பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி மத்திய அரசு இந்தியாவிலுள்ள 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி அஸ்ஸாமில் 11 இடங்களிலும் குஜராத்தில் ஐந்து இடங்களிலும் மகாராஷ்ட்ராவில் நான்கு இடங்களிலும் ஆந்திராவில் நான்கு இடங்களிலும் ராஜஸ்தானில் இரண்டு இடங்களிலும் தமிழகத்தில் நெடுவாசலிலும் புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்திலும் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது.

ஹைட்ரோ கார்பன் என்கிற இயற்கை வாயு 14 வகை வடிவங்களில் வாயுக்களாக வெளிப்படும். ஹைட்ரோ கார்பனின் எளிய வடிவம் மீத்தேன்; ஈத்தேன், புரோபேன், பியூட்டேன், ஹெக்சேன், பென்ஸீன், ஆக்டேன் உள்ளிட்ட வாயுக்கள் இதிலிருந்து பெறப்படுகின்றன. இந்த வாயுக்கள் அனைத்தும் எளிதில் எரியக்கூடிய தன்மை கொண்டவை. இவ்வாறான வாயுக்களை எடுக்கவிருப்பது அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி அல்ல; தனியார் நிறுவனம். பாஜக கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினருக்குச் சொந்தமான தனியார் நிறுவனம் ”ஜெம் லேபரெட்டரீஸ்”. இந்த நிறுவனம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தது. பாஜக மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.எம்.சித்தேஸ்வராவின் நிறுவனம். இந்த நிறுவனத்திற்குத்தான் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் உரிமத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதன் மூலம் 15 ஆண்டுகளுக்கு நெடுவாசலில் இந்நிறுவனம் இயற்கை ஏரிவாயு எடுத்துக்கொள்ளலாம், இதற்கான கமிஷன் தொகை மட்டுமே மத்திய அரசிற்கு வழங்கப்படும். இத்திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நெடுவாசல் பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டம் நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பாதிக்காது, விவசாயத்தை சேதப்படுத்தாது. மேலும் இதனால் அந்தப் பகுதியில் வாழும் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், இந்தத் திட்டத்தின் ராயல்ட்டியாக மாநில அரசிற்கு 40 கோடி கிடைக்கும் என்று மத்திய பெட்ரோலியத்துறை தரப்பில் மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: மண்ணையும் மக்களையும் அழிக்க சதி

ஆனால் அங்குள்ள மக்களின் மனநிலை இவற்றை ஏற்க தயாராக இல்லை. அவர்களின் மனம் அச்சத்திலும், தங்களது வாழ்வாதாரத்தைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையில்தான் உள்ளது. விவசாயத்தைப் பிரதான தொழிலாக கொண்டுள்ள இந்தக் கிராமத்தில் இயற்கை வளத்திற்கு எதிரியாக ஹைட்ரோ கார்பன் அமைந்திடும் என்கிறார் நெடுவாசல் பகுதியைச் சேர்ந்த சேகர், ”மண்ணெண்ணெய் எடுப்பதாக கூறி விவசாயிகளிடமிருந்து பெற்ற நிலத்தில் அவர்களுக்கே தெரியாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான பணிகளைச் செய்துள்ளனர். விவசாயிகளை ஏமாற்றிப் பெறப்பட்ட நிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான பணிகளைத் துரிதமாக செய்தனர். கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன; தயாரிப்பு மட்டுமே மிச்சமுள்ளது. அதற்கான ஆணையைத்தான் அரசு தந்துள்ளது. அடிப்படையில் ஹைட்ரோ கார்பன் என்ற இயற்கை வாயு எடுக்கும் திட்டம் என மத்திய அரசு குறிப்பிட்டாலும், முன்னதாக டெல்டா பகுதிகளில் எடுக்க அனுமதிக்கப்பட்டு, பின்னர் தடை செய்யப்பட்ட மீத்தேன், பாறைப்படிம வாயு திட்டம்தான் ஹைட்ரோ கார்பன் என்ற புதிய பெயரில் செயல்படுத்தப்படவுள்ளது. இதிலிருந்து பெறப்படும் முதன்மையான வாயு மீத்தேன். இது டெல்டா பகுதியான தஞ்சை, புதுக்கோட்டை மண்வளத்தைக் கொடுக்கக் கூடியது.

