நீங்கள் ஆர்.எஸ்.எஸ் “ஷாகா”வுக்கும் வகுப்புகளுக்கும் செல்கிறீர்களா? இந்தச் செய்திக் கட்டுரையை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும். ”நான் யார் என்று தெரியாமலேயே நீங்கள் எப்படி என்னை வெறுக்க முடியும்?” என்கிற ஒரு கேள்விதான் அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பின இசைக்கலைஞர் டேரில் டேவிஸை அங்குள்ள வெள்ளையின பயங்கரவாத அமைப்பான கு க்ளக்ஸ் க்ளானை (Ku Klux Klan) அணுக வைத்தது. வெள்ளையின மக்களே உயர்ந்தவர்கள்; கறுப்பின மக்களும் பிற இனத்தவர்களும் தாழ்ந்தவர்கள் என்பதே கு க்ளக்ஸ் க்ளானின் தத்துவம்; இந்தத் தத்துவத்தை எதிர்ப்பவர்களை, மனித சமத்துவ சிந்தனையை முன்னெடுப்பவர்களை இந்தப் பயங்கரவாத அமைப்பினர் படுகொலை செய்வார்கள். வாஷிங்டன் மாநிலத்தின் க்ளான் தலைவராக இருந்த ரோஜர் கெல்லியைச் சந்திக்க டேரில் டேவிஸ் நேரம் கேட்டார். தான் கறுப்பர் என்பதால் அவர் நேரம் ஒதுக்குவதில் தயக்கம் காட்டலாம் என்பதால் தனது வெள்ளைக்கார செயலர் மேரி மூலமாக நேரம் கேட்டார் டேவிஸ். ”எனது குரலைக் கேட்டு கறுப்பர் என்று அழைப்பைத் துண்டித்துவிட வாய்ப்பு இருந்தது; எனவே வெள்ளையினப் பெண்ணான எனது செயலர் மூலம் நேரம் கேட்டேன்” என்கிறார் டேவிஸ்.
எனது ஹோட்டல் அறைக்குள் தனது மெய்க்காப்பாளருடன் வந்தார் ரோஜர் கெல்லி. மெய்க்காப்பாளர் துப்பாக்கி வைத்திருந்தார். ”என்னைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது; ஆனால் நீங்கள் என்னைக் கொல்ல வேண்டும் என்று நம்புகிறீர்கள்; அது ஏன்?” என்று பேச்சு ஆரம்பமானது; பைபிளிலேயே இனங்கள் வேறு வேறு என்று சொல்லப்பட்டுள்ளது என்றார் கெல்லி; அவர் சொன்னதையெல்லாம் முழுமையாக காது கொடுத்துக் கேட்டேன். நானும் பைபிள் வைத்திருந்தேன். எல்லோரும் சமம் என்பதைத்தான் பைபிள் சொல்கிறது என்பதை பைபிளின் வசனங்கள் மூலம் விளக்கினேன். ஒருவரை ஒருவர் அறியாமல் இருப்பதுதான் பயத்துக்கு வித்திடுகிறது; பயத்தின் மூலம் வெறுப்பு தொடங்குகிறது. வெறுப்புதான் அழிவுக்கு இட்டுச் செல்கிறது. பயத்தைக் கட்டுப்படுத்தவில்லையென்றால் வெறுப்பும் அழிவும் தாண்டவமாடும். இதற்கெல்லாம் ஊற்றுக்கண்ணாக இருக்கும் அறியாமையை வெல்வதற்கு நாம் முதலில் சரிசமமாக உட்கார்ந்து பேச வேண்டும். 150 வருடங்களாக செயல்படும் பயங்கரவாத அமைப்பான கு க்ளக்ஸ் க்ளானுடன் சரிசமமாக உட்கார்ந்து பேசிய முதல் கறுப்பனாக நான் இருந்தேன். எனது கறுப்பின நண்பர்கள் சிலர்கூட “எனக்குப் பைத்தியம்” என்று முடிவு கட்டிவிட்டார்கள். ரோகர் கெல்லிக்கு என் மீது குறைந்தபட்ச நம்பிக்கை உருவாகவே இரண்டு வருடங்களாக தொடர்ந்து பேச வேண்டியிருந்தது.
