நோபல் பரிசு: நீங்கள் அறிய வேண்டிய சம்பவங்கள், சர்ச்சைகள்

0
575

(அக்டோபர் 7,2016இல் வெளியான செய்திக் கட்டுரை மறுபிரசுரமாகிறது.)

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் துவங்கியதும், நோபல் பரிசு கமிட்டிகள் ஒவ்வொன்றாக பல்வேறு துறைகளுக்கான நோபல் பரிசுகளை அறிவித்தவண்ணம் உள்ளன. ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமிதான் நோபல் பரிசை இறுதி செய்கிறது என்றாலும் ஒவ்வொரு துறைக்கும் ஐந்து நபர்கள் கொண்ட தனித்தனி அறிஞர் குழுதான் பெயர்களைப் பரிந்துரை செய்கிறது. உலகில் உள்ள சுமார் மூவாயிரம் அறிஞர்களுக்கு யாருக்கு பரிசு கொடுக்கலாம் எனக் கேட்டு கடிதம் அனுப்பி, அவர்கள் தரும் பரிந்துரைகளைப் பரிசீலித்து பரிசு இறுதி செய்யப்படுகிறது. அமைதிக்கான பரிசைத் தவிர வேறு எதுவும் நிறுவனங்களுக்கு தரப்படுவது இல்லை. மூன்று பேருக்கு மிகாமல், ஒவ்வொரு துறையிலும் இரண்டு கண்டுபிடிப்புகளுக்குப் பரிசு வழங்கப்படலாம் என்கிறது நோபல் விதிமுறைகள்.

உலகின் மதிப்பு மிக்க பரிசு என்றாலும் இந்தப் பரிசினைக் குறித்து பல விமர்சனங்களும் கசப்புகளும் உள்ளன. கூடுதல் சர்ச்சைக்குள்ளாவது இலக்கியத்துக்கான நோபல் பரிசும் அமைதிக்கான பரிசும்தான். இந்தப் பரிசுத் தேர்வுகளில் பல தடவை அப்பட்டமான அரசியல் இருந்துள்ளது என்பது நோக்கர்களின் கருத்து.

சர்ச்சைகளின் பரிசா நோபல்?

முதல் முதலில் இலக்கியத்துக்கான நோபல் பரிசை நோபல் கமிட்டி லியோ டால்ஸ்டாயைப் புறக்கணித்துவிட்டு சல்லி புருதோம் எனும் பிரெஞ்சு எழுத்தாளர் மற்றும் கவிஞருக்கு வழங்கியது; இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல கலைஞர்கள் எதிர்ப்புப் பேரணிகூட நடத்தினார்கள். மேலும் நோபல் பரிசுகளை ஆராய்ந்து பார்த்துவிட்டு விமர்சகர்கள் இலக்கியப் பரிசுக்கு முதலாவதாக ஐரோப்பிய மற்றும் ஸ்வீடன் நாட்டு இலக்கியப் படைப்பாளிகளே பெருமளவு தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று சாடுகிறார்கள். மேலும் உள்ளபடியே காலத்தைக் கடந்து நிற்கும் எழுத்தாளர்களான லியோ டால்ஸ்டாய், மக்சிம் கார்கி, மார்க் ட்வைன், எஸ்ரா பவுண்ட், செக்கோவ், ஜேம்ஸ் ஜோய்ஸ் முதலியோருக்கு இலக்கிய நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பதும் நோபல் பரிசு தேர்வின் பாரபட்சம் குறித்த குற்றச்சாட்டு.

அமைதி பரிசைப் பொறுத்தவரை பல விமர்சனங்கள் உண்டு. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று வெறும் பதினோராவது நாளில் ஒபாமா நோபல் பரிசு பெற்றார்; பரிந்துரை கடைசி தேதி முடிந்துவிட்டாலும், அதன் பின்னர் அமெரிக்க அதிபர் ஒபாமா நோபல் கமிட்டியால் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 2009ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசு வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உலக அமைதியை வலுப்படுத்திய குறிப்பிட்ட நடவடிக்கைக்காக இல்லாமல் நோபல் பரிசு அறிவிப்பில் “அமைதியை நிலைநாட்டுவார் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் உள்ளது” என்ற எதிர்கால கனவு காரணத்துக்காக பரிசு என அறிவிப்பு செய்ததுதான் பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது.

