ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் லாலாவண்டி கிராமம் அருகே பசு மாட்டை கடத்தி செல்ல வந்ததாகக் கூறி ரக்பர் கான் (வயது 28) என்ற இளைஞரை ஒரு கும்பல் அடித்தது . ரக்பரை மீட்ட போலீஸார் மாடுகளை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவிட்டு, பின் அங்கிருந்து மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கின்றனர்

மருத்துவமனைக்கு போகும் வழியில் டீ குடித்து விட்டு எந்த அவசரமும் காட்டாமல் போலீஸ் இருந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் , ராஜ்ய சபா எம்பி மதன் லால் ஷைனி ஆல்வார் கொலைக் குறித்து கருத்து கூறுகிறேன் என்ற பெயரில் பாபருக்கு , ஹூமாயூனை அப்பாவாக்கிவிட்டார். (ஹூமாயூன் பாபரின் மகன்)

ஹுமாயுன் இறக்கும் தருவாயில் இருக்கும் போது பாபரை அழைத்து ஒவ்வொரு இன மக்களின் நம்பிக்கைகளையும் உரிமைகளையும் மற்றவர்கள் மதிக்க வேண்டும். இந்த நாட்டினை ஆட்சி செய்ய வேண்டும் என்று விரும்பினால் இங்கு இருக்கும் பசுக்கள், பிராமணர்கள் மற்றும் பெண்களை மதித்து நடக்க வேண்டும் என்று கூறியதாக ஜெய்பூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய மதன் லால் ஷைனி கூறினார் .

இவ்வாறு கூறியதில் ஒரு மிகப் பெரிய பிழை இருப்பதை மதன் லால் உணரவில்லை. பாபர் தான் ஹுமாயுனின் தந்தை. மேலும் பாபர், 1531 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். ஹுமாயுன் இறந்தது 1556 ஆம் ஆண்டு. பாபர் இறந்து 25 வருடங்கள் கழித்தே ஹூமாயூன் இறந்தார் .

பாஜக-வினர் இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்வது இது முதல் முறையல்ல. நாட்டில் அதிகரித்து வரும் ‘பசுவதை’ கொலைகள் குறித்து பாஜக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்லி வருகின்றனர்.

தெலுங்கானாவைச் சேர்ந்த பாஜக எம் எல் ஏ டி.ராஜா சிங், மாடுகளை, தேசியத் தாயாக அறிவிக்கும் வரை பசுவின் பெயரை சொல்லி நடைபெறும் கும்பல் தாக்குதல்கள் ஓயாது என்று கூறினார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பாஜக எம் எல் ஏ கோஷாமஹால் பசுவின் பெயரை சொல்லி நடைபெறும் கும்பல் தாக்குதல்களைக் கண்டிக்கிறேன் ஆனால் பசுக்காவலர்களை சிறையில் அடைத்தாலும் பசுக்களை பாதுகாப்பது என்பது ஓயாது , இது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட வேண்டும் என்று கருத்து கூறினார்.

ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமார், ‘மாட்டுக் கறி சாப்பிடுவதை நிறுத்தினால், பசுவதை தாக்குதல்களும் நடக்காது’ என்று கூறினார். பசுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் அப்போதுதான் கும்பல் கொலைகள் நடை பெறாமல் இருக்கும் என்று கூறினார்.

ஐதராபாத்தைச் சேர்ந்த பாஜக-வின் மக்கள் பிரதிநிதி கோஷாமஹால், ‘பசுவதைக்காக தாக்குதல் நடத்தப்படுவதை கண்டிக்கிறேன். ஆனால், என்ன செய்தாலும் இந்தத் தாக்குதல்களுக்கு முடிவு வராது. இது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட வேண்டும்’ என்று கருத்து கூறினார்.

உத்திர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத், மனிதர்களை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு மாடுகளையும் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் பாஜக எம் எல் ஏ கையன் தேவ் அஹுஜா 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜஸ்தான் ஆல்வாரில் பெஃஹ்லு கான் என்ற விவசாயி பசுக் காவலர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்த போது பசு காவலர்களுக்கு ஆதரவாக பேசினார். மாட்டை கடத்துபவர்கள் பசுவைக் கொலை செய்பவர்கள் , அப்பாவச்செயலை செய்பவர்கள் இப்படித்தான் அடித்துக் கொல்லப்படுவார்கள் என்று சட்டசபைக்கு வெளியே நின்று கையன் தேவ் அஹுஜா பேசினார்.

டிசம்பர் 2017 இல் மீண்டும் பசுவை கடத்துவோர் கொலை செய்யப்படுவார் என்று மீண்டும் உறுதிபடுத்தினார் கையன் தேவ் அஹுஜா.

பசுக் காவலர்கள் என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்து கும்பல் கொலைகளைக் செய்து வருபவர்களைக் கட்டுப்படுத்த, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட உள்ளது.

இதன் முதல்கட்ட பணியாக மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு நான்கு வாரங்களில் இது தொடர்பான பரிந்துரைகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான மூத்த அமைச்சர்கள் குழுவிடம் சமர்பிக்கும்.

ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சர்கள் குழு இந்த பரிந்துரைகளை பரிசீலித்து, அதில் உள்ள அம்சங்களை ஆராய்ந்து பின்னர், தங்களது பரிந்துரையை பிரதமர் மோடியிடம் சமர்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here