ஹைட்ரோ கார்பன் எடுக்க பூமியின் கீழே 5000 மீட்டருக்கு நேராக துளையிட்டு, அதன்பிறகு பக்கவாட்டு பகுதியில் பல நூறு மீட்டர்களுக்கு இந்தத்துளைகள் போடப்படும். அதன்பின்பு அவற்றில் குழாய்கள் செலுத்தப்படும்; இதன் வழியாக வேதிக்கரைசல் உள்ளே செலுத்தப்பட்டு பூமியின் அடிப்பகுதியில் படிந்துள்ள வாயுக்களைஉறிஞ்சி எடுப்பர். இவ்வாறு ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட வேண்டுமெனில் நிலத்தடியில் உள்ள நீரை எல்லாம் வெளியேற்ற வேண்டும். நிலத்தடி நீர் வெளியேற்றப்படும்வேளையில் நிலத்தடி நீரின் ஆதாரம் என்னவாகும். மேலும், நிலத்தடி நீர் வெளியேற்றப்பட்டால் கடல் நீர் உள்ளே புகுவதற்கான சாத்தியங்களும் அபாயங்களும் அதிகமாக உள்ளன. சுகாதாரக் கேடு விளைவிக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டம் எல்லாம் கடல் பகுதியிலும், மக்களைப் பாதிக்காத வகையில் மக்கள் புழக்கம் இல்லாத இடங்களில்தான் செய்யப்படும்.ஆனால் இங்கு மக்கள் வாழும் பகுதியில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ”இதன் மூலம் எங்களை இப்பகுதியை விட்டு வெளியேறச் செய்ய நினைக்கிறார்கள். ஆனால் ஒருபோதும் அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இங்குள்ள மக்கள் எல்லாரும் தங்கள் உயிரைத் தந்தாவது மண்ணைக் காப்போம். நாங்கள் இங்கு உள்ளவரை ஒரு மண்ணைக்கூட மற்றவர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம்” என்கிறார் இந்தப் போராட்டக்கூட்டத்தில் மிகவும் எளிமையாக மக்களுக்குப் புரியும் வகையில் அத்தனை கருத்தையும் பேசிய பாரி.

இதையும் படியுங்கள்: பசுமை அரசியல் காலம்

போராட்டக்குழுவில் ஒருவரான பாரி மேலும் பேசுகையில், ”ஹைட்ரோ கார்பன் எடுப்பதில் எந்தவொரு முன் அனுபவமும் இல்லாத ஒரு நிறுவனத்திற்கு இந்த உரிமத்தை எப்படி மத்திய அரசு வழங்கலாம். இது மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனை. ஆளும் மத்திய அரசுகள் எல்லாம் தனியார் பன்னாட்டு நிறுவனங்களின் கையில் நாட்டை அளித்து இயற்கை வளங்களைச் சீரழித்துவிட்டன. இந்தப் பன்னாட்டு நிறுவனங்களால் பெருமளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டுள்ளது. சாயப்பட்டறைகள் கழிவுகளினால் நீர்நிலை கள் குப்பைத் தொட்டிகளாகவும், கழிவுநீர் கலக்கும் கிடங்காகவும்தான் இருந்து வருகிறது. எஞ்சியிருப்பதையும் வீட்டுமனைகளாக மாற்றிட தொழிலதிபர்கள் துடித்து வருகின்றனர். அதன் விளைவாக மனிதர்கள் பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் புறாக் கூண்டு போல புறநகர், பெருநகர் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட விவசாயி சண்முகம் தனது 72வது வயதிலும்கூட விவசாயத்தைக் கைவிடாமல் தொடர்ந்து உழவைச் செய்து வருகிறார். இவர் பேசுகையில் பன்மடங்கு ஆற்றாமையும், ஆதங்கமும் வெளிப்பட்டது. நாட்டிற்காக உழைக்கும் மக்கள் எங்களுக்குச் சலுகை தராவிட்டாலும், இடைஞ்சல் செய்யாமல் அரசுகள் இருந்தாலே போதும். பலராலும் இதற்கு முன்னர் அறியப்படாத நெடுவாசல் இன்று இந்திய அளவில் உற்றுநோக்கப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டத்தின் அங்கமான நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவது விவசாயிகளை மிகுந்த அச்சமடைய செய்துள்ளது. உடலிலுள்ள ரத்தத்தையெல்லாம் உறிஞ்சி எடுத்த பின்பு உயிர் எப்படி இருக்கும்? அது போலதான் நிலத்திலுள்ள வளத்தையெல்லாம் வாயு என்ற பெயரில் துளையிட்டு எடுத்த பின்னர் எப்படி விவசாயம் உயிர்ப்புடன் இருக்கும்? தமிழகம் காணாத வறட்சி வாட்டியெடுக்கும் வேளையிலும் நெடுவாசல் பசுமை மங்காத ஊராகவே தோன்றுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் பசுமைச் செழிப்போடே தனது மண் வளத்தினால் கரும்பு, சோளம், கம்பு, மிளகாய், வாழை, முந்திரி, தென்னை என பலதரப்பட்ட பயிர்களும் மரங்களும் நெடுவாசலை முழுவதுமாக பசுமையாக்கியுள்ளன. இது இயல்பான பசுமை அல்ல; வறண்ட நிலமாக இருந்த ஊரை இங்குள்ள மக்களின் முயற்சியால் 30 வருடங்களில் மாற்றியுள்ளோம்.

