ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் லாலாவண்டி கிராமம் அருகே பசு மாட்டை கடத்தி செல்ல வந்ததாகக் கூறி ரக்பர் கான் (வயது 28) என்ற இளைஞரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றுள்ளது.

ராஜஸ்தான், ஆல்வார் மாவட்டம் லாலாவண்டி கிராமம் அருகே காட்டுப்பகுதியில் இரண்டு நபர்கள் நேற்று இரவு பசு மாடுகளை ஓட்டிச் சென்றுள்ளனர். இவர்களை மாடு கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என அப்பகுதி மக்கள் சந்தேகித்து, சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் ஒருவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பியோடினார். இதையடுத்து மற்றொரு இளைஞரான ரக்பர் கானை அந்த கும்பல் கடுமையாக தாக்கியது. அக்பர் கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் ரக்பர் கானை மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கும்பல் தாக்கியதில் உயிரிழந்த அக்பர் கான் தனது சொந்த ஊரான ஹரியானா மாநிலம் கொல்கன்வு கிராமத்தில் இருந்து அந்த பசு மாடுகளை ஏற்றி வந்துள்ளார். ராம்கரில் விற்பனை செய்வதற்காக அந்த மாடுகள் கொண்டு வரப்பட்டதாக தெரிகிறது.

ஆனால் அவர்கள் இருவரும் ராம்கரில் இருந்து பசு மாடுகளை கடத்திச் செல்வதாக கூறி இந்த தாக்குதல் நடந்துள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பசுக்காவலர்கள் ஒரு சிலர் சட்டத்தைக் கையில் எடுத்து அப்பாவிகளை தாக்கிக் கொலை செய்யும் சம்பவங்கள் பல மாநிலங்களில் நடந்தன. இதுபோன்ற கொடூரமான சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பித்தன.

வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி கும்பல் கொலைகளில் ஈடுபடுவோர் மீது அனைத்து மாநில அரசுகளும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். கடந்த சில மாதங்களாக நாட்டில் நடக்கும் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்