இதேபோல முன்பு 1973ஆம் ஆண்டுக்கான அமைதிப் பரிசு அமெரிக்க வெளியுறவுத்துறை நிபுணர் ஹென்ரி கிசிங்கர் மற்றும் இலே துக் தோ எனும் வியத்னாமிய கம்யூனிஸ்ட் தலைவருக்கும் இணைந்து வழங்க நோபல் கமிட்டி முடிவு செய்தது. உள்ளபடியே அமைதி ஏற்படவில்லை, போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது என கூறி இலே துக் தோ விருது வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் போர் வெறியைத் தூண்டி வியத்நாம் யுத்தம் முதல் பல யுத்தங்களுக்குக் காரணமாக இருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை நிபுணர் கிசிங்கருக்கு விருது தந்தது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

காந்திக்குக் கிடைக்காமல்போன அமைதிக்கான நோபல்; வருத்தம் தெரிவித்த பரிசுக் குழு

இதில் வேடிக்கை என்னவென்றால் காந்தி சுடப்பட்டு மரணம் அடைவதற்கு முன்பே அவரது பெயர் நோபல் கமிட்டி முன்பு 1937–39, 1947மற்றும் 1948இல் பரிந்துரை செய்யப்பட்ட பின்னும் அவரது பெயரை நோபல் கமிட்டி எடுத்துக்கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல 1948ஆம் ஆண்டு அமைதிப் பரிசுக்கு உகந்தவர்கள் யாரும் இல்லை என அறிவித்து விட்டது ஹிமாலய தவறு எனப் பின்னர் நோபல் கமிட்டி ஒப்புதல் அளித்தது. இறந்தவர்களுக்குப் பரிசு கொடுப்பதில்லை என்ற வழக்கத்தைக் காரணம் காட்டி 1948இல் இயற்கை எய்திய மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை.

பெரும் தொகையும் பிரபலமும் சேர்ந்துள்ள நோபல் பரிசை வாங்க மறுத்தவர்கள் சொற்பமே. பிரெஞ்சு எழுத்தாளர் மற்றும் தத்துவஞானியான இழான் பவுல் சார்த்ர (Jean-Paul Sartre) வுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1964ஆம் ஆண்டு அறிவித்தபோது அதை அவர் வாங்க மறுத்துவிட்டார். நல்ல எழுத்தாளன் தானே ஒரு நிறுவனமயமாக ஆகிவிடக்கூடாது என்றும்; நோபல் பரிசு தன்னை நிறுவனமயப்படுத்திவிடும் என்றும் கூறி அதனை மறுத்துவிட்டார். பிரபல அமெரிக்க எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே; தானும் பரிசை மறுக்க இருந்ததாகவும் ஆனால் பரிசுத்தொகை தம்முடைய பண நெருக்கடியைச் சமாளிக்க உதவும் என்பதால் ஏற்றுக்கொண்டதாக பின்னர் கூறினார்.


ஹிட்லரும் நோபல் பரிசும்

ஜெர்மனியில் போர் எதிர்ப்புக் குரல் கொடுத்த சோசியலிஸ்ட், பத்திரிகையாளர் கார்ல் வான் ஒசெய்டுஸ்கி ஹிட்லரால் சித்திரவதை சிறையில் அடைக்கப்பட்டபோதும் 1935இல் அமைதிப் பரிசு அளிக்கப்பட்டது. ஒசெய்டுஸ்கிக்குப் பரிசு தரும் விழாவில் ஹிட்லரைப் பகைத்துக் கொள்ளாமல் இருக்க நார்வே நாட்டு அரசர் பங்கெடுக்கவில்லை; இருந்தாலும் கோபமடைந்த ஹிட்லர் இனி எந்த ஜெர்மன் நாட்டவரும் நோபல் பரிசைப் பெறக்கூடாது, புறக்கணிக்க வேண்டும் என உத்தரவு போட்டார். வயதான, நோயால் வாடிய ஒசெய்டுஸ்கி விருது பெற நாட்டைவிட்டுச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது; சித்திரவதை சிறைச்சாலையில் மடிந்தார்.

