ஜே.வி. இனியாள் கண்ணன்
பன்னிரண்டாம் வகுப்பு மாணவி

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்)

தமிழகத்தின் அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண் அனிதா. மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான உரிமை மறுக்கப்பட்டதால் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
மருத்துவர் ஆக வேண்டும் என்பது அவளது கனவாக இருந்தது. மிக முக்கியமாக, தமது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்டெடுக்க மருத்துவர் பணி உதவும் என்று அவள் நம்பியிருந்தாள்.
தினக்கூலிக்கு வேலை செல்லும் தந்தைக்கு பிறந்த மூன்று பிள்ளைகளில் ஒருவளான அனிதாவின் வெற்றி, தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளித்திருக்கும்.
மாநில கல்வி வாரியத்தால் நடத்தப்பட்ட பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வில், 1200 மதிப்பெண்ணில், 1176 மதிப்பெண்களைப் பெற்றபோதும், மருத்துவராகும் அவளது கனவு, மருத்துவ நுழைவுச் சேர்க்கை மறுப்பின் மூலம் தகர்க்கப்பட்டது.
*பாதிக்கப்பட்டார்கள். அத்தகைய தலைமுறையில் லட்சத்தில் ஒருவராக வளர்ந்த அனிதாவின் கனவு நொறுங்கியபோது அவருக்கு ஏற்பட்ட உளைச்சலையும், விரக்தியையும் எவராலும் புரிந்து கொள்ள முடியும்.
அனிதா உயிரை மாய்த்துக் கொண்ட உடனேயே, மிகப்பெரிய கோபக்கனல் தமிழ்நாட்டில் காணப்பட்டது. மத்திய அரசு செயல்படுத்திய தேசிய தகுதிகாண், நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வுக்கு மாநிலத்தில் விலக்கு அளிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவாக நின்றன. ஆனால், எதுவும் நடக்கவில்லை.
கடைசியில், அடுத்த கல்வியாண்டு வரும்போது இதுபற்றி குரல் கொடுக்கலாம் என்றவாறு கல்விக் கொள்கை வகுப்பாளர்களும், அரசியல் கட்சிகளும், சமூக பயன்பாட்டாளர்களும் காத்திருக்கத் தொடங்கினார்கள்.
இந்த விவகாரத்தில், மாநில அரசுகளின் உரிமைகள், மாநில கல்வி வாரியத்தன் அவசியம் போன்ற விவகாரங்களை விட, மேலும் ஆழமான பிரச்சனை புதைந்து கிடக்கிறது. அதுவே, பெருவாரியான மாணவ சமுதாயத்தின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.news 2.003இனியாள் கண்ணன்
.நீட் போன்ற சீரான தேர்வு முறைகள், சில முக்கிய பிரச்னைகளுக்கு காரணமாகின்றன.
* நீட் தேர்வுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கும் தனியார் தேர்வு மையங்களில் படிக்கும் அளவுக்கு ஏழைகள் மற்றும் நலிவடைந்த சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களால் இயலாது. அத்தகைய குடும்பத்தின் ஆண்டு வருமானத்துக்கு இணையாக நீட் தேர்வு பயிற்சி மையங்கள் கட்டணம் வசூலிக்கின்றன. 95 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு இந்த கட்டணம், அவர்களின் வாழும் சூழலுக்கு எட்டாத நிலையில் இருக்கிறது.
* நகர்ப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு தகுதி பெறும் பயிற்சி முறை பயனளிக்கிறது. திறன் வாய்ந்த ஆசிரியர்களும், சிறப்பான பயிற்சி மையங்களும் நகரங்களில் மட்டுமே நிறுவப்படுகின்றன.
