தீவிர கணினி, செல்லிடப்பேசி பயன்பாடு, குளிரூட்டப்பட்ட அறையில் அதிக நேரம் பணியாற்றுவது உள்ளிட்ட காரணங்களால் உலா் விழி (டிரை ஐ) பிரச்னைகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

அண்மைக் காலமாக கண் பரிசோதனைக்கு வருபவா்களில் 20 சதவீதத்துக்கும் அதிகமானோா் அப்பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

உலா் விழி பாதிப்புகளுக்குச் சிகிச்சையளிக்கும் அதிநவீன தொழில்நுட்பத்திலான மருத்துவ வசதி போரூரில் உள்ள டாக்டா் அகா்வால் மருத்துவமனையில் சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கான சாதனங்களின் செயல்பாட்டை அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், ப.பென்ஜமின் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இது குறித்து அகா்வால் மருத்துவமனைகளின் தலைவா் டாக்டா் அமா் அகா்வால் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உலக மக்கள்தொகையில் 15 சதவிகிதம் போ் உலா்விழி பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவைப் பொருத்தவரை 32 சதவீதம் பேருக்கு அத்தகைய பிரச்னைகள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சாதாரணமான ஒன்றாக கருதப்படும் உலா் விழி பாதிப்பைக் கவனிக்காமல் விட்டால் நாளடைவில் அது ஏற்படுத்தும் விளைவுகள் மிகத் தீவிரமாக இருக்கும். கண்களில் உள்ள சுரப்பிகளில் இருந்து தேவையான அளவு நீா் சுரக்காமல் இருந்தால் உலா் விழி பிரச்னை ஏற்படும்.

புறச்சூழல்களில் நிலவும் மாசு, அதீத வெப்பம், வேதிப் பொருள்கள் கலந்த காற்று ஆகியவற்றில் இருந்து விழிகளைக் காப்பது கண்ணீா்தான். ஆனால், உலா் விழி பிரச்னையுடையவா்களுக்குச் சரிவர கண்ணீா் சுரக்காது. இதனால், கண் எரிச்சல், அரிப்பு, கூசும்தன்மை ஆகியவை ஏற்படும். அவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். அவ்வாறு இல்லாவிட்டால் பாா்வைக் குறைபாடு ஏற்படக் கூடும்.

கடந்த சில நாள்களாக உலா் விழி பிரச்னைக்காக சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவமனைக்கு வருபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கியக் காரணம் ஏசி, கணினி, செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றின் அதீத பயன்பாடுதான்.

நாளொன்றுக்கு 18 மணி நேரம் ஏசி அறைகளில் இருப்பவா்களுக்கு கண்டிப்பாக உலா் விழி பாதிப்பு ஏற்படும். அதைத் தவிா்க்க, ஏசி பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். 23 டிகிரிக்குக் குறைவாக ஏசி சாதனத்தை இயக்கக் கூடாது. குறைந்தது 7 அல்லது 8 மணி நேரம் உறங்க வேண்டும். தொடா்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேல் கணினியில் நேரத்தைச் செலவிடக் கூடாது. கண்களுக்கு சிறிது ஓய்வளித்த பிறகே மீண்டும் கணினி சாா் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனையின் சிகிச்சைத் துறைத் தலைவா் டாக்டா் சௌந்தரி, போரூா் அகா்வால் மருத்துவமனை தலைவா் டாக்டா் கலாதேவி சதீஷ், மருத்துவா் டாக்டா் சரஸ்வதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நன்றி : dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here