50 ஆண்டுகள் தன்னை தமிழகத்துக்கு அர்ப்பணித்துக் கொண்ட ஸ்டாலின் வருகிறான் என்ற நம்பிக்கையோடு நீங்கள் அளித்திருக்கும் கோரிக்கைகளை ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் நிறைவேற்றித் தருவேன்”என கிருஷ்ணகிரி மாவட்ட ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்வில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதியளித்துள்ளார். இன்று காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி, கே.பூசாரிப்பட்டி சாலையில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார். ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

நான் நலம், நீங்கள் நலமா? நான் ரெடி, நீங்கள் ரெடியா? நீங்கள் இங்கு வரும்போது நுழைவு வாயிலில் நம்முடைய தோழர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் அங்கு பதிவு செய்து கொண்டிருப்பார்கள். உங்கள் கோரிக்கைகள் – பிரச்சினைகளை அங்கு பதிவு செய்திருப்பீர்கள். அவ்வாறு பதிவு செய்தவுடன் உங்களுக்கு ஒரு ரசீது தந்திருப்பார்கள். அவ்வாறு அந்த ரசீதை நீங்கள் வாங்கவில்லை என்றால் நம்முடைய தோழர்களிடம் வெளியில் செல்லும்போது தயவுசெய்து வாங்கிச் செல்லுங்கள் என அவர் தெரிவித்தார்.

அது இருந்தால் உரிமையோடு என்னிடத்தில் நீங்கள் கேள்வி கேட்க முடியும். இப்போது நீங்கள் இங்கு பல்லாயிரக்கணக்கில் வந்திருக்கிறீர்கள். அத்தனை பேரையும் பேச வைக்க முடியாது. அது உங்களுக்கு நன்றாக தெரியும். அதனால் 10 பேரை மட்டும் பேச வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். நீங்கள் கொடுத்த மனுக்கள் இந்தப் பெட்டியில் இருக்கின்றன. நான் அதில் 10 பேர் மனுக்களை எடுக்கப்போகிறேன். அந்த மனுவை எடுத்து, அதில் யார் பெயர் இருக்கிறதோ, அவர்கள் சுருக்கமாக தங்கள் பிரச்சினையை சொல்ல வேண்டும் என கூறினார்.

குடிநீர் பிரச்சினை, தெருவிளக்கு பிரச்சினை, சுகாதாரச் சீர்கேடு பிரச்சினை, பள்ளிக்கூடம், மருத்துவமனை, பேருந்து வசதி, ஓய்வு ஊதியம், முதியோர் உதவித்தொகை, 100 நாள் வேலைத் திட்டம், ரேஷன் கடைகளில் இருக்கும் பிரச்சனைகள் இதுபோன்ற மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளைத் தான் பேசப் போகிறீர்கள். எனவே தயவு செய்து சுருக்கமாக பேச வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் தொடக்கவுரையாற்றினார். நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் பேசிய விவரம் வருமாறு:

1990-ஆம் ஆண்டு தலைவர் கலைஞருடைய ஆட்சிக் காலத்தில் இந்த நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் மக்கள் நலப் பணியாளர்கள் திட்டம். 13,500 மக்கள் நலப் பணியாளர்கள் நம் கழக ஆட்சியில் நியமிக்கப்பட்டார்கள். 1991-ஆம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். மக்கள் நலப்பணியாளர்கள் கட்சி சார்பில் நாம் தேர்ந்தெடுக்கவில்லை. முறையாக அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சென்று முறைப்படி நேர்காணல் வைத்து தேர்ந்தெடுத்தோம். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் சத்துணவு அமைப்பாளர்கள், அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை இருந்தால் போதும், அத்தனை பேரையும் தேர்ந்தெடுத்து வைத்தார்கள் என அவர் கூறினார்.

அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று கலைஞர் தலைமையிலான ஆட்சி அமைந்த போது, அ.தி.மு.க.வினரை அவர் வேலையைவிட்டுத் தூக்கவில்லை.  “நான் அவர்களை கட்சிக்காரர்களாக பார்க்கவில்லை. அவர்களை இந்த நாட்டின் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களாக பார்க்கிறேன்” என்று கூறி கலைஞர் அவர்களைப் பணியில் நீடிக்கச் செய்தார். 1996 தேர்தலில் மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சொன்னார். அதேபோல ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே அத்தனை பேருக்கும் வேலை கொடுக்கப்பட்டது.

அதற்குப் பிறகு 2001 தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் மறுபடியும் அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அதற்குப்பிறகு மக்கள்நலப் பணியாளர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள். நம்முடைய வழக்கறிஞர் வில்சன் அவர்கள் நேரடியாக ஆஜராகி வாதாடி வெற்றி பெற்று மீண்டும் அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கிக் கொடுத்தார். ஆனால் அந்த அரசு அவ்வாறு செய்யாமல் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு வாங்கி விட்டது.

இப்படி ஒரு நிலை. நிச்சயமாக தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் வேலை இழந்து தவித்துக் கொண்டிருக்கும அவர்களுக்கு அல்லது அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு மீண்டும் அந்த பணி வழங்கப்படும் என்ற உறுதியை, நம்பிக்கையை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். முதலில் மக்களுக்கு முக்கியம் விவசாயம். அது இருந்தால் தான் மனிதன் உயிர் வாழ முடியும். விவசாயிகள் சேற்றில் கை வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும். இந்த நாட்டின் முதுகெலும்பு அவர்கள் தான் என்று ஸ்டாலி கூறினார்.

அடுத்து குடிநீர், மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் ஒன்று. குடிநீர் வடிகால் வாரியம் என்ற திட்டத்தை உருவாக்கித் தந்தவர் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள். என்னுடைய வாழ்க்கையில் நான் மறக்க முடியாத சில செய்திகள் உண்டு. அதில் ஒன்று நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக – துணை முதலமைச்சராக இருந்தபோது, இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றும் அந்த பொறுப்பை நான் தான் மேற்கொண்டேன்.

அந்த திட்டம் 616 கோடி ரூபாய். அதாவது தண்ணீர் இல்லாத காடாக இருந்த இராமநாதபுரத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதற்காக தலைவர் கலைஞர் அவர்கள் அந்த பணியை என்னிடத்தில் ஒப்படைத்தார்கள். நாங்கள் அந்தப் பணியை 12 மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டு, 10 மாதத்திற்குள் அந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்தேன்.

அதேபோல கிருஷ்ணகிரி – தருமபுரி, இந்த 2 மாவட்டங்களுடைய பிரச்சினை குடிநீர்தான். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் வந்தால் குடிநீர்ப் பிரச்சினை தீர்ந்துவிடும். இங்கு கிடைக்கும் தண்ணீரில் அதிகப்பட்டு ப்ளோரைடு கலந்து வருகிறது. இதனால் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள், கேன்சர் நோய்கள் வரும் நிலை இருந்தது. இந்த நிலையைப் போக்க வேண்டும் என்பதற்காக தலைவர் கலைஞர் அவர்கள் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற முன்வந்தார். இதற்காக ஜப்பான் நாட்டிற்கு என்னை அனுப்பி வைத்தார்கள். அந்த நாட்டிற்கு சென்று அங்கு இருக்கும் வங்கி நிர்வாகிகளிடம் பேசி, அதற்குப் பிறகு நிதியைப் பெற்று வந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்றினோம்.