இதன் தொடர்ச்சியாக 1938இல் வேதியியல் நோபல் பரிசு வென்ற ரிச்சர்ட் கூன், 1939இல் வேதியியல் பரிசு வென்ற அடால்ஃப் புடேனண்ட்ட் மற்றும் 1939இல் மருத்துவ நோபல் பரிசினை வென்ற ஜெர்ஹாட் டொமாக் ஆகியோரை ஹிட்லர் பரிசு பெற அனுமதிக்கவில்லை. இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் தாமாக முன்வந்து நோபல் பரிசைத் துறக்கவில்லை எனக் கூறிய பின்னர் அவர்களுக்கு நோபல் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அரசியல் தலையீட்டின் காரணமாக தான் லிஸ் மைட்னர் எனும் யூதப் பெண் விஞ்ஞானியை நோபல் பரிசுக் குழு தள்ளிவைத்தது என்று கூறுபவர்கள் உண்டு. ஆட்டோ ஹான் மற்றும் ஃபிரிட்ஷ் ஸ்டிராஸ்மன் முதலிய ஜெர்மன் விஞ்ஞானிகளுடன் இணைந்து லிஸ் மைட்னர் அணுக் கரு பிணைவு குறித்து ஆய்வு செய்து கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். இதற்கிடையில் ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சி ஏற்பட்டதும் அங்கிருந்து வெளியேறினார் லிஸ் மைட்னர். 1944இல் வேதியியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது ஹிட்லருக்கு பயந்து லிஸ் மைட்னர் தவிர்த்து மற்ற இருவருக்கும் பரிசு வழங்கப்பட்டது. இயற்கை, செயற்கைக் கதிரியக்க இயக்கம் குறித்து ஆய்வுகள் செய்து புது மூலகத்தைக் கண்டுபிடித்து, அணுக்கரு ஆய்வுகள் செய்து, அவற்றின் விளைவுகளை ஆழமாகப் புரிந்து,‘அணுப்பிளவு‘ என்று பெயரிட்ட லிஸ் மைட்னரையும் இணைத்துப் பரிசு அளிக்க, நோபல் பரிசுக் குழுவினர் தவறிவிட்டனர் என்பது குற்றச்சாட்டு.

மரணம் அடைந்துவிட்டபின் அந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசு தரக்கூடாது என்பது ஒரு விதி. இந்தச் சட்ட விதியின் காரணமாக பலரின் தலைவிதி மாறியுள்ளது. டி என் ஏ மூலக்கூறின் வடிவத்தைக் கண்டுபிடித்து புதுமை செய்ததற்காக 1962இல் பிரான்சிஸ் கிரிக், ஜேம்ஸ் டூயி வாட்சன் மற்றும் மௌரிஸ் வில்கின்ஸ் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. உள்ளபடியே இந்த ஆய்வின் முக்கிய தடயமான எக்ஸ் கதிர் நிழல்படம் எடுத்து அதனைக்கொண்டு அரசல்புரசலாக வடிவத்தை ஏற்கனவே கண்டுபிடித்திருந்த ரோஸாலின் பிராங்ளின் எனும் பெண் விஞ்ஞானி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே கான்சர் நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துவிட்டதால், மரணம் அடைந்துவிட்டவர்களுக்கு நோபல் பரிசு கிடையாது என்ற விதியின்படி இதில் சேர்க்கப்படவில்லை. ஆயினும் விமர்சகர்கள் பெண் என்பதால்தான் அவர் புறக்கணிக்கப்பட்டார் என்று நோபல் பரிசினைச் சாடுகின்றனர். மரணத்துக்குப் பிறகு நோபல் பரிசு அளிக்க முடியாது எனும் விதி 2011இல் புதிய சிக்கலை ஏற்படுத்தியது. மருத்துவ நோபல் பரிசு அளிக்கப்பட்ட ரால்ஃப் ஸ்டைன்மன் அறிவிப்புக்கு மூன்று நாட்களுக்கு முன்பே இறந்துவிட்டார். அவரது மரணத்தை அறிந்திடாமல் அறிவிப்புச் செய்ததால் அந்தப் பரிசை நோபல் கமிட்டி வழங்கியது.

