ஆகஸ்ட் 30ஆம் தேதி காலை 8.40 மணி. தார்வாரில், டாக்டர் எம்.எம்.கல்புர்கியின் (அவருக்கு வயது 78) வீட்டுக் கதவை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தட்டினார். ஓசை கேட்டுக் கதவைத் திறந்த கல்புர்கியின் முன்தலையில் ஒரு துப்பாக்கி ரவை துளைத்துக் கொண்டு பாய்ந்தது. அந்த அடையாளம் தெரியாத நபர் சுட்ட அடுத்த குண்டு அவரின் இடது நுரையீரலைத் தாக்கியது. அந்த இரண்டு துப்பாக்கிக் குண்டுகளுடன் பிரபலமான அந்தக் கன்னட எழுத்தாளர், ஆய்வறிஞர், பகுத்தறிவாளர், சாகித்திய அகாடமி, இன்னும் மத்திய மாநில அரசுகளிடமிருந்து பல்வேறு விருதுகளைப் பெற்றவர் மீளாத் தூக்கத்தில் ஆழ்ந்தார்.

கல்புர்கியின் இறுதி யாத்திரையில் இளம் வயதினரைக் கணிசமாகப் பார்க்க முடிந்தது.
கல்புர்கியின் இறுதி யாத்திரையில் இளம் வயதினரைக் கணிசமாகப் பார்க்க முடிந்தது.

கல்புர்கியைக் கொன்றது யார்? ஏன்? போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணையை நடத்தி வருகிறார்கள். சொத்துத் தகராறு, அவர் தலைமைப் பொறுப்பில் இருந்த ஒரு அறக்கட்டளையில் இருந்த பெண் அதிகாரி ஒருவரின் நீக்கத்திற்குக் காரணமாக இருந்தார் என்பது உட்பட பல்வேறு கோணங்கள். ஆனால் இவை எல்லாவற்றையும்விட அவர் வலதுசாரித் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டாரா அல்லது லிங்காயத் சாதி அரசியலில் உருவான அவரது எதிரிகள் அவரைப் பலிவாங்கினரா என்பவைதான் பிரதானக் கேள்விகள்.

முதலில் அந்தச் சாதி அரசியலைப் பற்றிப் பார்த்துவிடுவோம். லிங்காயத்துகளின் அடிப்படை இலக்கியமான வசன கவிதைகளில் கல்புர்கி பாண்டித்தியம் பெற்றவர். அவரே லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். வசன கவிதைகளுக்கு அவர் வித்தியாசமான விளக்கங்களை அளித்தார். பிறருக்கு உதவுவது ஒருவரின் அன்றாடச் சடங்குகளில் ஒன்று என்கிறது வசன கவிதை. ஒரு வகையில் அதன் இந்தச் சமத்துவப் பார்வை அரண்மனைக் கவிதைகளுக்கே உரித்தான மரபுகளை உடைத்து சாமானியனின் இலக்கியமாக ஆகிவிட்டது. இப்படி கல்புர்கி அளிக்கும் விளக்கம், லிங்காயத்துகளின் ஆச்சார அனுஷ்டானங்கள் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தது. இதன் விளைவாக லிங்காயத் சமூகத்தைச் சார்ந்த அடிப்படைவாதிகளிடமிருந்து அவர் கொலை மிரட்டலைச் சந்திக்க வேண்டியிருந்தது.

1988இல் கல்புர்கி தனது முதல் மார்கா (ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு) நூலை வெளியிட்டபோதுதான், எதிர்ப்புகளைச் சந்தித்தார். கன்னட நாட்டுப்புறவியல், மற்றும் மதம் குறித்தும் வீர சைவ மதகுரு பசவர், அவரது மனைவி மற்றும் சகோதரி குறித்தும் எழுதப்பட்ட கட்டுரைகள் அதில் இடம்பெற்றிருந்தன. கல்புர்கிக்கு கொலை மிரட்டல் வந்தது. பசவர் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பற்றி அவர் எழுதியதைத் திரும்பப்பெற வேண்டும் என்று மிரட்டினார்கள். பல ஆண்டுகள் உழைப்பில் உருவான அவரது கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகச் சொன்னார் கல்புர்கி. இது குறித்து நேர்காணல் ஒன்றில், கல்புர்கி, “நான் எனது கருத்துகளைத் திரும்பப் பெற்றுக் கொண்ட நாள் நான் அறிவுத் தற்கொலை செய்துகொண்ட நாள்” என்று குறிப்பிட்டார்.

