பெருமழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தை திமுக எம்எல்ஏக்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் நேரில் வழங்கினர். அதில், வாழ்வாதாரங்களை இழந்து துன்பத்தில் வாடும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவது பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவரின் கடமையே தவிர விளம்பரம் நோக்கம் ஏதும் இல்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டத்தின் சாலை உட்கட்டமைப்பு அடியோடு சாய்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே நீலகிரி மாவட்டத்தில் சீரமைப்பு பணிகளுக்காக முதல்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், பேரிடர் பாதித்த மாவட்டமாக நீலகிரியை அறிவிக்க வேண்டும் எனவும் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.