பரிசு அறிவிக்கும்போது மூவருக்கு மேல் ஒரே பரிசை பகிர்ந்து அறிவிக்கக்கூடாது என்பதும் நோபல் பரிசு சட்டவிதி. மூன்று ஆய்வாளர்களுக்கும் கூடுதல் நபர்கள் பங்கு கொண்டு ஆய்வு நடத்தப்பட்டாலும் இதில் மூவரை மட்டுமே நோபல் பரிசுக் குழு தேர்வு செய்யும். ஜான் B. ஃபெண் (John B. Fenn), கொய்ச்சி டனாகா (Koichi Tanaka) ஆகியோருக்கு 2002ஆம் ஆண்டுக்கான வேதியியல் பரிசு புரத மூலக்கூறுகளின் வடிவங்களை கண்டுபிடிக்கும் நிறமாலை முறையை கண்டுபிடித்ததற்காக வழங்கப்பட்டது. ஆயினும் இந்த ஆய்வில் பிரான்க் ஹில்லேன்கம்ப் மற்றும் மிசேல் க்ராஸ் ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது என்றாலும் அவர்களைப் பரிசில் சேர்க்கவில்லை என்ற விமர்சனம் உள்ளது.

செயற்கை முறையில் அமோனியா தயாரித்த ஃபிரிட்ஸ் ஹேபருக்கு 1918இல் வேதியியல் பரிசு அளிக்கப்பட்டது. கொசு ஒழிப்பில் முக்கியப் பங்கு வகித்து மலேரியாவால் ஏற்படும் மரணத்தில் பெரும்பங்கை தவிர்த்ததற்காக DDT மருந்தைக் கண்டுபிடித்த சுவிட்சர்லாந்து நாட்டை சார்ந்த முல்லருக்கு 1948ஆம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு வழங்கப்பட்டது. பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய நார்மன் எர்னஸ்ட் போர்லாக்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. முதல் உலகப்போரில் ஜெர்மனி நாட்டுக்காக விஷவாயு தயாரித்து பலரின் மரணத்துக்கும் காரணமாக இருந்தவர் ஃபிரிட்ஸ் ஹேபர். DDT மருந்து பின்னாளில் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குக் காரணமாகியது. பசுமைப் புரட்சி உள்ளபடியே மனிதகுலத்துக்கு நன்மை பயக்கவில்லை; சூழல் கேட்டைத்தான் விளைவித்துள்ளது எனச் சாடி சூழலியலாளர்கள் நோபல் பரிசினை விமர்சனம் செய்கின்றனர். இந்த விமர்சனங்களில் ஓரளவு மெய் இருந்தாலும் இந்தக் கண்டுபிடிப்புகள் அவை ஏற்பட்ட காலத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்பதையும் பொருத்திப்பார்த்தால் அவ்வளவு தவறான முடிவு என முடிவு செய்வது சரியாக இருக்காது.


தப்பாக வழங்கப்பட்ட நோபல்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளையின் ஒருபகுதியை வெட்டி எடுத்துக் களையும் சிகிச்சையை ஏற்படுத்திய அன்டோனியோ மொனிஸ்க்கு 1949ஆம் ஆண்டுக்கான மருத்துவப் பரிசு வழங்கப்பட்டது. இந்தச் சிகிச்சை முறை இன்று விமர்சனம் செய்யப்படுகிறது; அந்தக்காலத்தில் இதைத்தவிர வேறு வழியில்லை என்ற சூழலில் உள்ளபடியே மருத்துவக் கண்டுபிடிப்புதான் என ஏற்றுக்கொள்ளலாம்; ஜோஹனஸ் ஃபிகேர் ஒருவகை உருண்டைப் புழு எலிகளில் கான்சரை உருவாக்குகிறது எனக் கூறினார். இதற்காக இவருக்குப் பரிசு வழங்கப்பட்டது; பின்னர் வைட்டமின் A குறை காரணமாகத்தான் ஏற்பட்டது எனத் தெரியவந்தது. தவறான கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது இதைத் தவிர வேறுதுவும் இல்லை எனலாம்.

