நீங்கள் கேட்காத உண்மைகள்: ”டைட்டானிக்” கப்பலை மூழ்கடித்தது பனியா அல்லது தீயா?

ஒரு செய்தியாளரின் தொடர் கேள்விகள் புதிய பார்வையைத் தந்துள்ளன.

0
339
கடலுக்கடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட டைட்டானிக் கப்பலின் மிச்சங்கள்.

இங்கிலாந்தின் சவுத்தாம்டனிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் வரும் வழியில் டைட்டானிக் சொகுசுக் கப்பல் மூழ்கி 1500க்கும் மேலானோர் உயிரிழந்தார்கள்; இந்தச் சம்பவம் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதியன்று நடந்தது; வடக்கு அட்லான்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி டைட்டானிக் இரண்டாக பிளந்தது என்று சொல்லப்பட்டும் நம்பப்பட்டும் வந்தது; ஆனால் இந்த விபத்தைப் பற்றி 1985ஆம் ஆண்டு முதல் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் செய்தியாளர் செனான் மொலோனி, கப்பலின் நிலக்கரிக் கிடங்கில் உருவான நெருப்புதான் டைட்டானிக்கை மூழ்கடித்தது என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டியுள்ளார். கடலுக்கடியில் 12,500 அடி ஆழத்துக்கு மூழ்கிய டைட்டானிக்கின் மிச்ச சொச்சங்கள் 1985ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கிலாந்திலுள்ள பாதுகாப்பு அறை ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட டைட்டானிக் கப்பலின் புகைப்படத்தில் 30 அடி நீளத்துக்கு தீயினால் பாதிக்கப்பட்ட வெளிப்புறம் தெரிகிறது; இந்தப் பாதிப்புக்கு கப்பலின் நிலக்கரிக் கிடங்கிலிருந்து உருவான தீ காரணமாக இருக்கலாம்.

நிலக்கரிக் கிடங்கில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை டுபேஜ் கவுன்டி ரெஜிஸ்டர் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 26 (வெள்ளிக்கிழமை) தனது ஏழாம் பக்கத்தில் பதிவு செய்திருந்ததை இங்கே காணலாம்:

போராடி அணைக்க முடியாத அளவுக்குத் தீப் பற்றியதை பதிவு செய்த ஆவணம் இது.
போராடி அணைக்க முடியாத அளவுக்குத் தீப் பற்றியதை பதிவு செய்த ஆவணம் இது.

டைட்டானிக்கின் நிலக்கரிக் கிடங்கிலிருந்து தீ பரவியதைப் போராடி அணைத்தார்கள் என்பதை 1912இல் பல்வேறு ஆவணங்களில் பதிவு செய்துள்ளார்கள்; இந்தத் தீ கப்பலின் எஃகு வெளிப்புறத்தின் 75 சதவீத வலிமையைத் தின்றுவிட்டது; அந்த எஃகு வலிமை குன்றாமல் இருந்திருந்தால் பனிப்பாறையின் மோதலைத் தாங்கி நின்றிருக்கும். பனிப்பாறையில் மோதிய 2 மணி நேரம் 40 நிமிடங்களில் கப்பல் கடலுக்கடியில் மூழ்கிவிட்டது; கடலுக்கடியிலிருந்து கிடைத்த கப்பலின் எச்சங்களில் பனிப்பாறையால் குத்திக் கிழிக்கப்பட்டதற்கான எந்தத் தடயங்களும் இல்லை; லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த கில்லர்மோ ரெய்ன், இந்தத் தீ கொஞ்ச காலமாகவே அணைக்கப்படாமல் இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று சொல்கிறார்; இதனால் வெப்ப நிலை 1000 டிகிரி செல்சியஸை எட்டியிருக்கக்கூடும் என்கிறார். இந்த உயர் வெப்பநிலையே கப்பலின் வெளிப்புற எஃகை முழுமையாக பலவீனப்படுத்தியிருக்கும் என்று பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் உலோகவியல் அறிஞர் மார்டின் ஸ்ட்ராங்வுட் சொல்லியிருக்கிறார்.

டைட்டானிக்கின் புகைப்படத்தில் தெரிகிற 30 அடி நீளப் பாதிப்பு கப்பலின் வெளிப்புறத்தில் தீயினால் உண்டான பாதிப்பிற்கான மறுக்க முடியாத அத்தாட்சியாக இருக்கிறது; 1913இல் பதிவான நீதிமன்ற ஆவணங்களில் “டைட்டானிக் கடலுக்குள் செல்வதற்கு தகுதியில்லாத நிலையிலிருந்தது” என்ற வாக்குமூலத்தை கப்பலில் பணிபுரிந்த தாமஸ் ஒயிட்லி கொடுத்துள்ளார். சவுதாம்டனில் புறப்படும்போது கப்பலுக்குள் தீப்பற்றி எரிகிற தகவலை அதிகாரிகளிடமிருந்து மறைத்துவிட்டார்கள். இதனை அப்போது ஆய்வு செய்த மாரிஸ் கிளார்க் தெரிவித்துள்ளார். பனியினால் அல்ல, தீயினால்தான் டைட்டானிக் அழிந்தது என்பதை நிறுவும் அறிவியலாளர்களின் முயற்சிக்கு மாற்றுக் கருத்துகளும் உள்ளன.

இதையும் படியுங்கள்: 40 வருடங்களாக மறைக்கப்பட்ட ரகசியம் உங்களுக்காக

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்