பசுமை வழிச்சாலைக்காக புதிதாக கட்டிய அரசு பள்ளி இடிக்கப்படுகிறது: மாணவ-மாணவிகள் கண்ணீர்

0
537

சேலம் பசுமை வழிச் சாலைக்காக தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் காளிப்பேட்டையில் இருந்து கோம்பூர் வரை நிலங்களை அளவிடும் பணி நடந்தது. அப்போது மஞ்சவாடி ஊராட்சி பகுதியில் விவசாயி கார்த்திக் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை வருவாய் துறை ஊழியர்களும், போலீசாரும் உடலில் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். அவரது நிலத்தை அளப்பதை விட்டுவிட்டு வேறு பகுதிக்கு சென்றனர்.

லட்சுமாபுரம் பகுதியில் மலைவாழ் மக்களின் குழந்தைகள் படிக்கும் அரசு உயர்நிலைப் பள்ளி கட்டிடம் பசுமை வழிச்சாலைக்காக இடிபடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளும், ஊழியர்களும் போலீஸ் பாதுகாப்புடன் அந்த பள்ளி கட்டிடத்தை அளந்தபோது அங்கு திரண்டிருந்த மலைவாழ் மக்களும், மாணவ- மாணவிகளும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

லட்சுமாபுரம் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு 250 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். பெரும்பாலோனர்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்களின் குழந்தைகள் படித்து வருகிறார்கள். குறிப்பாக சின்னமஞ்சவாடி, பெரியமஞ்சவாடி, நடுப்பட்டி, காளிப்பேட்டை, கோம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பழங்குடியின மாணவ-மாணவிகள் தான் அதிக அளவில் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளி ஏற்கனவே பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டிடம் கட்டித்தர கடந்த 15 வருடங்களாக நாங்கள் போராடி வந்தோம். பின்னர் நாங்களே தற்போது பள்ளி அமைந்துள்ள இடத்தை விலைக்கு வாங்கி அரசிடம் ஒப்படைத்தோம். கடந்த 2016-2017-ம் ஆண்டு அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் நபார்டு உதவியுடன் ரூ.1 கோடியே 65 லட்சம் செலவில் பள்ளி கட்டிடம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்டப்பட்டது. 2 தளங்கள் உள்ள இந்த கட்டிடத்தில் 25 அறைகள் உள்ளன.

புதிய கட்டிடத்துக்கு மாணவ-மாணவிகள் இன்னும் செல்லவில்லை. அதற்குள் இந்த புதிய கட்டிடம் இடிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அந்த புதிய பள்ளி கட்டிடத்தை இடிக்காமல் மாற்று வழியில் பசுமை வழிச்சாலை அமைக்க வேண்டும் அல்லது இன்னொரு இடத்தில் உடனடியாக பள்ளி கட்டிடத்தை கட்டி மாணவ- மாணவிகள் தொடர்ந்து பள்ளியில் படிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தர்மபுரி மாவட்டம் சாமியாபுரம், பாப்பி ரெட்டிப்பட்டி பகுதியில் ஆயிரக்கணக் கான தென்னை, வாழை, மா, புளியமரங்கள் 8 வழி சாலைக்காக அகற்றப்பட இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சின்ன மஞ்சவாடி, பெரிய மஞ்சவாடி, கோம்பூர், காளிப்பேட்டை பகுதிகளில் உள்ள பழமையான 100 ஆண்டுகளை கடந்த புளியந்தோப்பு, 50 மா மரங்கள், தென்னந்தோப்புகள் வழியாக சாலைக்கு நிலம் அளவிடப்பட்டது. இதை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மரங்களை 100 ஆண்டுகளாக தாங்கள் பாதுகாத்து வருவதாக கண்ணீர் விட்டனர் பெண்கள்.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று வரை 52 கிலோ மீட்டர் தூரத்துக்கு நிலம் அளவிடும் பணி முடிந்துள்ளது. 910 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்து முட்டுக்கல்லை வருவாய் துறை ஊழியர்கள் நட்டு உள்ளனர். இன்னும் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு நிலம் அளவிடும் பணி நடைபெற உள்ளது. இதில் 2 கிலோ மீட்டர் தூர நிலம் வனப்பகுதிக்குள் வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கிலோ மீட்டர் தூர நிலத்தையும், தருமபுரி மாவட்ட வருவாய்துறை ஊழியர்களே அளந்து கற்களை நட்டு உள்ளனர்.

இன்று தருமபுரி மாவட்டம் கோம்பூரில் இருந்து சேலம் மாவட்ட எல்லையான மஞ்சவாடி கணவாய் வரை உள்ள இடங்களை அதிகாரிகள் அளந்து வருகிறார்கள்.

Courtesy : Maalaimalar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here