுவப்படும் அம்பேத்கர் சிலையும் சீனாவில் இருந்து கொண்டு வரப்படுகிறது
தெலங்கானாவில் நிறுவப்படும் அம்பேத்கர் சிலையும் சீனாவில் இருந்து கொண்டு வரப்படுகிறது

அங்குள்ள நிறுவனங்கள் நீண்ட காலமாக பிரமாண்ட சிலைகளை தயாரித்து வருகின்றன. சீனாவில் உள்ள ‘ஸ்பிரிங் டெம்பிள் புத்தர்’ போன்ற பல பிரமாண்ட சிலைகள் இதற்கு உதாரணம். பெரிய சிலைகளுக்காக அனைவரும் சீன நிறுவனங்களை நாடுவதற்கு இதுவே காரணம்.

இந்தியாவில் வடிவமைப்பு , சீனாவில் தயாரிப்பு

ராமானுஜரின் ‘சமத்துவ சிலை’ இந்தியாவில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அதை உருவாக்கும் ஒப்பந்தம் சீன நிறுவனத்திடம் அளிக்கப்பட்டது.

வல்லபாய் படேலின் ‘ஒற்றுமைக்கான சிலை’ பிரபல சிற்பி ராம் வி சுதாரால் வடிவமைக்கப்பட்டது. அந்த சிலையின் முக்கிய ஒப்பந்ததாரர் எல் அண்ட் டி நிறுவனம் ஆகும். இது சிலையை உருவாக்கும் பணியை சீன நிறுவனத்திடம் ஒப்படைத்தது.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெரிய அளவிலான சிலைகளை வடிவமைப்பது சீனாவில் எளிதானது. இருப்பினும், வார்ப்பு வேலையில் இந்தியர்கள் தொடர்ந்து அவர்களை வழிநடத்துகிறார்கள்.

எனவே, ஒரு பெரிய சிலைக்கான ஒப்பந்தம் சீன நிறுவனத்திற்கு வழங்கப்படும் போதெல்லாம், இங்குள்ள சிற்பிகள் சீனாவுக்கு அனுப்பப்படுகின்றனர். இந்த சிற்பிகளின் மேற்பார்வையின் கீழ் சீன நிறுவனங்கள் சிலைகளின் பாகங்களை தயாரித்து, இணைக்கின்றன.

சமீபத்தில் நிறுவப்பட்ட ராமானுஜர் சிலை விஷயத்திலும் இதேதான் நடந்தது.

குஜராத் மாநிலம் கேவடியாவில் நிறுவப்ப்ட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் பிரம்மாண்ட சிலை
குஜராத் மாநிலம் கேவடியாவில் நிறுவப்ப்ட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் பிரம்மாண்ட சிலை

இந்தியாவில் பிரம்மாண்ட சிலைகளை உருவாக்க முடியுமா?

பல்வேறு உலோகங்களால் சிலைகளை வடிக்கும் கலை இந்தியாவில் மிகவும் பழமையானது. சிந்து சமவெளி நாகரிக காலத்தில் செய்யப்பட்ட வெண்கலச் சிலைகளும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில், தெய்வங்களின் திருமேனிகள் பெரிய அளவில் உலோகத்தால் செய்யப்படுகின்றன. அவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவை அளவில் பெரிதாக இல்லை என்பதால் பெரும்பாலும் வீடுகளில் வைக்கப்படுகின்றன.

அதே சமயம், நூற்றுக்கணக்கான அடி உயர சிலைகளை உருவாக்க சிறப்பு தொழில்நுட்பமும், உள்கட்டமைப்பும் தேவை. இந்தியாவில் கடுமையான உள்கட்டமைப்பு பற்றாக்குறை இருப்பதாக ராஜ்குமார் உடையார் போன்ற சிற்பிகள் கூறுகிறார்கள்.

இதனை உருவாக்க அரசு ஊக்கமளித்து தேவையான வசதிகளை செய்து கொடுத்தால் இங்கும் பிரம்மாண்ட சிலைகளை உருவாக்க முடியும் என்றார் அவர். இந்தியாவின் சிற்பிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பெரிய திட்டங்களைத் தொடங்க தேவையான நிதி ஆதாரம் உள்ளதா என்பதையும் ஆர்டர் அளிப்பவர்கள் பார்க்கிறார்கள் என்று உடையார் கூறினார். இதனால் சிறு நிறுவனங்கள் முன்னேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் சிலை
நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் சிலை

பெரிய சிலைகள் எப்படி உருவாக்கப்படுகின்றன?

உலோகத்தால் ஒரு பிரமாண்ட சிலையை அப்படியே உருவாக்குவது சாத்தியமில்லை. மாறாக அவை தனித்தனி துண்டுகளாக தயாரிக்கப்படுகின்றன. அதன் பிறகு அந்த துண்டுகள் சிலை நிறுவ வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த துண்டுகளை அதே இடத்தில் இணைத்து சிலை முடிக்கப்படுகிறது. ஒரு சிலை மிகப் பெரியதாக இருந்தால், அதன் துண்டுகளும் மிகப்பெரியதாக இருக்கும்.

முதலில் ஒரு சிலையின் வடிவம் தயாரிக்கப்படுகிறது. அதன் பிறகு மாதிரி சிலை தயார் செய்யப்படுகிறது. பின்னர் அந்த மாடலின் 3டி ஸ்கேனிங் மற்றும் கம்ப்யூட்டர் டிசைனிங் மூலம் இதன் அளவு, நமக்குத்தேவையான அளவுக்கு அதிகரிக்கப்படுகிறது.

கால் விரல்கள் முதல் கருவிழி வரை, சிலையின் ஒவ்வொரு பகுதியும் துல்லியமாக அளவிடப்படுகிறது. பின்னர் அந்த அளவீடுகளின் அடிப்படையில், சிலையின் பல்வேறு பாகங்கள் வார்க்கப்படுகின்றன.

சீனாவில் வார்க்கப்பட்ட பிறகு, சிலையின் அனைத்து பகுதிகளும் இந்தியாவுக்கு அனுப்பப்படுகின்றன. கடைசியில் சிலையின் அனைத்து பாகங்களும் ஒன்றன் பின் ஒன்றாக இணைக்கப்பட்டு பின்னர் மெருகூட்டப்படுகிறது.

ஒரு சிலையின் விலையானது அதன் அளவு, அதில் பயன்படுத்தப்படும் உலோகங்கள் மற்றும் நிறுவப்பட உள்ள இடத்தின் தூரம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. தெலங்கானாவில் ராமானுஜர் சிலையை அமைக்க சுமார் 130 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

Courtesy: bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here