நீட் தேர்வுக்கெதிராக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களின் நிலைமை என்ன?- சட்டப்பேரவையில் ஸ்டாலின் கேள்வி

0
387

நீட் தேர்வுக்கெதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களின் நிலைமை என்ன என, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) திமுக செயல் தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை எதிர்த்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரு மசோதாக்களின் நிலை என்ன என்பது குறித்து கேள்வியெழுப்பினார். இதுகுறித்து அவர் பேசிய விவரம்:

நீட் தேர்வின் காரணமாக, மருத்துவர்கள் ஆக வேண்டுமென்ற ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுடைய எதிர்கால கனவு சிதைக்கப்பட்டு, இனி வரக்கூடிய காலங்களில் போதிய மருத்துவர்கள் கிராமங்களில் இல்லாத ஒரு சூழ்நிலை உருவாகிவிடும் என்ற ஒரு அச்சம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது. காரணம், அந்தளவிற்கு மாநிலத்தினுடைய கல்வி உரிமையை சிறிதும் மதிக்காமல் அதை மீறி, சர்வாதிகார ரீதியிலே புறக்கணித்து, மத்திய அரசு கொண்டு வந்திருக்கக்கூடிய இந்த நீட் தேர்வு, இன்றைக்கு மாணவிகளுடைய உயிர்களை மட்டும் இல்லாமல், அவர்களை தேர்வு எழுதுவதற்காக அழைத்துச் சென்ற பெற்றோர்களின் உயிர்களையும் காவு கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

நீட் கேள்வித்தாளில் இருக்கக்கூடிய பிழைகள் அதில் இருக்கக்கூடிய குழப்பம் ஏன் தேர்வு மையங்களிலும் கூட குழப்பம் இருக்கிறது. நீட் தேர்வின் முடிவுகள் வெளிவந்ததற்கு பிறகு இருப்பிடச் சான்றிதழிலும் தொடக்கத்தில் இருந்தே குழப்பம். இதனால், தமிழ்நாட்டு மாணவர்கள் மன அழுத்த பாதிப்புக்கு உள்ளாகி, ஆதிக்க சக்திகளால் சமூக நீதிக்கு ஒரு பெரிய பேராபத்து ஏற்பட்டிருக்கிறது.

உதாரணமாக, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களைச் சார்நதிருக்கக்கூடிய மாணவர்கள் தமிழ்நாட்டில் இருப்பதாக இருப்பிட சான்றிதழ் பெற்றுக்கொண்டு இப்பொழுது மருத்துவக் கல்லூரியில் சேரக்கூடிய ஒரு சூழ்நிலை வந்திருக்கிறது என மிகப்பெரிய குற்றச்சாட்டு தொடர்ந்து உலவிக்கொண்டு இருக்கிறது. எனவே, இருப்பிடச் சான்றிதழ் விவகாரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மோசடிகளைப் போல, இந்த ஆண்டும் நடைபெறாமல் இருப்பதை தவிர்க்க இந்த ஆண்டு ஒரு புதிய விதிமுறைகளை கொண்டு வரப்பட்டிருந்தாலும், மற்ற மாநிலத்தவர் எப்படியோ யாருடைய துணையோடோ ஏதோ சதி செய்து இங்கு வந்து சேர்ந்து விடுகிறார்கள். இந்த நிலையில், நீட் தேர்வுக்கு இதே அவையில் கடந்த 1-02-2017 அன்று, அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நான் கேட்கின்ற கேள்வி அந்த நீட் மசோதாவினுடைய கதி என்ன? என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. அந்த மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதா என்றும் புரியவில்லை. நீட் மசோதா குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு வரவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் அவர்களுக்கு ஒரு விளக்கக் கடிதம் வந்திருக்கிறது. அதுகுறித்தும் செய்திகள் வெளிவந்திருக்கிறது. எனவே, தமிழக அரசு மத்திய அரசுக்கு தீவிர அழுத்தம் கொடுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கக்கூடிய அந்த மசோதா குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? தொடர்ந்து மவுனம் சாதிப்பதற்கு என்ன காரணம்?

தமிழ்நாட்டு மக்களுடைய ஒட்டுமொத்த உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடிய வகையில், இந்த மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதாக்களுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க மறுத்து, அதை அப்படியே குளிர்பதன கிடங்கிலே போட்டு மூடி வைத்து, கூட்டாட்சி தத்துவத்திற்கே ஒரு கேலிக்கூத்தான நிலை உருவாகி இருக்கிறது. ஆகவே, இந்த அவையில் நான் தங்கள் மூலமாக கேட்டுக்கொள்ள விரும்புவது, நீட் மசோதாவின் தற்போதைய நிலை என்ன என்பதைப் பற்றி நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விளக்கிட வேண்டும். ஒருவேளை மத்திய அரசு அந்த மசோதாவை வேண்டுமென்றே விதிமுறைகளின் படி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பிலே போட்டு வைக்கப்பட்டிருக்கும் என்று சொன்னால், அந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் அனுமதிபெறவும், உடனடியாக மத்திய அரசுக்கு உத்தரவிடவும் தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக ஒரு வழக்கு தொடர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன் என்று முக ஸ்டாலின் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here