நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண்கள், எடுத்த சுமார் 110 மாணவர்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் கொடுக்கப்பட்டடிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண்கள் பெற்ற சுமார் 400 மாணவர்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மெடிக்கல் சீட் தரப்பட்டுள்ளது. இதுக்குறித்த தகவலை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் .

2017-ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 720-க்கு 150க்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களின் இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களில் வாங்கிய நீட் தேர்வு மதிப்பெண்களை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் ஆய்வு செய்தது. அதில் நீட் தேர்வில் 150க்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்று தேசிய தரவரிசையில் 5 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் பிந்தைய இடத்தை பிடித்தவர்களில் 1990 பேர் தனியார் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 530 பேர் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண்கள் எடுத்திருக்கின்றனர் என்று தெரிய வந்தது.

நீட் தேர்வில் 3 பாடங்களில் இரண்டில் ‘0’ அல்லது அதைவிட குறைவாக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு கூட மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது என்று புள்ளிவிவரம் சொல்கிறது.

Screen Shot 2018-07-17 at 1.54.10 PM

150-க்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் 1990 பேர் மருத்துவப் படிப்பில் தனியார் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள். இந்த 1990 பேரில் 400 பேர் இயற்பியல் – வேதியியல் பாடங்களில் 9க்கும் குறைவான ஒற்றை இலக்க மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 110 பேர் இந்த இரு பாடங்களில் ஏதேனும் ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ பூஜ்ஜியம் அல்லது அதைவிடக் குறைவான எதிர்மறை மதிப்பெண்களை பெற்றுள்ளனர். உயிரியல் பாடத்தில் சற்று கூடுதலான மதிப்பெண் எடுத்ததால் நீட் தேர்வில் அவர்களால் தேர்ச்சி பெற முடிந்துள்ளது. இவ்வாறு தேர்ச்சி பெற்ற 530 பேரில் 507 பேர் தனியார் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து ஓராண்டை முடித்துள்ளனர் என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்ட செய்தி கூறுகிறது.

தரவரிசையில் 50,000க்குள் இடங்களைப் பிடித்தவர்களால் தனியார் கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ.17 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை செலுத்திப் படிக்க வசதி இல்லை. அதனால் அவர்களால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. அதேநேரத்தில் மதிப்பெண்களே இல்லாமல், பணத்தை குவித்து வைத்திருப்பவர்களால் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கமுடிகிறது .

நீட் தேர்வு இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் தலா 180 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இத்தேர்வில் 500-க்கும் கூடுதலான மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் தான் அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்கும். 150-க்கும் குறைவான மதிப்பெண் என்பது எந்த வகையிலும் பரிசீலிக்கக் கூட தகுதியானதல்ல.

நீட் தேர்வு 2010-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட போது, அதில் ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண் தேவை என அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தகைய நிபந்தனை விதிக்கப்பட்டால் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற மாட்டார்கள், அத்தகைய சூழலில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர மாணவர்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதால் பாடவாரியாக குறைந்தபட்ச மதிப்பெண் நிபந்தனை நீக்கப்பட்டது.

நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்று தகுதி இல்லாத மாணவர்களுக்கு மெடிக்கல் சீட் தரப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Courtesy : Times Of India