தென்மேற்கு பருவ காற்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தீவிரம் அடைந்துள்ளதின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலைச்சரிவு பகுதிகளில் ஒருசில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய அதி கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சேலம், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். அதனையடுத்து அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலைச்சரிவு பகுதிகளில் ஒருசில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய அதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறியுள்ளனர். மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடனும் நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் தேவலா 36 செ.மீ., அவலாஞ்சி, கூடலூர் ஆகிய பகுதிகளில் 35 செ.மீ., மேல் கூடலூர் 33செ.மீ., சேருமுல்லை 32செ.மீ., மேல் பவானி 26 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. இன்று குமரிக்கடல் பகுதி, வட கிழக்கு அரபிக்கடல், குஜராத் கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கி.மீ வரை வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here