* தற்போதுவரை, மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ள கிராமப்புற மாணவர்கள், கிராமப்புற மக்கள்தொகையின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடன், தங்களின் கிராமங்கள் அல்லது பாதியளவு நகர்ப்புறமாக மாறிய பகுதிகளிலேயே வசிக்கும் எண்ணத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே, நகர்ப்புறத்துக்கு சாதகமான நீட் தேர்வு முறைக்கு மாற, இது ஒரு எதிரான காரணியாக உள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள மருத்துவர்கள் நகரங்களை விட்டு கிராமப்புறங்களுக்கு மாற பெரும்பாலும் முன்வருவதில்லை. இதனால் நீண்ட காலத்தில், கிராமப்புற சுகாதாரம் கடுமையாக பாதிப்படையலாம்.
* தற்போதைய நிலையில், மத்திய பள்ளிக் கல்வி வாரிய பாடத்திட்டத்துக்கு ஏற்றாற்போலவே, நீட் தேர்வு முறை உள்ளது. பாரம்பரியமாகவே, சிபிஎஸ்இ பள்ளிகள் கல்விக் கட்டணம் கூடுதலாக வசூலிப்பவையாகவும், எண்ணிக்கையில் குறைவாகவும் உள்ளன.
* அரசியலமைப்பின்படி கல்வி என்பது மாநில விவகாரமாக இருக்கவேண்டும். மாநிலங்களில் செயல்படும் கிட்டத்தட்ட அனைத்து அரசு பள்ளிகளும் மாநில பாடத்தின்படி, மாநில அரசாலேயே நடத்தப்படுகின்றன. நீட் தேர்வுக்கு ஏற்றாற்போல, பாடத்திட்டத்தை மாற்றிக் கொள்ள மாநில அரசுகள் விரும்பினாலும், முதலில் அதற்கு வசதியாக மாநில பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு மறுபயிற்சி அளிக்க வேண்டும்.
* சீரான தேர்வுகள், பொதுவாகவே கல்லூரிக் கல்வி முறையுடன் ஒத்துப்போக முடியாத மாணவர்களை நிராகரிப்பதற்காக பயன்படுத்தப்படும். கல்வித் திறனை அளவிடுவது அதன் நோக்கம் இல்லை.
அனிதா உயிரிழப்பு சம்பவம், இந்த உண்மையை தெளிவாக நிரூபிக்கிறது. மாநில தேர்வு வாரியம் நடத்திய பொதுத் தேர்வில், 1200-க்கு 1176 மதிப்பெண்களை அனிதா பெற்றிருந்தார். ஆனால், அனிதாவை தகுதிக்குறைவானவராக மதிப்பிட்ட அதேவேளை, அவளை விட குறைவான மதிப்பெண்களைப் பெற்றவர்களால் மருத்துவ படிப்புக்கு எவ்வாறு தகுதி பெற முடிந்தது?
“மாணவர்களின் கண்ணோட்டத்தில் நீட் இல்லை”
தமிழ்நாட்டில் நீட் தேர்வு முறை, மாணவர்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கப்படவில்லை. ஒரு சக மாணவி என்ற முறையில் இந்த விவகாரத்தில் எனது பார்வை வேறு விதமானது.
திறமையான ஆசிரியர்களுக்கு உள்ள பற்றாக்குறையால்தான் கிராமப்புற மாணவர்கள் முக்கியமாக முடக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். இதை சரி செய்து விட்டால், அனிதா போன்ற திறமைசாலி மாணவர்களால் நிச்சயம் பரிணமித்து தங்களின் கனவை எட்டிப்பிடிக்க முடியும்.
நீட் போன்ற சீரான தேர்வில் வெற்றி பெற வேண்டுமானால், முதலில் போட்டி விடைத்தாளின் தன்மையை புரியச் செய்து வழிகாட்டும் ஆசிரியரும், அதற்கான பாடப் பயிற்சியும் மாணவர்களுக்குத் தேவை.
இத்தகைய சூழலை எதிர்கொள்ள, தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்துவதே சிறந்த தீர்வாக இருக்கும். ஒருங்கிணைந்த இந்தியாவை உறுதிப்படுத்த ஏற்கெனவே தனியார் துறையினர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். அமேசான், ஃபிலிப்கார்ட் போன்றவை, நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கும் பாட புத்தகங்கள் சென்றடைவதை உறுதிப்படுத்தி வருகின்றன.
