மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் எம்.பி. மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வை 24 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமிழ் வழி வினாத்தாளை தேர்வு செய்து எழுதினார்கள்.

இதில் தமிழ் மொழி மாற்றம் செய்த வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன. எனவே அந்த வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது தமிழ் மொழி வினாத்தாளில் குளறுபடி இருப்பதாகவும், ஆங்கில வினாத்தாள் தான் இறுதியானது. அதன் அடிப்படையில் அகில இந்திய அளவில் நீட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது.

தமிழகத்தில் தரவரிசை பட்டியலை மாநில அரசு தான் வெளியிட வேண்டும் என மத்திய அரசு வக்கீல் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் தமிழ் மொழி வினாத்தாளில் குளறுபடி இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே தற்போது மாநில தரவரிசை பட்டியல் வெளியிடக்கூடாது என தெரிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் தரவரிசை பட்டியலை தற்போதைக்கு அரசு வெளியிடாது என உயர் நீதி மன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சி.டி.செல்வம், பசீர் அகமது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வுக்கு எந்த பாடத்திட்டத்தில் இருந்து வினாக்கள் தேர்வு செய்யப்படுகின்றன? எந்த அடிப்படையில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படுகிறது. நீட் வினாத்தாள்கள் மொழி பெயர்க்க எந்த அகராதியில் இருந்து வார்த்தைகள் எடுக்கப்படுகின்றன? என சி.பி.எஸ்.இ.க்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இணையாக தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறதா? போட்டி தேர்வு என்பது அனைவருக்கும் சமமானதாகவே இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இது குறித்து சி.பி.எஸ்.இ பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

நன்றி : மாலை மலர்

இதையும் படியுங்கள்