அதற்குப் பிறகு அந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. 2008-ஆம் ஆண்டு நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் நேரடியாக தருமபுரிக்கு வந்து அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் என்பது வரலாறு. கிட்டத்தட்ட 99 சதவீதம் அந்தப் பணி முடிந்து விட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது. அதற்குப் பிறகு அந்த திட்டத்தை அ.தி.மு.க.வினர் உடனே நிறைவேற்றி இருக்கலாம். ஆனால் அவர்கள் நிறைவேற்றவில்லை. காரணம் இந்த திட்டம் வந்துவிட்டால் ஸ்டாலினுக்கு பெயர் வந்து விடும். தி.மு.க.விற்கு பெயர் வந்துவிடும் என்ற எண்ணம்தான். அதற்குப் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் நம்முடைய தோழர்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினோம். அதற்கு பிறகு ஜெயலலிதா அவர்கள் அந்த திட்டத்தை திறந்து வைத்தார் என்பது வரலாறு.

இருந்தாலும் இன்னும் சில கிராமங்களில் குடிநீர் வரவில்லை என்ற குறைபாடு இருக்கிறது. கவலைப்படாதீர்கள், 4 மாதங்களில் நாம் ஆட்சிக்கு வந்தவுடன், ஸ்டாலின் அந்தப் பணியை எடுத்து நிறைவேற்றுவான் என்ற அந்த உறுதியை நிச்சயம் உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும் அமைச்சர் இல்லை. ஆனால் அமைச்சர் என்கிற போர்வையில் ஒருவர் இருக்கிறார். அவர்தான் கே.பி.முனுசாமி. ஏற்கனவே அவர் அமைச்சராக இருந்தார். அமைச்சராக இருந்த நேரத்தில் அவரது பதவியை ஜெயலலிதா அவர்கள் பறித்து விட்டார்கள்.

ஏன் என்றால் ஒருமுறை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்துகொண்டிருந்த போது, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முனுசாமியைப் பற்றி பேசுகிறபோது, 30 பெர்சண்ட் அமைச்சர் என்று சொன்னார். அதுதான் அவருடைய யோக்கியதை. அதனால் அவர் பதவியை அடுத்த நாளே பறித்து விட்டார்கள். அந்த அம்மையார் இருந்தவரைக்கும் அவருக்கு பதவி கொடுக்கப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில் அவர் தானே ஒரு மந்திரி என்று நினைத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லை, இன்றைக்கும் அவர்கள் கட்சி உடைப்பதற்கும் அவர் தான் காரணமாக இருக்கப் போகிறார் என்று செய்திகள் வருகின்றன. அதுபற்றி நமக்குக் கவலையில்லை.

கல்விக் கடனை ரத்து செய்வோம் என்று நாம் நாடாளுமன்றத் தேர்தலின் போது சொன்னோம். ஆனால் நாம் மத்தியில் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஆனால் இப்போது சட்டமன்றத் தேர்தலின்போது சொல்கிறோம். நாம் ஆட்சிக்கு வந்தபிறகு நம் அரசின் சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தி, வற்புறுத்தி நிச்சயமாக, உறுதியாக கல்விக் கடனை ரத்து செய்வோம் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்விக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. இப்போது கூட தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்தும் சேர முடியாமல் தவித்த அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை தி.மு.க.வே ஏற்கும் என்று சொல்லி அதை செலுத்தி, பல பேருக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறோம். 1972-ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் வீட்டுமனைப் பிரச்சினை தீர்த்து, பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இப்போது இருக்கும் ஆட்சி அதை அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. மீண்டும் நாம் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு நிறைவேற்றித் தருவோம்.

அ.தி.மு.க. ஆட்சி நடந்தபோது, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று மறைந்த நாராயணசாமி அவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. அதன்பின் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில், எம்.ஜி.ஆர். ஆட்சி நடந்தபோது மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று போராடினீர்கள். தி.மு.க. ஆட்சியில் ஒரு பைசா கூட தர வேண்டாம். இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார் கலைஞர்.