தண்ணீருக்காக கிணறுகள் வெட்டி, மோட்டார் வசதி என அரசின் கையை எதிர்பாராமல் எங்களது சொந்த செலவில் பல உயிர்ப்பலிகளுக்குஇடையே எல்லாவற்றையும் செய்தோம். இங்கு கிணறுகள் தோண்டும்போது பணியில் ஈடுபட்ட பல மக்கள் உயிரிழந்தனர். வறட்சியின்போதும் பல விவசாயிகள் தற்கொலை, மனமுடைந்து மரணம் என எண்ணற்ற உயிர்களைக் கொடுத்து வந்த இந்த வளம் ஹைட்ரோ கார்பனால் அழிக்கப்பட்டுவிடக் கூடாது. இங்குள்ள மக்கள் பலரும் உழவைக் காக்கவேண்டும் என்ற ஒரே நோக்கில்தான் போராடி வருகிறோம். நாட்டின் எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்ய உள்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எடுத்தால் நாட்டின் உணவுத் தேவைக்கு அரசு என்ன செய்யும்? சிறை செல்ல நேர்ந்தாலும் சரி, உயிரைத் தர நேர்தாலும் சரி. எந்த விலைக் கொடுக்க முன்வந்தாலும் ஒரு நாளும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்கிறார்.

இதையும் படியுங்கள்: தமிழ் வசந்தம்

வாடிவாசலை அடுத்து நெடுவாசலில் ஒரு மக்கள் போராட்டம் நிகழும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. இதுபோன்ற திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுக்கும் முன் நிச்சயமாக மக்களின் ஒப்புதலை அறிய வேண்டும். இது பற்றி பேசிய நெடுவாசல் பகுதி மாணவர் ரமேஷ், இங்கு போராடி வரும் மக்கள் யாரும் பெருவளங்கள் கொண்ட மக்களல்ல. அன்றாடம் வேலை செய்தால்தான் அவர்களின் அன்றைய தினப் பிழைப்பிற்கு பணம். இங்குள்ள பலர் விவசாயக் கூலிகள், தானாக சிறு இடங்களில் வெள்ளாமை செய்பவர்கள். இவர்கள் எல்லாம் இங்கு வந்து போராடி வருவது தங்கள் நாளைய வாழ்க்கையை நலமுடன் வாழ்வதற்குத்தான். ஏற்கனவே வறட்சி வாட்டி வருகிறது. போதிய மழை இல்லாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். வறட்சியால் உயிரிழந்துள்ள விவசாயிகளுக்கு இன்னும் நிவாரணம்கூட வழங்கப்படவில்லை. அவர்கள் கடன் தொல்லையால் நாளுக்கு நாள் மடிந்து வருகின்றனர். இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எதுவும் இதுவரை செய்யவில்லை. ஆனால் இதுபோன்ற திட்டங்களில் மட்டும் மத்திய அரசு மிக துரிதமாக தமிழகத்தில் செயல்படுகிறது என்கிறார் ரமேஷ்.

