வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்தில் நிவர் புயலாக உருவாகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடையத்  தொடங்கியுள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் கடந்த வாரம் உருவான காற்று சுழற்சி படிப்படியாக வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தமாக மாறியது. அந்த காற்றழுத்தம் மேலும் வலுப்பெறத் தொடங்கி காற்றழுத்த தாழ்வுப்  பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறத் தொடங்கியுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று புயலாக மாறி 25ம் தேதி சென்னைக்கும் காரைக்காலுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த புயலுக்கு ‘நிவர்’ என்று  பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த  தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக உருவாகும். தற்போது சென்னையிலிருந்து தென் கிழக்கு திசையில் 740 கி.மீ மையம் கொண்டுள்ளது.

இப்புயல் நாளை மறுநாள் நவம்பர் 25-ம் தேதி புயல் கரை கடக்கும் நேரத்தில் மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் புயல்காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் மீனவர்கள்  கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர். மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம்  அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

* ரெட் அலர்ட்
நிவர் புயல் கரையைக் கடக்கும்போது  தஞ்சாவூர், நாகப்பட்டினம் அதை ஒட்டிய பகுதிகளில் மிக கனமழை பெய்யும்  என்பதால் அந்த பகுதிகளுக்கு துறை ரீதியான சிவப்பு எச்சரிக்கையும், கரை  கடந்து செல்லும் வழியில் உள்ள  மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் துறை  ரீதியான மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

* மணிக்கு 140 கிமீ வேகம்
தமிழக கடலோர பகுதிகளில் நிவர் புயல் காரணமாக 23ம் தேதி முதல் கடலோரப்  பகுதியில் மணிக்கு 120 முதல் 130 கிமீ வேகத்தில் காற்று வீசும், சில  நேரங்களில் மணிக்கு 140 கிமீ வேகத்திலும் பலத்த காற்று வீசும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here