அதேபோல விவசாயிகளினுடைய 7000 ரூபாய் கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்தது தி.மு.க. ஆட்சி என்பது உங்களுக்கு தெரியும். விவசாயிகளுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அந்தளவிற்கு தி.மு.க. முக்கியத்துவம் கொடுக்கும். ஆனால் இப்போது இருக்கும் ஆட்சி அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய போது, அதை ஆதரித்தது அ.தி.மு.க. அரசு.

ஆனால் இன்றைக்கு பழனிசாமி அவர்கள் பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு, விவசாயி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் பச்சைத் துரோகத்தை செய்துகொண்டிருக்கிறார், பழனிசாமி. இப்போது அடுத்த நிகழ்வாக உங்களால் தரப்பட்ட மனுக்கள் இந்தப் பெட்டியில் போடப்பட்டுள்ளன. நாம் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் இந்தப் பெட்டியில் இருக்கும் மனுக்களெல்லாம் பிரிக்கப்பட்டு, அந்த பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும். இப்போது இந்த பெட்டியை உங்களுக்கு முன்னால் பூட்டு போட்டு, சீல் வைக்கப் போகிறோம். இந்த சீல், நம்முடைய ஆட்சி உருவாகி, பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட அடுத்த நாள் திறக்கப்படும். இந்த மனுக்கள் அனைத்தும் பிரித்துப் பரிசீலிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 100 நாட்களில் அவற்றில் கோரப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவான் இந்த ஸ்டாலின் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நரிக்குறவர்களின் முன்னேற்றத்திற்கு மிகுந்த கவனம் செலுத்தி, திருச்சிக்கு அருகில் 1970ஆம் ஆண்டில் அவர்களுக்குத் தனியாக குடியிருப்புகளை நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்தான் கட்டித் தந்தார் என்பது வரலாறு. 2008 – 2009-ம் ஆண்டுகளில் நரிக்குறவர்களுக்கு தனி நலவாரியம் உருவாக்கியது தி.மு.க. ஆட்சி தான் என்பதை மறந்து விடக்கூடாது. நரிக்குறவர்களைப் பட்டியிலினச் சமுதாயத்தில் சேர்க்க வேண்டும் என்று சொன்னீர்கள். மாநிலங்களவையில் தி.மு.க. சார்பில் திருச்சி சிவா அவர்கள் அதை வலியுறுத்தி, வற்புறுத்தி பேசி இருக்கிறார். எனவே நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள். உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

கொரோனா என்பது கொடுமையான காலம். வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் கொடுமையில் மக்கள் தவித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதை பற்றி அரசாங்கம் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. அதைப் பயன்படுத்திக்கொண்டு கொள்ளையடித்த ஆட்சி தான் இந்த ஆட்சி. இவ்வாறு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு கழகத் தலைவர் அவர்கள் பதிலளித்துப் பேசினார். ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியை நிறைவு செய்து கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

இந்த ஸ்டாலினை நம்பியும், தி.மு.கழகத்தை நம்பியும் கையில் மனுக்களோடு வருகை தந்து சிறப்பித்திருக்கக்கும் அனைவருக்கும் முதலில் என்னுடைய அன்பான வணக்கம். என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இந்த நாள். இதே பிப்ரவரி 1ஆம் தேதி தான் 45 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 1976 ஆம் ஆண்டு அவசர நிலை பிரகடனம் சட்டத்தால் நான் கைது செய்யப்பட்ட நாள்.

ஒரு நாள் அல்ல ஒரு மாதம் அல்ல, ஓராண்டு காலம் நான் சென்னை மத்திய சிறையில் இருந்திருக்கிறேன். அப்போது எனக்கு வயது 23. அவசரநிலைப் பிரகடனத்தால் இந்தியா முழுதும் நெருக்கடி நிலை அமல்படுத்த நேரத்தில், அதை எதிர்த்து குரல் கொடுத்த ஒரே தலைவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் தான், திராவிட முன்னேற்றக் கழகம் தான்.