வாடிவாசல் போராட்டக்களத்தில் போராடிய ராஜா ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான தனது எதிர்ப்பைத் தெரிவிக்க நெடுவாசலில் இணைந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞரான ராஜா தனது பணியைக் காட்டிலும் பல நாட்களை போராட்டக் களத்தில்தான் செலவிட்டு வருகிறார். சென்னை மெரினா கூட்டம் தொடங்கி மதுரை அலங்காநல்லூர் போராட்டம் வரை போராடிய ராஜா மற்றும் அவரது நண்பர்கள் தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நெடுவாசல்வந்துள்ளனர். அவர் இதுபற்றிக் கூறும்போது, தேர்தலின்போது ஓட்டு வாங்க தெரு, வீதி என சந்து பொந்தைக்கூட விடாமல் வீடுதோறும் வாக்குக்கேட்கும் அரசியல்வாதிகள், மக்களுக்கான திட்டத்தை எப்படி அவர்களைச் சந்திக்காமல், அவர்களது கருத்தைக் கேட்காமல் செய்யலாம். மக்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களைச் சந்தித்து அவர்களது கருத்தைப் பெறாமல் தான்தோன்றித்தனமாக செயல்படலாமா? மக்களுக்கான அரசு என வாய் வார்த்தை கூறிவிட்டாமல் போதுமா? மக்களுக்குப் பிடிக்காத, அவர்கள் வாழ்வாதாரத்தையே பாதிக்கக்கூடிய தீங்கு விளைவிக்கும் திட்டத்தைச் செய்வதுதான் மக்களுக்கான அரசா? விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அரசு எதுவும் செய்யாவிட்டால்கூட அதைக் கெடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்தாமல் இருக்கலாமே.

இதையும் படியுங்கள்: பயிர் இல்லேன்னா உயிர் இல்ல: செத்து மடியும் விவசாயிகள்

இவரைப்போலவே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது எனத் திடமாகக் கூறுகிறார் நெடுவாசல் பகுதியைச் சேர்ந்த நவமணி. இங்குள்ள இளைஞர்கள்தான் எங்களின் இந்த விழிப்புணர்ச்சிக்கான காரணம். நாங்கள் காட்டில் கிடந்து விவசாயம் செய்து படிக்கவைத்த படிப்புதான் இன்றைக்கு எங்கள் உழவுக்கு உலை வைக்கும் விஷயம் பற்றி எங்கள் ஊர்ப் பிள்ளைகளே எங்களிடம் எடுத்துக்கூற வைத்துள்ளது. என்னவென்று தெரியாமல் ஏதோ நாட்டுக்கு நன்மை தரும் திட்டம் என பலரது குரலைக்கேட்டு ஆய்விற்கு அனுமதித்தோம். ஆனால் அது எங்கள் மண் வளத்தை அழிக்கும் என்பதை எங்கள் மக்களுக்கு இளம் தலைமுறையினர்தான் புரிய வைத்தனர். அதன் விளைவாக வெடித்ததுதான் இந்தப் போராட்டம். வறட்சி நிலையிலும் ஊரில் அத்தனை பாடுகள் பட்டாலும் ஒருபோதும் விவசாயத்தை விட்டுக் கொடுத்தது இல்லை. எப்படி எதுவுமே பயன் இல்லை என்றாலும் காளைகளைப் பிள்ளைகளாக தங்கள் சக்திக்கு மீறி செலவு செய்து வளர்கிறார்களோ அதுபோலதான் நாங்களும் லாபம் நஷ்டம் என்ற எந்தவொரு கணக்கும் பார்க்காமல் மண் மீதான பாசத்தில் விவசாயத்தைச் செய்து வருகிறோம். இன்று நீங்கள் காண்கிற பசுமை எதுவும் இல்லாமல் வறண்ட பூமியாக மாறியபோதும் இங்கிருந்து வெளியேறாமல் அனைவருமாக ஒன்றுபட்டு இந்த ஊரின் மண் உழவுக்கானது; இதுவே எங்கள் இருப்பிடம் என வாழ்ந்து வருகிறோம். அரசு எங்கள் மண்ணில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். எங்களுக்கு விவசாயம்தான் வேண்டுமே தவிர எரிவாயு தேவையில்லை என்று நெற்றியில் அடித்ததுபோல் சொல்கிறார்.

உண்மையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் எரிவாயுவிலிருந்து வெளிவரும் புகைதான் நஞ்சுத் தன்மை கொண்டது என நினைக்கலாம். ஆனால் அதைவிட அதன் உற்பத்தியின் போது உருவாகும் கழிவுகள்தான் அதிக கேடுகளைத் தருகின்றன. இந்த ஹைட்ரோ கார்பன் கழிவுகளால் நீர், நிலம், காற்று என மனிதன் வாழத் தேவையான அத்தியவாசிய சுற்றுப்புறச் சூழல்அழிக்கப்படும். மத்திய அரசு தரப்பில் கூறுவதுபோல ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில்தான் வாயுக்கள் எடுக்கப்படுவதாக இருந்தாலும், அதன் தாக்கம் ஓட்டுமொத்த டெல்டா பகுதி விவசாயத்தையும் அழித்து அங்கு வாழும் மக்களை அகதிகளாக மாற்றக்கூடும்.

