நீதிபதி லோயா “படுகொலை”யை மறைக்க மகாராஷ்டிர முதல்வர் முயற்சி

நீதிபதி லோயா மரணத்தில் பாஜகவின் தில்லுமுல்லுகள் அம்பலம்

0
882
பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா முதன்மைக் குற்றவாளியாக இருந்த சொராபுதீன் ஷேக் (வலது) என்கவுன்டர் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதி லோயா (இடது) மர்மமான முறையில் மரணமடைந்தார்>

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா முதன்மைக் குற்றவாளியாக இருந்த சொராபுதீன் ஷேக் என்கவுன்டர் வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதி பி.எச்.லோயா மர்மமான முறையில் மரணமடைந்தார்; நீதிபதி லோயாவின் குடும்பத்தினர், அமித் ஷாவை வழக்கிலிருந்து விடுவிக்க மறுத்ததால் லோயா படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தை எழுப்பினார்கள். நீதிபதி லோயாவின் மரணம் தொடர்பான விவரங்களைத் திரட்டிக் கொண்டிருந்த வழக்குரைஞர் அபியான் பரஹாதேவை பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸின் மைத்துனர் சஞ்சய் ஃபட்னவிஸ் மார்ச் 5ஆம் தேதியன்று நள்ளிரவுக்குப் பின்னர் ஒரு மணியளவில் ஃபோன் செய்து மிரட்டியிருக்கிறார். இதற்கான ஆடியோ ஆதாரத்தை கேரவன் ஆங்கிலச் செய்திப் பத்திரிகை வெளியிட்டிருக்கிறது.

அமித் ஷாவுக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்க லோயாவை பல வழிகளில் கட்டாயப்படுத்தியுள்ளார்கள் என்பதை அவருடைய சகோதரி உறுதி செய்துள்ளார். இதற்கு உடன்படாத காரணத்தால் லோயா படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற வலுவான சந்தேகத்தை உறுதி செய்யும் ஆதாரங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன; உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் இந்த மரணத்தைப் பற்றி நியாயமான விசாரணை வேண்டும் என்று ஊடகங்களிடமே நேரடியாக பேசினார்கள். இது சுதந்திர இந்தியாவின் 70 ஆண்டு கால வரலாற்றில் யாரும் காணாத நிகழ்வாகும். ஆனால் மகாராஷ்டிர பாஜக அரசு, லோயாவின் மரணம் இயற்கையானது என்று சொல்லி பல ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அந்த ஆவணங்கள் ஜோடிக்கப்பட்டவை என்பது கேரவன் பத்திரிகையின் புலனாய்வில் அம்பலமானது.

நீதிபதி லோயாவின் மரணத்திலுள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக வேலை செய்து வரும் வழக்குரைஞர் அபியான் பரஹாதேவுக்கு முதல்வரின் மைத்துனர் சஞ்சய் ஃபட்னாவிஸே மிரட்டல் விடுத்ததும் இந்தப் “படுகொலை” சம்பவத்தை மகாராஷ்டிர அரசு மூடி மறைக்க விரும்புகிறது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.

இதையும் படியுங்கள்: நீதிபதி லோயாவின் மரணம் இயற்கையானதல்ல

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்