அப்போது டெல்லியிலிருந்து இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் சில தூதுவர்களை அனுப்பி வைத்தார்கள். வந்த தூதுவர்கள் கோபாலபுரத்திற்கு வந்தார்கள். தலைவருடைய இல்லத்தில் தலைவரைச் சந்தித்து, “உங்கள் ஆட்சி நீடிக்க வேண்டுமென்றால் அம்மையார் இந்திரா காந்தி அவர்கள் கொண்டு வந்த அவசர நிலைப் பிரகடனத்தை, நீங்கள் ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதை எதிர்க்கக் கூடாது. நீங்கள் எதிர்த்தால் அடுத்த விநாடி உங்கள் ஆட்சி கலைக்கப்படும்” என்றார்கள்.

தலைவர் கலைஞர் அவர்கள் சிரித்துக்கொண்டே, “நான் ஈரோட்டுச் சிங்கம் – பகுத்தறிவு பகலவன் – தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட காஞ்சித் தலைவன் அண்ணா அவர்களால் வளர்க்கப்பட்டவன். என் உயிரே போனாலும் ஜனநாயகத்திற்கு விரோதமான அவசர நிலை பிரகடனத்தை ஆதரிக்க முடியாது. அதை எதிர்த்தே தீருவேன்” என்று வந்த தூதுவர்களிடத்தில் சொல்லி அனுப்பினார். அடுத்த நாள் சென்னை கடற்கரையில் தமிழ்ப் பெருங்குடி மக்கள் அத்தனை பேரையும் அழைத்து, மேடையில் தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.

“அம்மையார் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலை பிரகடனத்தை நாங்கள் எதிர்க்கிறோம். அதை நாங்கள் ஆதரிக்க முடியாது. அந்த நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி இந்திய நாட்டில் இருக்கும் பல்வேறு தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அத்வானி, வாஜ்பாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அத்தனை தலைவர்களையும், உடனடியாக நீங்கள் விடுதலை செய்திட வேண்டும்” என்ற வேண்டுகோளை வைத்து தீர்மானத்தை நிறைவேற்றினார்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்தநாள் தமிழ்நாட்டில் தி.மு.கழகத்தின் ஆட்சி கலைக்கப்பட்டது. கலைக்கப்பட்ட அடுத்தநாள் காவல் துறையினர் கோபாலபுரத்திற்கு வருகிறார்கள். தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்தார்கள். கலைஞர் எழுந்து நின்று, “நான் தயார் என்னைக் கைது செய்து அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்லுகிறார்“. நாங்கள் உங்களைக் கைது செய்ய வரவில்லை. உங்களுடைய மகன் ஸ்டாலினைக் கைது செய்ய வந்திருக்கிறோம் என்று காவல்துறையினர் சொல்கிறார்கள்.

அப்போது தலைவர் கலைஞர் அவர்கள், “அவன் ஊரில் இல்லை. வந்தவுடன் அனுப்பி வைக்கிறேன்” என்று கூறியுள்ளார். அடுத்தநாள் மதுராந்தகத்தில் ‘முரசே முழங்கு’ என்ற நாடகத்தை முடித்து விட்டு நான் சென்னைக்கு வருகிறேன். இந்தச் செய்தி கேள்விப்பட்டு வேகவேகமாக வருகிறேன். வந்தவுடன் தலைவர் கலைஞர் அவர்கள் உடனடியாக கமிஷனருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு என் மகன் வந்துவிட்டான். அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்ல காவல்துறையினர் வருகிறார்கள். என்னுடைய மனைவி துர்கா கலக்கத்தோடு இருக்கிறார். காரணம், திருமணமாகி 5 மாதம் தான் ஆகிறது. “கவலைப்படாதே இதுவரை கிடைக்காத சிறை அனுபவம் எனக்கு கிடைத்திருக்கிறது” என்று அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நான் சிறைக்கு சென்றேன்.

