சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா மரணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், அவரது பிரேத பரிசோதனை அறிக்கையைத் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் அமித் ஷா ஆவார். இந்நிலையில் இந்த வழக்கினை விசாரித்து வந்த சிபிஐ நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி அதிகாலை மரணமடைந்தார்.

நீதிபதி லோயா மரணம் குறித்து ’தி காரவன்’ இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மொஹித் ஷா, நீதிபதி லோயாவிடம் சாதகமான தீர்ப்புக்காக 100 கோடி ரூபாய் வரை தருவதாக பேசியிருப்பதாக லோயாவின் சகோதரிகளில் ஒருவர் அனுராதா பியான் கூறியிருந்தார். லோயாவின் தந்தை ஹர்கிஷனும் இதனை உறுதி செய்திருந்தார்.

மேலும், லோயா அதிகாலை 5 மணிக்கு மரணமடைந்ததாக மருத்துவமனையிலிருந்து அவரது குடும்பத்துக்குத் தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் அவரது மரணம் காலை 6.15 மணிக்கு ஏற்பட்டதாக மருத்துவமனை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதகாவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

மும்பையிலுள்ள உறவினர்களுக்குத் தெரிவிக்காமல் அவரது உடலை நேரடியாக சொந்தக் கிராமத்துக்குக் கொண்டு சென்று அவசரமாக இறுதிச் சடங்குகளும் செய்யப்ட்டன. இதனால் இவரது மரணம் படுகொலையாகவும் இருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்டது. இது தொடர்பாக, நீதிபதி ஏ.பி.ஷா இந்த மரணத்தைப் பற்றி உடனே விசாரிக்க வேண்டுமென்றும் கோரிக்கையும் விடுத்திருந்தார்.

இந்நிலையில் ’தி காரவன்’ இதழில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, மகாரஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிஆர் லோன் என்பவர், நீதிபதி லோயா மரணம் குறித்து வெளிப்படை மற்றும் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதேபோன்று காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவர் தஹ்சீன் பூனவாலாவும் இது தொடர்பாக மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்றது. அப்போது, நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மகாராஷ்டிரா மாநில அரசு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை திங்கட்கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here