இரண்டு வருடங்களுக்குப் பின்னரே அவர் என் வீட்டுக்கு வர ஆரம்பித்தார்; அதற்கு முன்பு எனது இசைக் கச்சேரிகளுக்கு வந்திருக்கிறார். ஆனால் வெள்ளையினத்தின் உயர்வு பற்றிய அவரது நம்பிக்கை மாறவில்லை. பின்னர் அவர் கு க்ளக்ஸ் க்ளானின் தேசியத் தலைவராக உயர்ந்தார். நான் அவரிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். கு க்ளக்ஸ் க்ளானின் பேரணிகளுக்குச் சென்றேன். என்னை எல்லோரும் விசித்திரமாக பார்த்தார்கள். பல வருடங்களுக்குப் பின்னர் ரோஜர் கெல்லி என்னால் முன் வைக்கப்பட்ட “அனைவரும் சமம்” என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டார். கு க்ளக்ஸ் க்ளானிலிருந்து வெளியேறினார். கடந்த 30 வருடங்களில் இதைப்போல சுமார் 200 பேர் என்னோடு உட்கார்ந்து பேசியதால், கு க்ளக்ஸ் க்ளானின் சித்தாந்தம் உண்மைக்குப் புறம்பானது என்பதைப் புரிந்துகொண்டு அதிலிருந்து வெளியே வந்து எல்லா மக்களையும் சரிசமமாக மதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். என்னை விசித்திரமாக பார்த்தவர்களைப் பார்த்து மனம் குமைந்திருந்தால் இது நடந்திருக்காது அல்லவா? அறியாமைதான் பயத்துக்குக் காரணமாகிறது. அறியாமையைக் களைவதற்கு கருத்து வேறுபாடு கொண்டவர்கள் உட்கார்ந்து பரஸ்பரம் பேசிக்கொள்வதுதானே சரியாக இருக்க முடியும்.
எனது தாயும் தகப்பனும் பஸ்களில் பின் இருக்கைகளில் மட்டுமே பயணம் செய்ய முடிந்தது. எல்லோரும் பயன்படுத்தும் நீர் ஆதாரங்களைப் பயன்படுத்த முடியவில்லை. எல்லா ஹோட்டல்களிலும் தங்க முடியவில்லை. அவர்கள் போராடியதால் இன்றைக்கு என்னால் எல்லா ஹோட்டல்களிலும் தங்க முடிகிறது; பஸ்களில் எங்கு வேண்டுமானாலும் உட்கார முடிகிறது. இதைப் போலவே 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் ஜனாதிபதியாகியிருக்க முடியாது. பத்தாண்டுகளுக்கு முன்பு கறுப்பினத்தவரான ஒபாமாவை ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்குக் காலம் கனிந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கறுப்பினத்தவர்களைப் படுகொலை செய்த கு க்ளக்ஸ் க்ளான் உறுப்பினர்கள் தண்டனையில்லாமல் தப்பி வந்தார்கள்; இன்றைக்கு அந்த வழக்குகள் மறு விசாரணை செய்யப்படுகின்றன. 85 வயதான கு க்ளக்ஸ் க்ளான் உறுப்பினருக்கு ஆயுட்கால தண்டனை கிடைக்கிறது. அன்றைக்கு இல்லாத சாட்சியங்கள் எப்படி இப்போது கிடைத்தன? மக்கள் மாறியிருக்கிறார்கள். உண்மைகள் புலப்படத் தொடங்கியுள்ளன. சமூகம் மாறியிருக்கிறது.
இதையும் அவசியம் படியுங்கள்: ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்
இதையும் படியுங்கள்: India’s flawed policy led to loss of over 300 lives