நிலநடுக்கம் வந்தால் கூட முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கும் -மத்திய அரசு

0
102

தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறதா என்பது பற்றி நாடாளுமன்றத்தில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவையில் (நவ-21) இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று இடுக்கி காங்கிரஸ் எம்.பி டீன் குரியகோஸ் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், முல்லைப் பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லைப் பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்தார்.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்று கேரள அரசு நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகிறது. மொத்த கொள்ளளவான 152 அடி வரை நீரை தேக்கி வைக்க தமிழக அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.

இதற்கிடையில் 142 அடி வரை நீரைத் தேக்கி வைக்க உச்ச நீதிமன்ற வல்லுநர் குழு அனுமதி அளித்த நிலையில், 136 அடி தான் அதிகபட்சம் என கேரள அரசு சட்டம் இயற்றிக் கொண்டது.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக – கேரள மாநிலங்களுக்கு இடையே தொடர்ந்து பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த சூழலில் அணை பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு கூறியிருப்பது தமிழக அரசுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதனைக் காரணம் காட்டி அணை நீர் மட்டத்தை உயர்த்துமாறு கேரள அரசிடம் வலியுறுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here