நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு முக்கிய காரணம் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளே: உயர்நீதிமன்றம்

0
182

நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் மெத்தன போக்கே நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு முக்கிய காரணம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை குற்றஞ்சாட்டியுள்ளது. 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை (65). மகன் நல்லதம்பி(45). இவர்கள் இருவரும் அதேபகுதியில் உள்ள குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற முயற்சிகள் எடுத்து வந்தனர். இதனால் இவர்களுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் விரோதம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில், அதிகாரிகள் ஆக்கிரமிப்புப் பகுதிகளை அளவீடு செய்தனர். அப்போது அவர்களுக்கு ஆக்கிரமிப்பு பகுதிகளை நல்லதம்பி காட்டியதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் திங்கள்கிழமை நல்லதம்பி மற்றும் வீரமலையை 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது. குளித்தலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இதனிடையே முதலைப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (36), பிரபாகரன் (27), கவியரசன் (34), சசிகுமார் (34), ஸ்டாலின் (22), சண்முகம் (34) ஆகியோர் மதுரை மாவட்ட 6 ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனர். இந்நிலையில் கரூர் அருகே சமூக ஆர்வலர், மகன் கொலை வழக்கை தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று விசாரித்தது. 

அப்போது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் மெத்தன போக்கே நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு முக்கிய காரணம் என குற்றம்சாட்டிய நீதிமன்றம் இரட்டைக்கொலை தொடர்பாக குளித்தலை டிஎஸ்பி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும் சம்பந்தப்பட்ட முதலைப்பட்டி குளத்தின் மொத்த அளவு என்ன? எந்த அளவுக்கு ஆக்கிரமிப்புகள் உள்ளன? எந்த அடிப்படையில் பட்டா வழங்கப்பட்டது என்பது பற்றி வருவாய் அலுவலர்கள் அறிக்கை அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.