தொழிலதிபர் நீரவ் மோடி(48), பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் மோசடி செய்துவிட்டு பிரிட்டனுக்கு தப்பியோடினார். இந்நிலையில் இவருக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது. அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை விடுத்த கோரிக்கையை ஏற்று லண்டன் நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தப்பி ஓடிய நிரவ் மோடி எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகின. பின்னர் நிரவ் மோடி லண்டனில் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருப்பதாக தெரியவந்தது. அவரை இந்தியாவிற்கு கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்தது.

அத்துடன் நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டு, அமலாக்கத்துறையின் கோரிக்கையை லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், நிரவ் மோடியை கைது செய்ய ஆணை பிறப்பித்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதையடுத்து நிரவ் மோடி விரைவில் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. அவரை கைது செய்தபிறகு, வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கின் விசாரணை தொடங்கும். நீதிமன்றத்தில் நிரவ் மோடியின் மீதான பண மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவரை நாடு கடத்த பிரிட்டன் அரசு உத்தரவிடும்.
நீரவ் மோடி கைது செய்யப்பட்டாலும், அவருக்கு ஜாமீன் கோர உரிமை உண்டு. அவரை நாடு கடத்துவது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு, அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் இதேபோன்ற கடன் மோசடியில் ஈடுபட்டு பிரிட்டனுக்குத் தப்பியோடிய மற்றொரு தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் தொழிலதிபர் நீரவ் மோடி அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் பெற்று முறைகேடு செய்தது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்டவை விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள அவர்களது பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here