பெங்களூரு அரசியல் பார்வையாளர்கள், அவரது மரணத்திற்குப் பின்னால் வலதுசாரிக் குழுக்கள் உள்ளன எனச் சந்தேகிக்கின்றனர். சிலை வழிபாட்டுக்கும், அது சார்ந்த மூட நம்பிக்கைகளுக்கும் எதிராக கல்புர்கி பேசி வந்த கருத்துகளால் ஏற்பட்ட ஆத்திரம்தான் இந்த்த் தாக்குதலுக்குக் காரணம் என அவர்கள் கருதுகின்றனர். 2014 ஜூனில் “மூட நம்பிக்கைத் தடுப்பு மசோதா” குறித்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற கல்புர்கி, மறைந்த இலக்கியவாதி யு.ஆர்.அனந்தமூர்த்தியைக் கோடிட்டுக் காட்டி, “சிலைகளின் மீது சிறுநீர் கழிப்பதில் தவறில்லை” என்றார். இதை எதிர்த்து பஜ்ரங் தளம், ஸ்ரீராம சேனா, விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பிற இந்துத்துவவாதிகள் கர்நாடகாவில் பெரும் போராட்டங்களை நடத்தினர்.

கல்புர்கிக்கு கர்நாடக முதலமைச்சர் சீதாராமையா அஞ்சலி செலுத்தினார். நன்றி: கோஸ்டல்டைஜஸ்ட்.காம்
கல்புர்கிக்கு கர்நாடக முதலமைச்சர் சீதாராமையா அஞ்சலி செலுத்தினார். நன்றி: கோஸ்டல்டைஜஸ்ட்.காம்

கன்னடப் பண்பாடு மற்றும் மொழிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாகக் கருதப்படுவது தார்வாத். இங்கு பல்வேறு கருத்துகள் மற்றும் சிந்தனை சார்ந்த கல்வியாளர்களுக்கு இடையே கருத்து மோதல்கள் நடந்திருக்கின்றன. இடதுசாரிப் பகுத்தறிவாளர்கள், வலதுசாரி நம்பிக்கைகள் மீது கடும் தாக்குதல்களைத் தொடுத்திருக்கின்றனர். ஆனால் இவை எல்லாம் ஒருநாள் இப்படி – ஒரு முன்னணி கல்விச்சாலை துடைத்தெறியப்படும் அளவுக்கு – வன்முறையில் முடிவடையும் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.

தார்வாத் உட்பட கர்நாடகாவின் பல பகுதிகள் வலிமையான சோஷலிசப் பாரம்பரியத்துடன் இருந்திருக்கின்றன. காலப்போக்கில் அந்த அரசியல் சூழல் மாறியது. லிங்காயத்துகள் இங்கு வலிமையானவர்கள். 1970இல் காங்கிரஸ் கட்சி நிலச்சீர்த்திருத்தத்தை அறிமுகப்படுத்தியபோது, அதை வீழ்த்தியவர்கள். ராஜீவ் காந்தி காலத்தில் அவர் தனது சொந்தக் கட்சி முதலமைச்சரான வீரேந்திரப் பாட்டீலை நடத்திய விதம் நிலைமையை மேலும் மோசமாக்கியது. பெரும்பான்மை லிங்காயத்துகளின் வாக்குகள் ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையிலான ஜனதாவுக்குச் சென்றன. ராமகிருஷ்ண ஹெக்டே லிங்காயத்துகளுக்கும் பிராமணர்களுக்கும் இடையே ஒரு கூட்டணியை உருவாக்கியவர். பாஜகவுடன் கூட்டணி வைத்தார். பின்னர் ஹெக்டேவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பாஜக வலிமை பெறத் தொடங்கியது. பி.எஸ்.எடியூரப்பா முதலமைச்சரான பிறகு லிங்காயத்து அடித்தளம் மேலும் வலிமையானது.