நாங்கள் சிறைக்குச் சென்ற தேதியிலிருந்து பல கொடுமைகளுக்கு நாங்கள் ஆளாக்கப்படுகிறோம். அங்கு இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களை கண்மூடித்தனமாக காவலர்கள் தாக்குகிறார்கள். நான் மயங்கிய நிலையில் கீழே விழுந்து படுத்திருக்கிறேன். பூட்ஸ் கால்களால் என் வயிற்றின் மீது ஏறி என்னை மிதிக்க முயற்சிக்கிறார்கள். அப்போது தியாக மறவன் – என்னுடைய ஆருயிர் அண்ணன் சிட்டிபாபு அவர்கள் துடிதுடித்து என்னை அடிக்க வருபவர்களை கை எடுத்து கும்பிட்டு, என் மீது படுத்து நான் வாங்கயிருந்த அத்தனை அடிகளையும் அவர் வாங்கிக் கொள்கிறார். அவருக்குப் பலத்த காயம் ஏற்படுகிறது. அவரை மோசமான நிலையில் மருத்துவனைக்கு நாங்கள் அனுப்பி வைக்கிறோம். அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.

அண்ணன் சிட்டிபாபு அவர்கள் இறந்துவிட்டார் என்ற செய்தி எங்களுக்குக் கிடைக்கிறது. அதைக் கேட்ட நாங்கள் கதறிப் புலம்புகிறோம். அவர் உடலைப் பார்க்க முடியவில்லை. அந்த வாய்ப்பை இழந்தோம். அதைத்தான் இப்போது 2021 பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி நினைத்துப் பார்க்கும் சூழ்நிலையில் உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன். இன்றைக்கும் பல போராட்டங்களில் பங்கேற்று கைது செய்யப்படும் போது, அடையாளம் காட்டச் சொல்லும் போது மிசாத் தழும்பு என்று கூறி எனது கையில் இருக்கும் தழும்பைக் காட்டுவேன்.

50 ஆண்டுகளை இந்த இயக்கத்தில் ஒப்படைத்துக் கொண்டு, உழைத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலின்தான் உங்களுடைய குறைகளைக் கேட்க வந்திருக்கிறான். அதை நீங்கள் புரிந்து கொண்டு, உள்வாங்கிக்கொண்டு வந்திருக்கிறீர்கள். ஒருமுறை பத்திரிகையாளர்கள் கலைஞரிடம், “உங்கள் மகன் ஸ்டாலினிடத்தில் பிடித்தது என்ன? என்று கேட்டபோது, கலைஞர் அவர்கள் “உழைப்பு… உழைப்பு… உழைப்பு…” என்று சொன்னார்கள். உழைப்பின் சிகரமாக விளங்கிய கலைஞர் அவர்கள் ‘உழைப்பு’ என்ற பட்டத்தைக் கொடுத்திருக்கிறார்கள் என்றால் இதைவிட வேறு பட்டம் தேவையா?

இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்த கொண்டிருக்கும் இந்தக் கொடுமையான, அநியாயமான, கொடுங்கோல் தன்மை கொண்ட, கொள்ளையடிக்கும் ஒரு ஆட்சியாக இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகத்தான் நாம் கூடியிருக்கிறோம். இங்கே திரண்டு இருக்கிறோம். மனுக்களை எல்லாம் என்னை நம்பிக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறீர்கள். கொடுத்திருக்கிறீர்கள் என்று சொல்லவில்லை, என் முதுகில் ஏற்றி வைத்திருக்கிறீர்கள்.

உங்கள் நம்பிக்கைக்கு ஏற்றவகையில் அந்தப் பணிகளை, ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த நாள், இந்த பெட்டி திறக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து 100 நாட்களுக்குள் அனைத்துக் கோரிக்கைகளையும் முடித்துத் தருவேன். இது உறுதி… உறுதி… உறுதி… அதைச் செய்வான் இந்த ஸ்டாலின். விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.என ஸ்டாலின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here