வயது தடையல்ல

2014ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசைத் தனது 17ஆம் வயதில் வென்ற மலாலா யூசுஃப்சாய்தான் இதுவரை குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்றவர். 2007இல் பொருளாதார நோபல் பரிசை தனது 90வது வயதில் பெற்ற லியோனிடு ஹுர்விக்ஸ்தான் அதிக மூத்த வயதில் நோபல் பரிசை வென்றவர்.

குடும்பத்துக்கே நோபல் பரிசு

1910ஆம் ஆண்டுகளில் வைரஸ் தொற்றினால் ஏற்படும் டியுமார் குறித்து ஆராய்ச்சி செய்த பெய்டன் ரௌஸ்க்கு ஐம்பது ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு 1966இல் மருத்துவ நோபல் பரிசு கொடுக்கப்பட்டது; சுப்பிரமணியம் சந்திரசேகரின் மாணவர்கள் சென் நிங் யாங் (Chen Ning Yang), த்செங்-டாவோ லீ (Tsung-Dao Lee) ஆகியோருக்கு அதற்கு முந்தைய ஆண்டு 1956இல் நடத்திய கண்டுபிடிப்புக்காக 1957இல் இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

எலக்ட்ரான்கள் துகள்கள் என்று கூறியதற்காக 1906இல் தந்தை ஜே ஜே தாம்சன் நோபல் பரிசைப் பெற்றார்; அதே எலேக்ட்ரான்கள் அலைகள் என நிறுவியதற்காக அவரது மகன் ஜார்ஜ் பாகெட் தாம்சன் 1937இல் நோபல் பரிசை வென்றார். எக்ஸ் கதிர் நிறமாலைமானி முறையைக் கண்டுபிடித்ததற்காக வில்லியம் ஹென்றி பிராக் மற்றும் அவரது மகன் வில்லியம் லாரன்சு பிராக் ஆகியோர் இணைந்து 1915இல் இயற்பியல் நோபல் பரிசை வென்றனர். அதிக நோபல் பரிசு பெற்ற குடும்பம் கியூரி குடும்பம் ஆகும். மேரி க்யூரி 1903இல் இயற்பியல் பரிசையும் 1911இல் வேதியியல் பரிசையும் தட்டிச்சென்றார். அவரது கணவர் பியேர் கியூரி 1903ஆம் ஆண்டு இயற்பியல் பரிசை மேரியுடன் இணைந்து பெற்றார். மேரியின் மகள் ஐரீன் ஜோலியட்-கியூரியும் அவரது கணவர் பிரெடரிக் ஜோலியட்-கியூரியும் இணைந்து 1935ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசினை வென்றனர். அதாவது ஒரே குடும்பத்தைச் சார்ந்த நால்வர் ஐந்து நோபல் பரிசினைப் பெற்றுள்ளனர்.

”இன்னுமொரு நோபல் பரிசு வாங்குவேன்”

ஜான் பார்டீன்னுக்கு 1956இல் மிகு மின்கடத்தி ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டபோது பரிசு விழாவிற்கு தமது மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்துச் செல்லவில்லை. குழந்தைகளுக்குத் தேர்வு; எனவே வீட்டிலிருந்து படிக்கட்டும் என விட்டுவிட்டார். பரிசளிப்பு விழா விருந்தில் அவரது குடும்பத்தினர் இல்லை என்று அறிந்த ஸ்வீடன் அரசர் “ஏன் மனைவி மக்களைக் கூட்டி வரவில்லை” எனக் கடிந்து கொண்டபோது பவ்யமாக “அடுத்தமுறை கூட்டிவருகிறேன்” என்று கூறினாராம். ஆம் செய்தும் காட்டிவிட்டார்; 1972இல் இரண்டாம் முறை நோபல் பரிசை வென்றபோது மனைவி மக்களோடு பரிசு விழாவிற்குச் சென்றார்.

