வடகிழக்கு நைஜிரியாவில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 30 பேர் உயிரிழிந்துள்ளனர். 

நைஜிரியாவின் வடகிழக்குப் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் ஒரு கட்டடத்திற்கு அருகில் மூன்று பேர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். அவர்கள் மூவரும் தங்களிடம் இருந்த வெடி குண்டுகளை வெடிக்க வைத்தனர். இந்தத் தாக்குதலில் அருகிலிருந்த கட்டடத்தில் கால்பந்து போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் 30 பேர் உயிரிழிந்தனர். 

இந்தச் சம்பவம் குறித்து நைஜிரியாவின் அவசரகால நடவடிக்கைக்கான அதிகாரி உஸ்மான் காசலா, “நேற்று இரவு கோண்டூகா பகுதியில் ஒரு கட்டடத்தில் மக்கள் கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்தனர். அந்தக் கட்டடத்திற்குள் நுழைய முயன்ற ஒருவருடன் அக்கட்டடத்தின் உரிமையாளர் வாக்குவாதம் செய்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் தன்னிடம் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கவைத்தார். இவருடன் வந்த மற்றவர்கள் அக்கட்டடத்தின் அருகிலுள்ள டீ கடைகளுக்குள் சென்று தங்களிடமிருந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர். 

இந்தத் தாக்குதலில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன் 48 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் இந்தப் பகுதிக்கு அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் மற்றும் பிற உதவிகள் சரியான நேரத்தில் சென்றடையாததால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவத்தை எதிர்கொள்ள போதிய மருத்துவ வசதிகள் இல்லாததும் உயிரிழப்பு அதிகரிக்க காரணம் எனக் கூறப்படுகிறது. இத்தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. எனினும் தாகுதல் நடந்த விதத்தை வைத்து பார்க்கும் போது இதை ‘போகோ ஹராம்’(Boko Haram) அமைப்பை சேர்ந்தவர்கள் நடத்தியிருப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

இதுவரை போகோ ஹராம் அமைப்பினர் நைஜிரியாவில் நடத்திய தாக்குதல்களில் 27ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் தாக்குதலுக்குப் பயந்து 2 மில்லியன் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அத்துடன் இவர்களின் வன்முறை தாக்குதல் அருகிலுள்ள நைஜர், சாட் மற்றும் கேமரூன் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் இந்த நாடுகள் கூட்டாக ராணுவத்தை அமைத்து இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here