நீண்டகாலமாகப் பணவலிமை படைத்த இந்தியாவின் BCCI – ICCஐ பல் இல்லாத அமைப்பாக மாற்றியுள்ளது : விளாசும் மைக்கேல் வான்

Former England captain Michael Vaughan has said that International Cricket Council (ICC), the governing body of world cricket, is allowing India to produce pitches according to their whims and fancies.

0
244

அகமதாபாத்தில் இந்திய அணி பெற்ற வெற்றி ஆழமில்லாதது. அதில் யாரும் வெற்றி பெற்றவர்கள் எனக் கருத முடியாது. பிசிசிஐ அமைப்பின் பணபலம், ஐசிசி அமைப்பைப் பல் இல்லாத அமைப்பாக மாற்றிவிட்டது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் நடந்த 3-வதுடெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

டெஸ்ட் போட்டி தொடங்கிய 2-வது நாளிலேயே ஆட்டம் முடிந்தது. ஆடுகளத்தில் முதல் நாள் 13 விக்கெட்டுகளும், 2-வது நாளில் 17 விக்கெட்டுகளும் விழுந்தன. இந்தியத் தரப்பில் அக்ஸர் படேல் 11 விக்கெட்டுகளையும், அஸ்வின் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இரு அணிகளும் மிக வலிமையானதாக இருந்த நிலையிலும் ஆட்டம் 2 நாட்களில் முடிந்துள்ளது குறித்து ஆடுகளம் குறித்துப் பல்வேறு சந்தேகங்களும், ஆடுகளத்தின் தரம் குறித்த கேள்வியும் எழுந்தன. இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், விவிஎஸ் லட்சுமண் உள்ளிட்ட பலரும் ஆடுகளம் குறித்து விமர்சித்தனர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கால் வான் லண்டனில் வெளிவரும் தி டெலிகிராப் நாளேட்டில் கட்டுரை எழுதியுள்ளார். அதில் பிசிசிஐ அமைப்பு பற்றியும், ஐசிசி அமைப்பு குறித்தும் மைக்கேல் வான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

”கிரிக்கெட் உலகில் நீண்டகாலமாகப் பணவலிமை படைத்த இந்தியாவின் பிசிசிஐ அமைப்பு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அதிகாரத்தை மேலும் மழுங்கச் செய்து, பல் இல்லாத அமைப்பாக மாற்றியுள்ளது.
பிசிசிஐ அமைப்பு என்ன வேண்டுமானாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்யலாம், விருப்பப்பட்டதைச் செய்யவும் ஐசிசி அனுமதி அளித்துள்ளது. இது வேதனையளிக்கிறது.

கவலையளிக்கும் உண்மையான விஷயம் என்னவென்றால், இந்தியா முதல் டெஸ்ட்டில் தோற்று 1-0 என்று பின்தங்கி இருந்தது. ஆனால், 2-வது டெஸ்ட் போட்டியில், முதல் ஓவரில் இருந்து பந்து சுழலும் வகையில் ஆடுகளம் மாற்றி அமைக்கப்பட்டது. ஆட்டம் 3 நாட்களுக்குள் முடிந்துவிடும் என்பது பிசிசிஐ அமைப்புக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது.

5 நாட்கள் டெஸ்ட் போட்டி நடக்கும் என்று ஒளிபரப்பாளர்களிடம் பிசிசிஐ, ஐசிசி பேசியிருக்கும் நிலையில் 2 நாட்களில் ஆட்டம் முடிந்துள்ளதால், பணத்தைத் திருப்பிக் கேட்க வேண்டும். உள்நாட்டில் மோசமான ஆடுகளத்தை அமைத்ததால், வீரர்கள் சரியாக விளையாட முடியவில்லை. டெஸ்ட் போட்டி விரைவாக முடிந்துவிட்டதை பிசிசிஐ ஏற்க வேண்டும்.

5 நாட்களில் 2 நாட்களில் போட்டி முடிந்துவிட்டதால், மீதமுள்ள 3 நாட்களில் மைதானம் காலியாக உள்ளது. இனிமேல், டெஸ்ட் போட்டிக்கு ஒளிபரப்பு உரிமை கோரும்போது, பண விஷயத்தில் ஒரு முறைக்கு இரு முறை சிந்திக்க வேண்டும்.

அகமதாபாத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராகப் பெற்ற வெற்றி ஆழமானதோ, உண்மையானதோ இல்லை. இந்தப் போட்டியில் யாரும் வெற்றியாளர்கள் இல்லை என்பதே என்னுடைய கருத்து.

இந்திய அணி முழுமையாகத் திறமையை வெளிப்படுத்தவில்லை. ஆனால், சூழலுக்கு ஏற்றாற்போல் இந்திய அணி மாறிக்கொண்டது. எங்களை விட இந்திய அணியின் திறமை சிறந்ததாக இருந்தது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இரு அணி வீரர்களும், தங்களின் கிரிக்கெட் வாழ்க்கைக்காகப் போராடி வருகிறார்கள் என்பதை நியாயமாக நாம் ஏற்க வேண்டும். ஆனால், கடந்த 2 வாரங்களாக இந்த ஆடுகளத்தால் அவர்களின் நம்பிக்கை குலைந்துள்ளது.

ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் சேர்ந்து 250 ரன்கள் அடித்தன என்றால், அந்த ஆடுகளத்தைச் சிறந்த ஆடுகளம் எனக் கூறமுடியுமா? டெஸ்ட் போட்டி என்பது ஒரு பேட்ஸ்மேனுக்கு முதல் இன்னிங்ஸில் ரன் அடிக்க அதிர்ஷ்டம் இருக்க வேண்டும் என்று சொல்வதை ஏற்க முடியாது.

உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தப் புள்ளிகள் கணக்கில் எடுக்கப்படும் என்றால், இதுபோன்ற தரமற்ற ஆடுகளத்தை அமைத்தமைக்காக புள்ளிகளைக் குறைக்க வேண்டும். இந்த ஆடுகளம் உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உகந்தது அல்ல”.

இவ்வாறு மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here