பல பாஜக தலைவர்கள் வளர்ச்சி நோக்கில் கொண்டுவரப்படும் அத்தனை திட்டங்களுக்கும் தமிழகத்தில் முட்டுக்கட்டை போடப்பட்டால் எப்படி எனக் கேட்கின்றனர். ஆனால் இது பற்றி பேசிய நெடுவாசல் இளைஞர் அரவிந்த், இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்கள் எங்களுக்கு வேண்டாம், ஆக்கப்பூர்வமான திட்டம் என்றால் நாட்டின் நலனுக்காக கண்டிப்பாக அதற்கு நாங்கள் துணைநிற்போம். ஆனால் விவசாயத்திற்கு எதிரான திட்டங்களை ஏற்க மாட்டோம்.
ஒரு உடலில் இதயம், நுரையீரல், சிறுநீரகம் எல்லாம் செயலிழந்துபோனால் உயிர்வாழ்வது சாத்தியமா? அப்படிதான் நீர், நிலம், காற்று எல்லாம் விஷமாகிப்போனால் மூளையாக உள்ள விவசாயம் வீணாகிப்போய்விடும். இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டில் எந்தத் தட்டுப்பாடு வந்தாலும் சமாளித்து விடலாம். ஆனால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் நாம் எங்கே போவது? இன்று ஏரிவாயு இறக்குமதியில் செலவழியும் அன்னிய செலாவணியை மிச்சம் செய்ய ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முன்னெடுத்தால் நாளை நாட்டில் விவசாயம் என்பது அடியோடு அழிந்து அதிக பணத்தில் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்யும் நிலைதான் மிஞ்சும். இந்தத் திட்டத்தினால் விளையும் எந்த வளர்ச்சியும் எங்களுக்கு வேண்டாம். என்கிறார்.

இதையும் படியுங்கள்: திம்மக்கா 200 ரூபாய்க்கு குழந்தையை விற்றாரா?

இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், மக்களுக்கு இத்திட்டத்தைப் பற்றி விளக்கப்படும். அப்போதும் மக்கள் இத்திட்டத்தை ஏற்காவிட்டால் கைவிடப்படும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆனால் மாநிலங்களவை உறுப்பினரான இல.கணேசன் ஒரு நாட்டிற்காக மாநிலத்தைத் தியாகம் செய்யலாம் என்றுகூறியது பலரையும் இதற்குப் பின்னர் உணமையிலேயே ஆபத்து இருக்குமோ என எண்ண வைக்கிறது. தமிழக முதல்வர் பழனிசாமியை நெடுவாசல் போராட்டக்குழுவினர் சந்தித்தபோது அவர்களிடம் இத்திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி அளிக்காது என உறுதி யளித்துள்ளது. மேலும், போராட்டத்தைக் கைவிடும்படியும் முதல்வர் கோரிக்கை விடுத்தார்.ஆனால்நெடுவாசல் மக்கள் கொட்டும் மழையிலும் கலைந்து செல்லாமல் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட்டால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் என கலையாமல் போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு பல அமைப்பினர் களும் இளைஞர்களும் ஆதரவளித்துள்ளனர். வாடிவாசலைப் போல நெடுவாசல் போராட்டமும் அறவழியில்நடந்து வருவது இதற்கான ஆதரவு பெருக காரணமாகவுள்ளது.

நாட்டின் முதுகெலும்பு எனக் கூறப்பட்ட விவசாயத்தின் சித்திரம் ரூபாய் நோட்டுகளிலிருந்து நீக்கப்பட்டு விஞ்ஞான வளர்ச்சியைக் குறிக்கும் அடையாளங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. உணவளிக்கும் விவசாயத்தைக் கோட்டை விட்டால் வளர்ச்சியை வைத்து என்ன செய்வோம்? உண்மையான வளர்ச்சி என்றால் அது தன்னிறைவான உணவு உற்பத்தியைத் தன்னகத்தே கொண்டது. நம்மிடம் இல்லாத எண்ணெய் வளத்தைத் தேடி இருக்கும் மண் வளத்தை இழந்துவிடக் கூடாது என்பதுதான் விவசாயிகளின் விருப்பம். அதுவே அவர்களைச் சார்ந்திருக்கும் பெரும்பாலான மக்களின் விருப்பமும்.

இதையும் படியுங்கள்: நிறுவனமயப்பட்ட அடக்குமுறையைச் சீரழியுங்கள்

இதையும் படியுங்கள்: முடியாதவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் 12,000 ரூபாயைப் போட்டுவிடுங்கள்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்