இந்த அரசியல் சூழலை அரசியல் பார்வையாளர்கள், பின்வருமாறு விளக்குகின்றனர். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி இடது சிந்தனை உடைய அறிவுஜீவிகள் மத்தியில் வேலை செய்தது. அதற்கு எதிராக நடந்த அணி திரட்டல்தான் பாஜகவின் வளர்ச்சிக்குக் காரணம் என்று அவர்கள் கருதுகின்றனர். லிங்காயத் சமூகத்தினரிடையே உள்நோக்கத்துடன் கூடிய புத்திசாலித்தனமான பரப்புரைகளுடன் பாஜக ஊடுருவ முயற்சித்தது. இது லிங்காயத்திச எதிர்ப்பாளர்களில் முன்னணியிலிருந்த கல்புர்கியின் மரணத்தில் முடிந்தது.

கல்புர்கி கொலை விஷயத்தில் பாஜக ஒரே கருத்தைக் கொண்டிருக்கிறது என்றும் சொல்ல முடியாது. எடியூரப்பா கல்புர்கி கொலைக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். கொலையாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என அவர் கூறினார். அரசியல்வாதிகள் மத்தியிலும் அறிவுஜீவிகள் மத்தியிலும் இந்தக் கொலை சம்பவத்திற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் கருணாநிதி கல்புர்கியின் கொலைக்குக் கண்டனம் தெரிவித்தார். பாஜக ஆளும் கோவா உள்ளிட்ட மாநிலங்களில், சுதந்திரச் சிந்தனைக்கான வெளி சுருங்கிக் கொண்டு வருவதாக கோவா ஹெரால்டு பத்திரிகை தனது தலையங்கத்தில் வருத்தம் தெரிவித்திருந்தது. கல்புர்கியின் மரணம், கோவாவில் உள்ள சுதந்திரச் சிந்தனையாளர்களும் மதசார்பற்ற சக்திகளும் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக அந்தப் பத்திரிகை கூறியது. “அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மதசார்பற்ற, பகுத்தறிவுப் பூர்வமான சக்திகளால் மட்டுமே நல்ல அரசை அமைக்க முடியும் என்ற கருத்தை உரக்கக் சொல்ல வேண்டிய அவசியத்தை கல்புர்கி அய்யாவின் மரணம் உணர்த்துகிறது” என்று கோவா ஹெரால்டு எழுதியிருந்தது.

சகிப்பின்மை வளர்ந்து வருவதுதான் மிகப்பெரும் கவலைக்குரியது. கேரளாவில் ஒரு இந்து அமைப்பின் நிர்பந்தத்தால், ஒரு இஸ்லாமிய எழுத்தாளர் ராமாயணம் பற்றி எழுதி வந்ததை நிறுத்த வேண்டி வந்தது. ”ராமனைப் பற்றி விமர்சிக்க அவருக்கு என்ன உரிமை இருக்கிறது” என்று கேட்டார்கள். எம்.எம். பஷீர் என்ற அந்த மலையாளப் பேராசிரியர், எழுபத்தைந்து வயதில், தான் வெறுமனே ஒரு முஸ்லிமாக சுருக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் தொண்டிப்புழாவில் முஸ்லிம் அமைப்பினர் சிலர் பேராசிரியர் ஒருவரின் உள்ளங்கையை வெட்டினர். அவர் தயாரித்த ஒரு கேள்வித்தாளில் இருந்த கேள்வி ஒன்று ஆட்சேபணைக்குரியது என்று அவர்கள் கூறினர்.

