பசுவை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அநியாயக் கொலைகள் நடக்காமல் பார்த்துக்கொள்வது மாநிலங்களின் கடமை,” என்று கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.

பசு பாதுகாப்பு என்ற பெயரில் அநியாயக்கொலைகள் நடப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது என்றும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்வது மாநிலங்களின் கடமை என்றும் உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது.

“இதுபோன்ற சம்பவங்கள் நடக்கமுடியாது. எந்த வகையிலும் இவற்றை ஏற்கமுடியாது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல்
பார்த்துக்கொள்வது மாநிலங்களின் கடமை,” என்றது உச்ச நீதி மன்றம்.

தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கார், சந்திராச்சத் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சனை என்றும் ஒவ்வொரு மாநிலமும் இதற்கு பொறுப்பு என்றும் கூறியது. தாக்குதல் சம்பவங்கள் அனைத்தும் கும்பல் வன்முறை என்றும் அது குற்றம் என்றும் கூறியது அமர்வு. இதுபோன்ற வன்முறைகளை தடுக்க தேவையான வழிமுறைகளை வகுக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணையில் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது உச்ச நீதி மன்றம்.

சென்ற ஆண்டு, தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, நீதிபதிகள் அமிதாவா ராய் மற்றும் ஏ.எம். கான்வில்கார் அடங்கிய அமர்வு பசு பாதுகாப்பு தொடர்பான வன்முறையை தடுக்க வலிமையான நடவடிக்கைகள் எடுக்கக்கோரி மத்திய அரசாங்கத்தை அறிவுறுத்தியது. ”யார் அவர்களை தடுப்பார்? இது போன்ற கும்பல்கள் வன்முறையில் ஈடுபடாமல் தடுக்க ஏதாவது வழிமுறை ஏற்படுத்தவேண்டும்.

இது நிச்சயமாக நிற்கவேண்டும். அரசாங்கங்கள் இதுபோன்ற வன்முறையை தடுக்க எதாவது திட்டமிடப்பட்ட, நன்கு ஒருங்கிணைந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும்,” என்றது அந்த அமர்வு.

ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேச அரசாங்கள் நீதி மன்ற உத்தரவை பின்பற்றாததால் அவற்றின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டதன் பேரில் அம்மூன்று மாநிலங்களும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது உச்ச நீதி மன்றம்.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி உச்ச நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றவில்லை என மூன்று மாநிலங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தவர் காந்தியின் கொள்ளுபேரனான துஷார் காந்தி ஆவார்.

இந்தாண்டு ஜூன் மாதம் கால்நடை வியாபாரி ஒருவர் ஹாபுரில் உள்ள பிலாகுவா பகுதியில் ஒரு கும்பலால் அடித்து கொல்லப்பட்டார். உயிரிழந்த 45 வயதான் காஸிமின் குடும்பத்தினர் ”பசு தொடர்பான விவகாரம்” தான் அவர் தாக்கப்பட்டதற்கு காரணம் என்று கூற சாலைத் தகராறில் உயிரிழந்தார் என காவல்துறை தெரிவித்தது. 65 வயதான சமியுதின் என்பவரும் இத்தாக்குதலில் படுகாயமடைந்தார்.

யுதிஷ்டர் சிங் மற்றும் ராகேஷ் சிசோடியா ஆகிய இருவரை கொலைக்குற்றச்சாட்டின் பேரில் கைது செய்துள்ளது காவல்துறை. முதல் தகவலறிக்கையில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வேறு இருவரோடு சண்டையிட்டதால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here