கிராமங்களிலோ, பகுதியளவு நகர்ப்புற பகுதிகளிலோ எப்போதோ தேவைப்படும் நீட் போன்ற தேர்வுகளுக்கான புத்தகங்களை வாங்கித் தேக்கி வைக்க புத்தக விற்பனையகங்கள் தயாராக இல்லை. இத்தகைய சூழலில், தமிழகத்தின் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் ஒரு சில கணிப்பொறிகளாவது மாணவர்களின் தேவைக்காக ஒதுக்கப்பட்டிருப்பது சாதகமான அம்சம்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மின்னணு ரீதியில் நீட் தேர்வு தொடர்பான நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்களின் சொற்பொழிவு காணொளிகள், பரிசோதனைக் கூட செய்முறையை விவரிக்கும் அனிமேட்டட் காட்சிகள், மாநில மொழிகளில் தேர்வுக்கு தகுதி பெறுவதற்கான வழிமுறையை விளக்கும் காணொளிகளை இணையத்திலோ அல்லது மாணவர்களுக்கான கணிப்பொறிகளிலோ பதிவேற்ற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*இது எல்லா மாணவர்களும் அணுக போதுமானதாக இருக்காது. ஆனால், மருத்துவ படிப்புகளில் சேர உண்மையிலேயே அக்கறை காட்டும் மாணவர்களுக்கு தேர்வுக்கு தயாராவதற்கான போதுமான வாய்ப்புகளை இது உருவாக்கும்.
இரண்டாவது முக்கியமான விஷயம் வழிகாட்டுதல். தகவல் தொழில்நுட்பத்தால் இதில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்க முடியும். தமிழ்நாட்டில் கிராமங்கள்தோறும் இன்று செல்லிடப்பேசிகளும், இணைய சேவைகளும் விரிவடைந்து காணப்படுகின்றன. எனவே, மின்னணு சார்ந்த வழிகாட்டுதல்கள் இன்றைய காலகட்டத்தின் இன்றியமையாத தேவை. ஆனால், இதில் துல்லியான இடைவெளி நிலவுகிறது.
நமது மாநிலத்தின் ஒரு பகுதியில், ஆழமான சமூக நல மனப்பான்மை கொண்ட ஆசிரியர்களும், தீவிர வழிகாட்டுதலைத் தேடிக் கொண்டிருக்கும் மாணவ சமுதாயமும் இருக்கவே செய்கிறார்கள். இதுபோன்றவர்களை இணைக்க செல்லிடப்பேசி செயலியை உருவாக்கி, அதில் ஆர்வம் உள்ள மாணவர்கள் பதிவு செய்யவும், அவர்களுடன் விருப்பம் உள்ள ஆசிரியர்கள் ஸ்கைப், வாட்ஸ்ஆப் போன்ற செயலிகள் மூலம் கலந்துரையாடவும் ஒரு மேடையை உருவாக்கித் தந்தால், கிராமப்புற மாணவர்களும் நீட் தேர்வை எளிதாக அணுக நிலவும் தடைகளை தகர்க்கலாம்.
இந்த நோக்கத்துடன் ஏற்கெனவே சில அரசுகள் கிராமப்புற ஆசிரியர்களுக்காக பயிற்சிப்பட்டறைகள் நடத்தியிருக்கலாம். இதன் மூலம் மாணவர்கள் சரியாக படிக்கவும் தேர்ச்சி பெறவும் உதவலாம் என்ற நம்பிக்கையில் அரசுகள் முயன்றிருக்கலாம்.