எழுபத்தைந்தாவது வயதில் தான் வெறும் முஸ்லிமாகக் குறுக்கப்படுவதைப் பற்றி வேதனைப்பட்டார் மலையாள எழுத்தாளர் எம்.எம்.பஷீர்
எழுபத்தைந்தாவது வயதில் தான் வெறும் முஸ்லிமாகக் குறுக்கப்படுவதைப் பற்றி வேதனைப்பட்டார் மலையாள எழுத்தாளர் எம்.எம்.பஷீர்

கோலாப்பூரில் இந்திய கம்யூனிட் கட்சித் தலைவர் கோவிந்த் பன்சாரே, தனது மனைவியோடு காலையில் நடைப்பயிற்சி சென்றபோது கொல்லப்பட்டார். சிவாஜியை இந்துத்துவ ஆதரவாளர்கள் அனைவரும் ஒரு இந்து மன்னர் என்று சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு எதிராக அவர் ஒரு மதசார்பற்ற மன்னர் என்றும் இந்து மன்னர் அல்ல என்றும் திரும்பத் திரும்பச் சொன்னதுதான் கோவிந்த் பன்சாரே செய்த குற்றம். இதற்கு முன்பு பூனாவில் நரேந்திர தபோல்கர் எனும் பகுத்தறிவாளர் ஒருவரும் இதே போல் காலை நடைப்பயிற்சியின்போது கொல்லப்பட்டார். தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகியோரின் கொலைகளில் அச்சமூட்டும் ஒத்த தன்மை ஒன்று இருக்கிறது. எனினும் இந்த வழக்குகளில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை.

கோவிந்த் பன்சாரேவின் இறுதி யாத்திரை
கோவிந்த் பன்சாரேவின் இறுதி யாத்திரை

தமிழ்நாட்டில், எழுத்தாளரும் கல்வியாளருமான பெருமாள் முருகன், தனது மாதொருபாகன் புத்தகத்தில் இந்துக் கடவுளை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி, இந்துத்துவவாதிகள் மற்றும் சாதி அமைப்பினரால் தாக்கப்பட்டார். இதுபற்றி அவர் தனது முகநூலில், “பெருமாள் முருகன், என்ற எழுத்தாளன் இறந்து விட்டான்” என்று எழுதியிருந்தார். முன்னணி அரசியல் தலைவர்களும் அறிவுஜீவிகளும் இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்ததோடு, இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினர்.
செய்வதைக் காட்டிலும் சொல்வது எளிது. தேர்தலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் வாக்குப் போய்விடுமோ என்ற பதற்றத்தில் இருக்கின்றனர். வெற்றி பெறுவதற்காக அவர்கள் பல்வேறு வகைகளில் தெய்வீகத் தலையீட்டைத் தேடுகின்றனர். சாமியார்களின் பின்னால் இருக்கும் கூட்டத்தின் ஆதரவைப் பெற, அந்த சாமியார்களைச் சந்திப்பதற்கு அவர்கள் கூச்சப்படுவதே இல்லை. மேலோட்டமாகப் பார்க்கும்போது இதில் எதுவும் தீங்கு இல்லை என்று தோன்றலாம். ஆனால் மதத்தைப் பற்றிய குறுகிய பார்வை அரசியலோடும் சேர்ந்து வளர்வது ஆபத்தானது. அறிவையும் கல்வியையும் வழங்கும் கல்விச்சாலைகளையும் துப்பாக்கி முனையில் வாய்மூடச் செய்கின்றனர். இப்போதைக்குத் தேவையானது, நிபந்தனையற்ற சகிப்புத்தன்மையும் மாற்று நம்பிக்கைகளும்தான். கருத்துச் சுதந்திரம் ஓர் அடிப்படை உரிமை அல்லவா?

எழுத்தாளர் பெருமாள் முருகன்
எழுத்தாளர் பெருமாள் முருகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here