ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும், குறிப்பிட்ட சில இடங்களில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், கடந்த ஏப்.16ஆம் தேதியன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் ஏப்.20ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் ஐந்து மாநகராட்சிகளில் நடைபெற்ற மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியே அனைத்தையும் கைப்பற்றியது.

அதிக இடங்களைப் பாஜக கைப்பற்றியிருந்தாலும், குறிப்பிட்ட சில இடங்களில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த இடங்கள், மாட்டிறைச்சி பிரச்சினையால் பாதிக்கப்பட்ட இடங்களாகும்.

* கடந்த 2017ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தில், ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கர் மாவட்டத்தில் அலிமுதீன் என்பவர் தனது காரில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாகக் கூறி இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த சிலர், அவரை வழிமறித்து கடுமையாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். மேலும் அவரது காரையும் தீயிட்டுக் கொளுத்தினர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு, ராம்கர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த மார்ச்.16ஆம் தேதியன்று இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 11 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், நடைபெற்ற நகர் பரிஷத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோலிவியைச் சந்தித்தது. இப்பதவிகளை ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் கைப்பற்றியது.

* கடந்த ஏப்.17ஆம் தேதியன்று (தேர்தலுக்கு மறுநாள்), கோதர்மா மாவட்டத்தில், திருமண நிகழ்வில் மாட்டிறைச்சி பரிமாறப்பட்டதாகக் கூறி, முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இங்கு நடைபெற்ற நகரப் பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்தித்துள்ளது. தலைவர் பதவிக்கான போட்டியில் ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் ராஷ்டிரிய ஜனதா தளமும் வெற்றிபெற்றது.

* கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச்சில், லேத்கர் மாவட்டத்தில், மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக் கூறி இரண்டு பேர் அடித்துக்கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இங்கு நடைபெற்ற நகரப் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. ஆனால் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வெற்றிபெற்றுள்ளார்.

* கடந்த 2017, ஏப்ரலில், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வர் மாவட்டத்தில், பசுக்களைக் கடத்தியதாகக் கூறி விஷ்வ இந்து பரிசத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், பெலுகான் என்பவரைக் கடுமையாக தாக்கினர். இதில் பெலுகான் உயிரிழந்தார். இங்கு, கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற மக்களவைக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கரண்சிங் யாதவ் வெற்றிபெற்றார். பாஜக வேட்பாளர் ஜஷ்வந்த்சிங் யாதவ் தோல்வியைச் சந்தித்தார்.

இதையும் படியுங்கள்: படங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்களுக்கு சம்பளம்