ஆனால், நடைமுறையில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தி அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிக காலம் ஆகலாம். இதனால் இது யதார்த்தமாகாது.
news 2.004INSTANTS
விருப்பமுள்ள ஆசிரியர்களையும் தேவையுள்ள மாணவர்களை ஒருங்கிணைப்பதும்தான் தற்போதைய காலகட்டத்தின் அவசியம். இதன் மூலம் மட்டுமே கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கையை மருத்துவ கல்லூரிகளில் பெருக்க முடியும்.
மூன்றாவது முக்கிய அம்சமாக, “எம்சிக்யூ” எனப்படும் பல விடை வாய்ப்புகளை (Multiple Choice questions) வழங்கும் சீரான போட்டித் தேர்வுக்கு தயாராக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக போட்டி வினாக்களை எதிர்கொள்ள மாணவர்களைத் தயார்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு சம்பந்தப்பட்ட மாணவரின் வெற்றி விகிதம் அதிகமாகும். தனியார் பயிற்சி மையங்கள் இதுபோன்ற உத்திகளையே கையாளுகின்றன. மேலதிக வினாத்தாள்களை தயாரித்து அதில் தங்களிடம் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு அதீத பயிற்சி அளிக்கின்றன.
இங்கும் தொழில்நுட்ப வசதியை நம்மால் பயன்படுத்த முடியும். தமிழகத்தில் இப்போது கிட்டத்தட்ட எல்லா மாணவர்களிடமும் செல்லிடப்பேசியோ அல்லது அதை வாங்கும் வாய்ப்போ உள்ளது. எனவே, அவர்களுக்கான பயிற்சியை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக் வேண்டும்.
மாநில அரசின் கல்வித்துறையில் ஏராளமான தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களின் நிபுணத்துவத்தைக் கொண்டு பல வினாக்களை தயாரிக்க முடியும். இந்த வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் வழங்க பிரத்யேகமாக செல்லிடப்பேசி செயலிகளை உருவாக்கலாம். இணையதளத்திலோ அல்லது செல்லிடப்பேசி செயலி மூலமாகவோ அவற்றை பதிவேற்றம் செய்யலாம்.
*பாடவாரியாகவும், கடினமான வினாக்கள் கலந்த வினாத்தாள்கள் வாரியாகவும் பிரித்தெடுத்து அடுத்தடுத்த நிலைக்கு மாணவர்கள் தேர்ச்சி பெற்று பயிற்சி பெறும் வாய்ப்பை அந்த செல்லிடப்பேசி செயலிகள் மூலம் உருவாக்கலாம். இவற்றை முற்றிலும் இலவசமாகவே அரசு வழங்க வேண்டும். இதன் மூலம் இருக்கும் இடத்திலேயே இருந்தபடி போட்டித்தேர்வுப் பயிற்சியை மாணவர்கள் பெற முடியும்.
அந்த செல்லிடப்பேசி செயலியில் அனாலிட்டிக்ஸ் முறையில் ஆய்வு செய்து, மாணவர்கள் எந்த பகுதியில், எந்த பாடத்தில் பலவீனமாக இருக்கிறார்களோ அதை அறிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தித் தர முடியும். இதைக் கொண்டு பலவீனமானதாக கருதப்படும் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தங்களை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
போட்டித் தேர்வுகளுக்கான தேர்ச்சியில் தன்னம்பிக்கையுடன் கிராமப்புற மாணவர்களும் பங்குபெற இதுபோன்ற வாய்ப்புகளே பயன் தரும். இந்தப் பிரச்னைகளில் இருந்து நமது கிராமப்புற சமூகம் மீள, என்னால் இயன்ற பங்களிப்பை தொடர்ந்து வழங்குவேன்.
(தமிழகத்தைச் சேர்ந்த கட்டுரையாளர் இனியாள் கண்ணன். டெல்லி சன்ஸ்கிரிதி பள்ளியில் பன்னிரண்டாவது வகுப்பில் படித்து வருகிறார். பெண்ணுரிமைகள் மற்றும் மாணவர் நல செயல்பாடுகளில் ஆர்வம் மிக்கவர்)

courtesy:bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here