நிறுவனமயப்பட்ட ஒடுக்குமுறையைச் சீரழியுங்கள்

0
781

ரோஹித் வெமுலாவுக்கு மரணத்தைப் பரிசளித்தது, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் நடந்த நிறுவனரீதியான அடக்குமுறை; ஸ்தாபனங்கள் பாரபட்சங்களை ஊக்குவிக்கும்போது அது வெளியில் தெரியாத அளவுக்கு “நைசாக” நடக்கும்; அதை எதிர்த்து கூக்குரலிட வேண்டும்போலிருக்கும்; ஆனால் கத்தினால் குரல்வளையை நெரித்துவிடுவார்கள் என்ற பீதி அவ்வப்போது எட்டிப் பார்க்கும்; ரோஹித் வெமுலா தனது சங்கை நெரித்துத் தற்கொலை செய்துகொள்ளுமளவுக்கு அந்தப் பல்கலைக்கழக நிறுவனம் வன்முறை வெறியாட்டம் போட்டிருக்கிறது. ஜூலை 2015 முதல் ஜனவரி 2016 வரைக்கும் ஏழு மாத காலமாக ரோஹித் வெமுலாவுக்கு மாதாந்தர கல்வி உதவித் தொகை 25000 ரூபாய் வரவில்லை.

யாகூப் மேமனுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து ரோஹித் வெமுலா போராட்டம் நடத்தியது “தேசத்துரோகச் செயல்” என்று பல்கலைக்கழக நிர்வாகமும் மோடி அரசும் சேர்ந்து முடிவு செய்து செலவுக்குக் காசு இல்லாமலிருந்த ரோஹித் வெமுலாவை விடுதியிலிருந்தும் வெளியேற்றுகிறார்கள்; 26 வயதில் செலவுக்குக் காசு இல்லாமல் இருப்பதே பெரும் கொடுமை; ரோஹித்துக்கு இருப்பதற்கு இடமும் இல்லாமல் செய்தது நிறுவனமயப்பட்டுள்ள அடக்குமுறை; நிறுவனமயப்பட்ட ஒதுக்குதல் அல்லது தள்ளி வைத்தல்தான் இன்றைய தீண்டாமை; ஏழை, எளிய பின்னணியிலிருந்து வந்த இந்த நாட்டு மாணவர்களை பல்கலைக்கழக வளாகங்களிலும் சாதாரண மக்களைப் படித்து பட்டம் பெற்று வேலைக்கு வந்த பிறகு அரசு, தனியார் நிறுவனங்களிலும் இந்தத் தீண்டாமை தொடர்ந்து வதைக்கிறது.

சம உரிமை பெற்ற மானுடராக, சரிநிகர் சமமாக இந்தத் தேசத்தைக் கட்டியெழுப்புகிற உணர்வு தலித்துகளுக்கோ, முஸ்லிம்களுக்கோ, கிறிஸ்தவர்களுக்கோ வந்துவிடக்கூடாது என்பதில் இந்த வலதுசாரிகள் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார்கள்; ஜனநாயகம் ஆட்சி செலுத்த வேண்டிய நிறுவனங்களில் பாரபட்சம் ஆட்சி செலுத்துகிறது; நவநாகரிக கட்டடங்களுக்குள்ளிருந்து, நவநாகரிக உடைகளுக்குள்ளிருந்து விஷமாய் வெளிவரும் சாதிக்கொடுமை தன் கொடுங்கரங்களால் ரோஹித் வெமுலாக்களின் குரல்வளைகளை நெரிக்கிறது; இதை மீறி மேலெழும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது; ரோஹித் வெமுலாக்கள் நட்சத்திரங்களைக் கனா கண்டு விண்வெளிக்குச் சென்று வரும் இந்திய தேசம் வெகுதொலைவில் இல்லை. அது கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது. ஸ்தாபனமயப்பட்ட ஒடுக்குமுறையைச் சீரழிப்பதிலிருந்து அது தொடங்குகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்