கருணாநிதி முதல்வராக இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்கு வரவில்லை என்றும் 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சி வந்த பிறகு தான் நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்தது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  கொரோனா தொற்று பரவலுக்கு இடையே தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று கூடியது. முதல் நாள் 16 நிமிடங்கள் மட்டுமே கூட்டம்  நடைபெற்றது. மறைந்த எம்எல்ஏக்கள் 23 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் 2வது நாளான இன்று கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது நீட் தேர்வு மனஅழுத்தத்தால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக சட்டப்பேரவையில் மு .க ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.  அதன் மீது பேசிய மு.க.ஸ்டாலின், ‘நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நீட்-க்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு இதுவரை ஒப்புதல் வாங்கவில்லை. மத்திய அரசு நம் மசோதாக்களை மதிக்கவில்லை.ஒரே நாளில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் குரலையும் மத்திய அரசு கேட்க மறுக்கிறது.

நீட் தேர்வில் தாலியை கழட்டிவிட்டு தேர்வை எழுத சொல்லியுள்ளனர்.நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை கண்டித்து கண்டன தீர்மானம் கொண்டு வருக. கருணாநிதி முதல்வராக இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்கு வரவில்லை.நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுத்தது திமுக. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை பெற்றதும் திமுக தான். 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சி வந்த பிறகு தான் நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்தது.மத்திய அரசு நீட் தேர்வை தமிழகத்தில் திணித்தபோது வேடிக்கை பார்த்தது அதிமுக தான்.நீட் தேர்வை எதிர்த்த சட்டப்போராட்டத்தில் தோற்று போனது அதிமுக.

நீட் தேர்வுக்கு பயந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்,தமிழக அரசின் நீட் எதிர்ப்பு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை.நீட் பிரச்சனையில் தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்துக்கொள்ளவில்லை. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எதிராக பேரவையில் கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும்,’ எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here