“அடுத்த முறை கூட்டிவருகிறேன்” என்று ஜான் பார்டீன் கூறியபோது உள்ளபடியே அவருக்கு தாம் இரண்டாம் முறை நோபல் பரிசை வென்றுவிடுவோம் என அவ்வளவு தன்னம்பிக்கை இருந்ததா இல்லையா என்று நமக்குத் தெரியாது. ஆனால் 1930இல் நோபல் பரிசு அறிவிப்பதற்கு சில மாதங்கள் முன்பே தனக்கும் தனது மனைவிக்கும் சேர்த்து கப்பல் டிக்கெட் எடுத்து தன்னைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டார் சர் சி வி ராமன். ஐன்ஸ்டீனும் தனது முதல் மனைவியிடமிருந்து 1919இல் விவாகரத்து வாங்கியபோது தமக்கு நோபல் பரிசு கிடைக்கும்போது அந்தப் பரிசுத் தொகை முழுவதும் தனது முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு என எழுதித் தந்துவிட்டார். இறுதியில் அவருக்கு 1921 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டபோது அந்தப் பரிசுத் தொகை முழுவதையும் முதல் மனைவியிடம் ஒப்படைத்துவிட்டார்.

நோபல் பரிசை எப்படிப் பாதுகாக்கிறார்கள்?

விருது கிடைத்தாலும் வீட்டுக்கு எடுத்துச் செல்வது ஒன்றும் எளிதான காரியமல்ல. முதலில் பரிசு வழங்கும் நாளில் ராசர் கையிலிருந்து தங்கத்தால் ஆன மெடல் மற்றும் சான்றிதழ் பெற்றாலும் இரண்டையும் நோபல் அலுவலக சிப்பந்திகள் உடனே திரும்ப வாங்கிவிடுவார்கள். அன்று மாலை விருந்து உண்டு; விருந்துக் களிப்பில் எங்காவது தொலைத்து விட்டாலோ என்ற காரணத்தில் பெறப்படும் இந்த மெடல் மற்றும் சான்றிதழை அடுத்த நாள் நோபல் அலுவலகம் சென்று பெற்றுக்கொள்ளவேண்டும். மேலும் அப்போதுதான் நோபல் பரிசுத் தொகை தருவார்கள். உங்கள் வங்கிக் கணக்கில் போட வேண்டுமா; வேறு எப்படி வேண்டும் எனக்கேட்டு அவ்வாறு தொகை தரப்படும். உலகின் எல்லா நாடுகளிலும் நோபல் பரிசுத் தொகைக்கு வருமான வரி கிடையாது; அமெரிக்காவைத் தவிர.

“உனக்கெல்லாம் நோபல் பரிசா?”: அமெரிக்கரின் அனுபவம்

அப்படியே நோபல் மெடலைப் பெற்றுவிட்டாலும் வீட்டுக்கு எடுத்து செல்வது எளிதான காரியமல்ல. 2011ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு வென்ற பிறையன் பி. சிமித் முழுவதும் தங்கத்தால் செய்யபப்ட்ட தமது நோபல் பரிசு மெடலுடன் அமெரிக்காவில் விமானம் ஏறி தனது ஊர் செல்ல முற்பட்டார். ஏனைய பயணிகளைப்போல அவரது உடமைகளும் எக்ஸ் ரே கருவியில் சோதனை செய்யப்பட்டது. எல்லா எக்ஸ் ரே கதிர்களையும் தங்கம் உறிஞ்சிக் கொள்ளும். எனவே எக்ஸ்ரே மெசினில் கருமையாக வட்டமாகத்தான் தெரிந்தது. அதைக் கண்டு பதைபதைத்து போன என்ன, ஏது, எப்படி உன்னிடம் வந்தது எனக் குத்திக் குடைந்தனர். அது தங்க மெடல் என்றும் தாம் நோபல் பரிசு பெற்றவர் என்றும் விளக்கிய பிறகும் கலைந்த கேசம், ஏனோதானோ என்ற உடை கொண்ட அவரை பார்த்து நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி என முதலில் ஒப்புக்கொள்ளவில்லையாம். விளக்கமாக தெளிவுபடுத்திய பின்னரே அவரால் விமானத்தில் செல்ல முடிந்தது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்